பசியோடு இருக்கும் குழந்தை எப்படி படிக்கும்..?

காமராஜர் நினைவலைகள் – 11

பெருந்தலைவர் காமராஜர் என்றதுமே அவர் கொண்டுவந்த மதிய உணவுத் திட்டமே அனைவருக்கும் ஞாபகம் வரும். காமராஜர் அறிமுகப்படுத்திய பள்ளி பகல் உணவுத் திட்டமே, பின்னர் மதிய உணவுத் திட்டம் என்று அழைக்கப்படுகிறது.

இந்த திட்டம் தமிழ்நாட்டின் கல்வி வரலாற்றில் மிகப் பெரிய சமூகப் புரட்சிகளில் ஒன்று என்றாலும், இந்தத் திட்டம் ஒரே நாளில் உருவானதல்ல. பசி, பஞ்சம், பட்டினி, படிப்பு குறித்த காமராஜரின் அனுபவங்களும், எதிர்காலச் சிந்தனையுமே இந்த திட்டம் கொண்டுவருவதற்குக் காரணமாக அமைந்தன.

வேலைக்குச் சென்ற குழந்தைகள்

1954-ல் காமராஜர் சென்னை மாநிலத்தின் (தற்போதைய தமிழ்நாடு) முதலமைச்சராகப் பொறுப்பேற்றபோது, கிராமப்புறங்களில் ஏராளமான குழந்தைகள் பள்ளிக்குச் செல்லாமல் வேலைக்குச் செல்வதை அவர் நேரில் கண்டார்.

படிக்கவேண்டிய வயதில் வேலைக்குச் செல்லும் அவலம் அவரது நெஞ்சை உலுக்கியது. அதற்கு குடும்ப வறுமையே முக்கியமான காரணம் என்பதை அறிந்தார். வேலை செய்தால்தான் கஞ்சி என்ற நிலைமை இருந்ததால், பசியால் குழந்தைகள் பள்ளிக்கு வர முடியாத நிலை இருந்தது.

அதனால் பள்ளிக்குச் சென்று படிப்பதை விட வேலை செய்தால் குடும்பத்துக்கு உதவும் என்றே பெற்றோர் கருதினார்கள். மேலும், படித்து என்ன செய்யப்போகிறார்கள், நம்மால் பெரிய அளவுக்குப் படிக்கவைக்க முடியாது என்ற எண்ணமும் பெற்றோரிடம் இருந்தது. மேலும், வீட்டுக்கு அருகில் பள்ளி, ஆசிரியர்கள் இல்லை.

இத்தனை சிக்கல்கள் இருக்கும் நிலையில் பிள்ளைகளை எப்படி பள்ளிக்கு வரவழைப்பது என்ற கேள்வி காமராஜ் சிந்தனையில் எழுந்தது. அப்போது காமராஜருக்கு உதித்த கேள்விதான், பசியோடு இருக்கும் குழந்தை எப்படி படிக்கும்?.

இந்தக் கேள்விக்கான பதில்தான் ஒரு மகத்தான திட்டமாக உருமாறியது.

  • நாளை பார்க்கலாம்.

Leave a Comment