- நீதிமன்றம் சாட்டையடி
உடல் நலமில்லாத நபரை சந்திக்க ஹார்லிக்ஸ் வாங்கிச் செல்வதும், வளரும் பிள்ளைகள் இருக்கும் வீட்டுக்கு பூஸ்ட், போர்ன்விட்டா வாங்கிச் செல்வதும் காலகாலமாக மக்கள் நம்பிக்கையாக இருக்கிறது. ஆனால், இவை எல்லாமே அந்த நம்பிக்கைக்குத் தகுதியான ஆரோக்கிய பானங்கள் அல்ல என்பது உறுதிபடுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஊட்டச்சத்து நிபுணர் டாக்டர் கவுசல்யா, ‘அதிக விலை வைத்து விற்பனை செய்யப்பட்டும் போன்விட்டா, ஹார்லிக்ஸ், புஸ்ட் போன்றவை ஆரோக்கிய பானங்கள் அல்ல என்று அந்த நிறுவனங்களே ஒப்புக்கொண்டுள்ளன. இந்த பானங்களில் ஊட்டச்சத்துக்கள் போதுமான அளவு இல்லை என்பதால் இவற்றை ஆரோக்கிய பானங்கள் என்று கூறவே முடியாது.
அதேநேரம், இந்த பானங்களில் நிரம்பியிருக்கும் இனிப்பு குழந்தைகள் மட்டுமின்றி பெரியவர்களையும் தினமும் குடிப்பதற்கு அடிமையாக்கி விடுகிறது. ஒரு கட்டத்தில் இவற்றைக் குடிக்காமல் இருக்க முடியாத நிலைக்கு ஆளாகிறார்கள். இதுவும் ஒரு வகையில் போதைக்கு அடிமையாகும் நிலைக்கு ஒப்பானது ஆகும்.
ஹார்லிக்ஸ், பூஸ்ட், போர்ன்விட்டா போன்றவற்றில் மால்ட் அதிகம் உள்ளது. மால்ட் கலந்த பானங்கள் தீவிர பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்களாக மட்டுமே கருதப்பட வேண்டும். மேலும், ஹார்லிக்ஸ், பூஸ்ட், போர்ன்விட்டா போன்றவைகளில் சர்க்கரையின் அளவு, பரிந்துரைக்கப்பட்ட அளவைக் காட்டிலும், 3 மடங்கு அதிகம் இருக்கிறது.
ஆனால், இதனை அறியாமல் இந்த சர்க்கரை நிரம்பிய பானங்களை ஆரோக்கிய பானமாக நினைத்து அதிகம் எடுத்துக்கொள்வதால் பல்வேறு உடல்நலக் குறைபாடுகள் உண்டாகின்றன. குறிப்பாக குழந்தைகளுக்கு உடல் எடை அதிகரிப்பு, உடல் பருமன், சர்க்கரை நோய் போன்றவை உருவாகின்றன.
இப்போது விற்பனையில் இருக்கும் பல்வேறு ரக பிராண்ட் பிஸ்கெட்டில்லும் அளவுக்கு மீறி சர்க்கரையும் உப்பும் உள்ளது என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள். எனவே, பிஸ்கெட் மற்று ஆரோக்கிய பானங்கள் குடிப்பது ஆரோக்கியத்தை பாதிப்பது மட்டுமல்லாமல் ஆயுட்காலத்தையும் குறைக்கலாம்’’ என்று கூறுகிறார்.
’ஃபுட் பார்மர்’ என்ற பெயரிலான இன்ஸ்டாகிராம் பிரபலம் ஒருவர் இந்த கேள்வியை முதலில் எழுப்பினார். போர்ன்விட்டா ஒரு ஆரோக்கிய பானமே அல்ல என்றும், அதில் அதிகளவு சர்க்கரை உள்ளதால் அவற்றை அருந்தும் குழந்தைகளுக்கு மிகைபருமன் முதல் டைப் 2 நீரிழிவு வரை பாதிப்புகள் ஏற்பட வாய்ப்பு உருவாகிறது என்று எச்சரித்தார்.
இதனை கடுமையாக மறுத்த காட்பரீஸ் போர்ன்விட்டா நிறுவனங்கள், அந்த் இன்ஸ்டாகிராம் பிரபலத்துக்கு எதிராக சட்டபூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்வதாக அறிவித்தது. இதனையடுத்து, பொதுவெளியில் மன்னிப்பு கோருவதாக அறிவித்த ‘ஃபுட் ஃபார்மர்’ தனது வீடியோவை நீக்குவதாகவும் தெரிவித்தார். ஆனால் அவர் உருவாக்கிய பொறி பெரு நெருப்பாக வளர்ந்தது.
