ராணுவப் பயிற்சியின் பரிணாம வளர்ச்சி
கால்பந்து, கூடைப்பந்து, வாலிபால், ஹாக்கி, கிரிக்கெட், டென்னிஸ், பாட்மிண்டன், டேபிள் டென்னிஸ், தடகளம், ரக்பி எனப் பல்வேறு விளையாட்டுகள் இருந்தாலும், ஜிம்னாஸ்டிக்ஸ் விளையாட்டுக்கு என்று ஒரு தனிச்சிறப்பு உள்ளது. பலம், நெகிழ்வு தன்மை, சுறுசுறுப்பு, சமநிலை போன்றவை இதற்கு மிகவும் தேவைப்படுகின்றன. கை, கால், தோள்கள், முதுகு, நெஞ்சுப் பகுதி, அடிவயிறு பகுதி போன்றவை சீராக இருந்தால் மட்டும்தான் இந்த விளையாட்டில் சாதிக்க இயலும்.
உடலுக்கு காயம் ஏற்படக்கூடிய அபாயமான இந்த விளையாட்டை, பழங்காலத்தில் கிரேக்கா்கா்கள் அதிகம் ஈடுபட்டு வந்தனா். ஆா்டிஸ்டிக், ரித்மிக், டிராம்போலின்,டம்ப்ளிங், ஏரோபிக்ஸ், அக்ரோபேட்டிக்ஸ், பார்கா் ஜிம்னாஸ்டிக்ஸ் என்பதே அதிகளவில் பின்பற்றப்பட்டு வருகிறது. இதில் பெண்களுக்கு பிளோர், வால்ட், பார், பீம் மற்றும் ஆண்களுக்கு புளோர், வால்ட், வளையம், பொம்மல், பேரலல் பார், ஹாரிஸாண்டல் பார் போன்றவற்றில் போட்டிகள் நடத்தப்படுகின்றன.
உலகில் தோன்றிய பழைமையான விளையாட்டுகளில் ஒன்று என ஜிம்னாஸ்டிக்ஸைச் சொல்லலாம். கிறிஸ்து பிறப்பதற்கு பலநூறு ஆண்டுகளுக்கு முன்பே, உடலையும் மனதையும் ஒருங்கிணைப்பதற்காக கிரேக்க நாட்டினர் ஜிம்னாஸ்டிக்ஸ் விளையாட்டைக் கண்டுபிடித்து விளையாடி வந்ததாகக் கூறப்படுகிறது. ஆனால், ஒலிம்பிக் போட்டிகளில் நாம் காணும் நவீன ஜிம்னாஸ்டிக்ஸ் போட்டியை வடிவமைத்தவர்கள் என்று ஜெர்மனி நாட்டைச் சேர்ந்த ஜோஹன் கிறிஸ்டஃப்பிரட்ரிக் மற்றும் பிரட்ரிக் லட்விக் ஜான் ஆகியோரைக் கூறலாம்.
ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த ஆசிரியரான ஜோஹன் கிறிஸ்டஃப் பிரட்ரிக்,பண்டைய காலத்தில் இருந்த ஜிம்னாஸ்டிக்ஸ் விளையாட்டுகளைப் பற்றி ஆய்வு செய்து, அதில் மேலும் சிலவிஷயங்களைச் சேர்த்து ஒரு புத்தகத்தை 1793ம் ஆண்டு எழுதினார். ஜெர்மன் மொழியில் அவர் எழுதிய அந்தப் புத்தகம், பின்னர் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு வெளியானது.
