• Home
  • தமிழ் லீடர்
  • எடப்பாடி பழனிசாமி இப்படி தூங்கினால் எப்படி ஜெயிப்பது?

எடப்பாடி பழனிசாமி இப்படி தூங்கினால் எப்படி ஜெயிப்பது?

Image

கட்சிக்குள் வலுக்கும் எதிர்ப்பு

எதிர்க்கட்சித் தலைவராக இருக்கும் எடப்பாடி பழனிசாமியின் செயல்பாடுகள் அவரது கட்சி நிர்வாகிகளிடம் கடும் அதிருப்தி ஏற்படுத்தியிருப்பதாக சொல்லப்படுகிறது. 2026 தேர்தலில் ஜெயிப்பதற்கான எந்த யுக்தியும் அவரிடம் இல்லை என்று சொந்தக் கட்சி நிர்வாகிகளே வருத்தம் தெரிவிக்கிறார்கள்.

இதுகுறித்து பேசிய மூத்த நிர்வாகி, ‘ஒரு பக்கம் பாஜக, இன்னொரு பக்கம் நாம் தமிழர் என இரு கட்சிகளும் சம்பந்தமே இல்லாமல் திமுகவை கடுமையாக எதிர்க்கும் போது, அதிமுக தலைமை அறிக்கை மட்டுமே வெளியிட்டுக் கொண்டு, அது ஒன்றே போதும் என்று நினைப்பது களத்தில் எப்படி உதவும்?

அதிமுகவின் கொள்கை என்பதே திமுக எதிர்ப்பு என்பது தான் என்கிற போது, வெறும் அறிக்கைகளை மட்டுமே வெளியிட்டுக் கொண்டு இருப்பதால் ஒரு பயனும் இல்லை. மத்திய பட்ஜெட் விவகாரத்தில் மாநிலங்களவையில் அதை எதிர்த்து பேசியதை தாண்டி, பொதுவெளியில் என்ன எதிர்ப்பை அதிமுக பதிவு செய்திருக்கிறது என்றும் பலர் கேட்கிறார்கள்.

கட்சி வெல்ல வேண்டும் எனில், இதை எல்லாம் செய்ய வேண்டியது அவசியம். தேர்தலுக்கு இன்னும் ஒன்றரை ஆண்டுகள் தான் இருக்கிறது. திமுக தன்னை promote செய்ய, குறிப்பாக ஸ்டாலின் என்கிற தனிநபரை promote செய்ய அமைப்பு ஒன்றை உருவாக்கி, அதில் பல தொழில்நுட்ப பணியாளர்களை சேர்த்து, சமூக வலைதளத்தில் மட்டுமல்லாது, களத்திலும் பணியை இப்போதே தொடங்கிவிட்டார்கள்.

திமுக அரசுக்கு எதிராக மிகப்பெரிய அதிருப்தி மக்களிடம் இருக்கிறது. திமுகவுக்கு எதிராக வெல்ல வேண்டியது அவசியம் எனில், எதிர்க்கட்சி பலமான எதிர்ப்பை பதிவு செய்வது அவசியம். இந்த பலமான எதிர்ப்பை வெளிப்படுத்தினால் மட்டும் தான் மக்கள் மனதில் கட்சி தொடர்ந்து இருக்கும். பிரச்சனை வரட்டும், போராடலாம் என்று உட்கார்ந்துக்கொண்டு இருப்பது, சிவகார்த்திகேயன் படத்தில் வரும், “பாய்ன்ட் வரட்டும் பேசலாம்” என்கிற டயலாக் போல தான் இருக்கும். அது எந்த அளவிலும் அதிமுகவுக்கு உதவாது.

சசிகலாவை இணைக்க வேண்டாம், ஓ.பி.எஸ்-ஐ இணைக்க வேண்டாம், வைத்திலிங்கத்தை இணைக்க வேண்டாம். ஆனால் ஈ.பி.எஸ் தான் பொதுச்செயலாளர், அதை ஏற்றுக்கொண்டு கட்சியில் இணைபவர்கள் தாராளமாக இணையலாம் என்கிற கருத்தை, இணைப்பு குறித்த கேள்விகள் எழும்போது எல்லாம் தொடர்ந்து முன்வைத்தால், இணைப்பு குறித்த கேள்வியே காணாமல் போய்விடும். ஆனால் அதைவிடுத்து, குறிப்பிட்ட சிலரை தவிர்த்து, குறிப்பிட்ட சிலரை தவிர்த்து என்று சொல்வதால், அது ஊடகங்களுக்கு இன்னொரு விவாதத்திற்கு தயாராக மட்டுமே உதவுகிறது.