தேசிய குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் (NCPCR) தனது விசாரணையில் `உணவுப் பாதுகாப்பு மற்றும் தரநிலைகள் சட்டம், 2006 என்ற சட்டத்தின் படியும் (FSS Act 2006) `மொண்டலேஸ் இந்தியா ஃபுட்ஸ் பிரைவேட் லிமிடெட்’ தனியார் நிறுவனம் வழங்கிய விதிகளின்படியும் இவை ஆரோக்கிய பானங்கள் என்பது வரையறுக்கப்படவில்லை என்பது உறுதி செய்யப்பட்டது.
போர்ன்விட்டாவில் உள்ள சர்க்கரை, நிர்ணயிக்கப்பட்ட அளவைவிட அதிகமாக இருப்பது கண்டறியப்பட்டு அந்த நிறுவனத்துடன் பொதுநல அமைப்புகள் பேசியபோது, அவர்கள் தங்கள் தயாரிப்பு ஆரோக்கிய பானம் அல்ல என்று ஒப்புக்கொண்டு எழுத்துப்பூர்வமாக ஒப்புக்கொண்டனர். எனவே குளிர்பானம், ஆற்றல் பானம் என எந்த வகையில் இருந்தாலும் எந்தவொரு உணவுப் பொருளையும் ஆரோக்கிய பானம் என்ற பெயரில் விற்க முடியாது.
கடைசியில் போர்ன்விட்டாவை ஆரோக்கிய பானங்கள் என்ற வகையிலிருந்து நீக்குமாறு, இ-காமர்ஸ் தளங்களுக்கு மத்திய அரசு உத்தரவிட்டது. இதனையடுத்து, போர்ன்விட்டா அதிகாரபூர்வமான ஆரோக்கியபானம் என்ற அடையாளத்தை துறந்தது. இந்த வரிசையில் தற்போது ஹார்லிக்ஸும் இணைந்திருக்கிறது
பொதுவாக உணவு அல்லது பானங்களில் எவ்வளவு சதவீதம் சர்க்கரை அல்லது உப்பு பயன்படுத்தப்படுகிறது என்பதை விளம்பரங்களில் குறிப்பிட வேண்டும், ஆனால், அப்படி யாரும் செய்வதில்லை. தினமும் எடுத்துக்கொள்ளும் உணவில் தீவிரமாக பதப்படுத்தப்பட்ட உணவின் பங்கு 10 சதவீதத்திற்கு மேல் இருந்தால், அது சர்க்கரை நோய், புற்றுநோய், இதய நோய், உடலில் மனச்சோர்வு போன்ற நோய்களையும் தொற்றாத நோய்களையும் உருவாக்கும் வாய்ப்பு இருப்பதாகக் கருதப்படுகிறது.
இதுபோன்ற பானங்கள் விளம்பரங்கள் ஒளிபரப்பப்படுவது செய்வதை குறைக்க அல்லது நிறுத்த வேண்டும். அப்போது தான் இதனை வாங்கும் மக்கள் எண்ணிக்கை குறையும். லேபிள்களில் சர்க்கரை அளவு, உப்பு அளவு போன்றவை எழுதப்பட்டிருந்தாலும் அவற்றைப் படித்துப் பார்க்கும் அக்கறையும் விழிப்புணர்வும் மக்களிடம் இன்னமும் வரவில்லை. ஆகவே, இவற்றின் மீது எச்சரிக்கை லேபிள் ஒட்டுவது மட்டுமே சரியான தீர்வு என்கிறார்கள்.
சிகரெட் அட்டையில் எச்சரிக்கை வாசகம், புகைப்படம் அச்சட்டிருப்பது போன்று இந்த பானங்களிலும், சர்க்கரை, உப்பு, கொழுப்பு போன்றவை அதிகம் உள்ளன. இது உடல் நலனுக்குப் பாதிப்பு உருவாக்கும் என்று எழுதப்பட வேண்டும். அப்போது தான் மக்களுக்கு விழிப்புணர்வு உருவாகும்.
இளம் வயதினர் பாக்கெட், டின் என பதப்படுத்தப்பட்ட அத்தனை பொருட்களின் பயன்பாட்டுகளையும் நிறுத்துவதே ஆரோக்கியத்திற்கான வழி.
சர்க்கரையை எப்படி அளக்கிறார்கள்..?
பொருளின் 100 கிராம் அளவை வைத்து உணவு லேபிளிங் செய்யப்படுகிறது. உதாரணமாக, ஒரு உணவுப் பொருள் 100 கிராம் என்றால் அதில் பத்து கிராமுக்கும் குறைவான அளவு சர்க்கரை இருக்க வேண்டும். ஐந்து கிராமுக்கு குறைவாக இருந்தால் அது குறைந்த சர்க்கரை அளவு எனப்படும். சர்க்கரை அளவு 0.5 ஆக இருந்தால் அதை `சுகர் ஃப்ரீ’ என்று சொல்லலாம்.