ஆரம்பத்தில் புத்தக அளவிலேயே இருந்த நவீன ஜிம்னாஸ்டிக்ஸ் போட்டியை, செயல்முறையில் வடிவமைத்தவர் பிரட்ரிக் லட்விக் ஜான். ஜிம்னாஸ்டிக்ஸ் விளையாட்டின் தந்தை என்று கருதப்படும் இவர், 1800களில் புரூஷிய ராணுவத்தில் பணியாற்றி வந்தார். இவர் பணியாற்றிய காலத்தில் புரூஷிய ராணுவம் ஒரு போரில் தோல்வியைத் தழுவியது. இந்த தோல்வியில் இருந்து ராணுவ வீரர்களை மீட்கவும், அவர்களுக்கு சிறந்த உடற்பயிற்சியை அளிக்கவும் ஜான் கிறிஸ்டஃப் பிரட்ரிக் எழுதிய புத்தகத்தைப் பின்பற்றி, ராணுவ வீரர்களுக்கு ஜிம்னாஸ்டிக்ஸ் பயிற்சிகளை அளித்தார் பிரடரிக் லட்விக் ஜான். இதற்காக 1811ம் ஆண்டில் ஜிம்னேஷியம் ஒன்றை அமைத்த அவர், பாரலல் பார்ஸ், ரிங்ஸ் மற்றும் ஹை பார் உள்ளிட்ட ஜிம்னாஸ்டிக்ஸ் போட்டிகளுக்கான பயிற்சிகளை அளித்தார். வீரர்களின் உடல் மற்றும் மனநலத்தைப் பேணுவதற்கான பயிற்சிகளைத்தான் ஆரம்ப கட்டத்தில் அவர் அளித்தார். இது நடந்து பல தசாப்தங்களுக்குப் பிறகு 1881ம் ஆண்டில், ஜிம்னாஸ்டிக்ஸ் விளையாட்டு, அமைப்புரீதியான ஒரு விளையட்டாக உருவெடுத்தது. இந்த ஆண்டில் ஐரோப்பிய ஜிம்னாஸ்டிக்ஸ் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டு, ஜிம்னாஸ்டிக்ஸ் போட்டிகளுக்கான விதிகள் உருவாக்கப்பட்டன. நாளடைவில் இந்த அமைப்பு சர்வதேச ஜிம்னாஸ்டிக்ஸ் கூட்டமைப்பாக மாற்றப்பட்டது.
1896ம் ஆண்டு நடந்த ஒலிம்பிக் போட்டியில் முதன்முதலாக ஜிம்னாஸ்டிக்ஸ் போட்டி அறிமுகமானது. இருப்பினும், 1920ம் ஆண்டுவரை பெண்கள் ஜிம்னாஸ்டிக்ஸ் போட்டிகளில் பங்கேற்க அனுமதிக்கப்படவில்லை. ஒலிம்பிக்கில் நாம் இப்போது காணும் பல்வேறு விதமான ஜிம்னாஸ்டிக்ஸ் போட்டிகள் 1956ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியில்தான் அறிமுகப்படுத்தப்பட்டன. ஒலிம்பிக் போட்டிகளில் ஆரம்பத்தில் சோவியத் யூனியன் (ஒன்றிணைந்த ரஷ்யா) ஆதிக்கம் செலுத்தியது. தற்போது ரஷியா, அமெரிக்கா, சீனா, ஜப்பான், ருமேனியா, உக்ரைன், பிரிட்டன், பிரேசில் போன்றவை இதில் வலுவானவையாக உள்ளன.
பல்வேறு சாதனைகளுடன் ஜிம்னாஸ்டிக்ஸ் உலகின் முடிசூடா ராணியாகத் திகழ்கிறார் அமெரிக்காவின் 22 வயது இளம் வீராங்கனை சிமோன் பைல்ஸ். உலக சாம்பியன்ஷிப் வரலாற்றிலேயே அதிக பதக்கஙகளை வென்ற வீராங்கனையாக உள்ளார் பைல்ஸ். அவர், உலக சாம்பியன்ஷிப் போட்டிகளில் 19 தங்கம் உள்பட 25 பதக்கங்களை வென்றுள்ளார்.
1997 மார்ச் 14ம் தேதி அமெரிக்காவின் ஒஹியோ கொலம்பஸ் பகுதியில் பிறந்த சிமோன் பைல்ஸ், தற்போது டெக்ஸாஸ் ஸ்பிரிங்ஸ் பகுதியில் வசித்து வருகிறார். 142 செ.மீ உயரம் கொண்ட பைல்ஸ், கடந்த 2005ல் ஜிம்னாஸ்டிக்ஸ் பயிற்சியில் முதன்முதலாக ஈடுபட்டார். தொடா்ந்து 2013 உலக சாம்பியன் போட்டியில் தங்கம் வென்றது முதல் தற்போதுவரை பைல்ஸ் வாழ்க்கை ஏறுமுகத்திலேயே உள்ளது. இந்தியாவின் புகழ்பெற்ற ஜிம்னாஸ்டிக்ஸ் வீராங்கனையாக தீபா கர்மகார் விளங்குகிறார். கடந்த முறை நடந்த ஒலிம்பிக் போட்டியில் 4வது இடத்தைப் பிடித்த இவர் நூலிழையில் பதக்கத்தைத் தவறவிட்டார்.
ஜிம்னாஸ்டிக் போட்டிகள் ஆண்டுதோறும் நடைபெறும். ஆனால் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறும் ஆண்டுகளில் மட்டும் நடைபெறாது.