பகிர்வதில் உள்ளது மகிழ்ச்சி
கைகளில் இருந்த தானியங்களை பறவைகளுக்கு வீசிக்கொண்டு இருந்தார் ஞானகுரு. அப்போது, ‘’சுவாமி… ஒற்றைக் குடிசையிலும், நடைபாதையிலும் வாழும் ஏழைகள் சிரித்துக்கொண்டும், விளையாடிக்கொண்டும் மகிழ்ச்சியாக இருப்பதை பார்க்க ஆச்சர்யமாக இருக்கிறது, அது எப்படி அவர்களுக்கு மட்டும் எளிதில் சாத்தியமாகிறது..? ஏழைகளின் சிரிப்பில் இறைவனைக் காணலாம் என்று சொல்வது உண்மைதானா” என்று கேட்டார் மகேந்திரன்.
‘’காரில் பயணம் செய்வது சொகுசானதுதான். பங்களாவில் வசிப்பதும் உன்னதமானதுதான். ஆனால், அவற்றை எல்லாம் அனுபவிக்கும் மனநிலை முக்கியம். அந்த சந்தோஷத்தை அனுபவிக்கும் மனநிலையில் அவன் இருந்தாலும், அந்த சந்தோஷத்தை பகிர்ந்துகொள்ள பக்கத்தில் ஆட்கள் இருப்பதில்லை. 10 ஆயிரம் அடியில் கட்டப்பட்டுள்ள வீட்டில் நான்கு பேர் வசிக்கிறார்கள். ஆளுக்கொரு அறையில் வசிப்பதால், சின்னச்சின்ன சந்தோஷங்களை, எண்ணங்களை ஒருவருக்கொருவர் பரிமாறிக்கொள்வதும், சிரித்து விளையாடுவதும் சாத்தியமாவதில்லை. இது பணக்காரர்கள் விரும்பி ஏற்றிருக்கும் சிலுவை.
ஆனால், ஏழைகள் நெருக்கமாக வாழ்கிறார்கள். ஒருவரது நகைச்சுவை, பத்து பேருக்கு கேட்கிறது. எல்லோரும் சிரிக்கிறார்கள். ஒருவரையொருவர் தொட்டு பேசுகிறார்கள். ஒருவரையொருவர் நன்கு அறிந்திருக்கிறார்கள்.
ஏழை குழந்தை தலைகுப்புற தவறி விழுந்தால், அது அங்கே சிரிப்பாகிறது. அந்த குழந்தை கீழே விழுந்ததை விளையாட்டாக எடுத்துக்கொள்கிறது. மீண்டும் மீண்டும் அப்படி செய்வதற்கு முயற்சிக்கவும் செய்யும். அதுவே ஒரு பணக்கார குழந்தை விழுந்தால், பதட்டமாகி மருத்துவமனைக்குச் செல்கிறது. அது விளையாட்டாக இல்லாமல் விபத்தாக மாறிவிடுகிறது.
பெரும்பாலான ஏழைகள், இதுதான் வாழ்க்கை என்று, இருப்பதைக் கொண்டு வாழும் மனநிலைக்குப் பழகிவிடுகிறார்கள். எது கிடைத்தாலும் அதற்காக மகிழ்ச்சி அடைகிறார்கள். நாளையும் இப்படி ஏதேனும் கிடைக்கும் என்று நம்பிக்கையுடன் வாழ்கிறார்கள். மகிழ்ச்சி அடைவதற்குக் கிடைக்கும் எந்த ஒரு வாய்ப்பையும் அவர்கள் தவற விடுவதில்லை. துன்பத்திலும் மகிழ்ச்சியைக் கண்டடைகிறார்கள். அதனால்தான், ஏழைகள் வீட்டில் மரணம்கூட கொண்டாட்டமாகிறது.
பணக்காரர்களும் நடுத்தர மக்களும் எங்கே மகிழ்ச்சி என்று தேடிக்கொண்டு இருக்கிறார்கள். தன்னிடம் இருக்கும் பணத்தை பிறருக்கு பகிர்ந்துகொண்டால் மகிழ்ச்சி வரும் என்று தெரிந்தாலும் அதை செய்ய மாட்டார்கள். கடவுளுக்கு லட்சங்களில் காணிக்கை தர நினைப்பவர்கள், வீட்டில் வேலை செய்பவர்களுக்கு சம்பளம் கூடுதலாகத் தருவதில்லை.
ஆனால், ஏழைகளிடம் பகிர்ந்துகொள்ள பணம் இல்லை. ஆகவே, தன்னிடம் இருக்கும் அனுபவங்களை, அன்பை பகிர்ந்துகொள்கிறார்கள். அதில், மகிழ்ச்சி அடைகிறார்கள். ஆனால், ஏழ்மைக்கும் மகிழ்ச்சிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பதுதான் உண்மை. தன்னுடைய சின்னச்சின்ன சந்தோஷத்தையும் பகிர்ந்துகொள்ளும் மனப்பான்மை படைத்த எல்லோரும் மகிழ்ச்சியாக இருக்க முடியும். இந்த விஷயத்தில் ஏழைகள்தான் பணக்காரர்களாக இருக்கிறார்கள்…” என்றார் ஞானகுரு.
இந்த பதிலே மகேந்திரனுக்கு மகிழ்ச்சியாக இருந்தது.