ஆம்ஸ்ட்ராங் படுகொலை விவகாரம் உட்பட சட்டம் ஒழுங்கு விவகாரம் குறித்து ஒரே ஒரு போராட்டம், அதுவும் சென்னையிலோ, கோவையிலோ, மதுரை அல்லது திருச்சியிலோ மொத்தமாக, கூட்டமாக நடத்தலாம் அல்லது பேரணி நடத்தி அரசுக்கு அழுத்தம் தரலாம். கூட்டணிக் கட்சிகளையும் இணைத்து நடத்தினால், அதிமுகவை விமர்சித்து வரும் அரசியல் விமர்சகர்கள் என்கிற பெயரில் பணத்தை வாங்கிக்கொண்டு பேசி வரும் நபர்களுக்கு ஒரு முக்கியச் செய்தியை கூட வெளிப்படுத்த அது உதவும்.

முந்தைய அதிமுக அரசு தொடர்ந்த சொத்துக்குவிப்பு வழக்குகளில் இருந்து திமுக அமைச்சர்கள் விடுவிக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக இரு அமைச்சர்கள் மீதும், அரசு மீதும், அவர்கள் விடுவிக்கப்பட்ட விதம் மீதும் உயர்நீதிமன்றம் பல்வேறு கருத்துக்களை முன்வைத்து இருக்கிறது. அது தொடர்பாக கட்சியின் மூத்த தலைவர்கள் தனியே ஒரு செய்தியாளர் சந்திப்பை நடத்தி பேசி, சட்டத்தை வளைத்து, தங்களுக்கு ஏற்றார் போல வழக்குகளில் இருந்து வெளிவந்துக்கொள்ளலாம் என திமுக நினைக்கிறது என்பதை போட்டுடைக்கலாம். ஆனால் அதைக் கூட செய்யவில்லை.

ஈ.பி.எஸ் அவர்கள் முதல்வராக இருந்த போது, அரசுக்கு எதிராக நீதிமன்றம் தெரிவித்த ஒவ்வொரு கருத்தையும் பொதுவெளியில் வந்து அப்போதைய எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் விமர்சித்து வந்தார். அப்படியான ஒரு எதிர்ப்பை இன்று வெளிப்படுத்த வேண்டிய இடத்தில் அதிமுக இருந்தும், கோட்டைவிடுவது வருத்தமளிக்கிறது. கட்சியின் வழக்கறிஞர் பிரிவினர் ஊடகங்களில் பேசிக் கொள்வார்கள் என்றால், அவர்களால் வழக்கை பற்றி மட்டுமே பேச முடியும். அரசியல் ரீதியிலான பலமான எதிர் கருத்துக்களை அவர்களால் எப்படி முன்வைக்க முடியும்?

2026 தேர்தல் சுலபமான தேர்தலாக நிச்சயம் இருக்கப்போவது இல்லை. நான்கு முனை, ஐந்து முனைப் போட்டி என்று கூட களம் இருக்கலாம். அப்படி ஒரு களம் இருக்கும்பட்சத்தில், இளைஞர்களின் வாக்குகள் நிச்சயம் பிளவுப்படும். அறிக்கை மட்டுமே கட்சியையும், கட்சியின் தலைமையையும் நிலைநிறுத்த உதவாது. பொதுச்செயலாளர் எல்லா விவகாரத்திற்கும் பேச முடியாது எனில், மூத்த தலைவர்கள் திமுகவை எதிர்த்து பேச முன்வர வேண்டும்.

கடுமையான விமர்சனங்களை, அன்றாடம் நடக்கும் பிரச்சனைகள், அரசின் நிர்வாகம் குறித்த நீதிமன்றத்தின் கேள்விகளை பற்றி ஊடகங்களின் முன்பு மூத்த தலைவர்கள் பேச வேண்டும். அடுத்த ஓராண்டுகளில் நீங்கள் காட்டும் எதிர்ப்பு தான், 2026ல் எந்த மாதிரியான வெற்றியை பெற முடியும் என்பதை முன்கூட்டியே காட்டும். இன்னமும் தூங்கிக்கொண்டே இருந்தால் வேறு தலைமையைத் தேட வேண்டியிருக்கும்’’ என்கிறார்கள்.

எடப்பாடி பழனிசாமியிடம் பதில் இருக்கிறதா?

Leave a Comment