என்ன செய்தார் சைதை துரைசாமி – அத்தியாயம் 70
அம்மா உணவகத்தை லாபமாக நடத்துவதற்கு பல்வேறு சாத்தியக்கூறுகளையும் ஆய்வு செய்து அறிக்கை தயார் செய்தார் மேயர் சைதை துரைசாமி. அதோடு, அம்மா உணவகத்திற்கு ஸ்பான்சர் செய்வதற்கு ஆர்வம் காட்டிய வி.ஐ.பி.கள், கார்ப்பரேட் நிறுவனங்கள், தொழில் அதிபர்கள் ஆகியோரையும் அடையாளம் கண்டு பட்டியல் தயாரித்தார்.
இது மட்டுமின்றி மேயர் சைதை துரைசாமி இன்னொரு புதுமையான திட்டத்தை செயல்படுத்துவதற்கு ஆர்வமாக இருந்தார். அதாவது, ஏழை, எளிய மக்கள் பயன்படும் வகையில் அம்மா உணவகம் செயல்படுவது போன்று, நடுத்தர மக்கள் குடும்பத்தோடு அமர்ந்து சாப்பிடும் வகையில் நியாயமான கட்டணத்தில் ஹைடெக் உணவகம் தொடங்க விரும்பினார்.
நடுத்தர வர்க்கத்தினர் குடும்பத்தில் கணவன், மனைவி ஆகிய இருவரும் வேலைக்குச் செல்லும் சூழல் நிலவுகிறது. நேர நெருக்கடி, வேலைச் சுமை ஆகியவற்றைக் குறைக்கும் வகையில் குடும்பத்தோடு ஹோட்டலுக்குச் செல்லும் பழக்கம் நடுத்தரவர்க்கத்தினரிடம் அதிகரித்துவருகிறது. அவர்கள் குடும்பத்தோடு ஆடம்பர ஹோட்டலுக்குச் செல்லும்போது, அளவுக்கு அதிகமாக செலவு ஆகிறது. மேலும், செலவழிக்கும் பணத்துக்கு ஏற்ற ஆரோக்கிய உணவும் கிடைப்பதில்லை.
எனவே, நடுத்தர மக்களுக்கு நன்மை செய்யும் வகையில், ஆடம்பர உணவகம் பாணியில் நியாயமான விலையில் அனைத்து உணவுப் பொருட்களும் கிடைக்கும் வகையில் ஹைடெக் உணவகம் அமைக்க ஆசைப்பட்டார்.
அலுவல் ரீதியாக முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்த மேயர் சைதை துரைசாமி, அம்மா உணவகத்தை லாபகரமாக நடத்துவதற்கான வழிகள் குறித்தும் நடுத்தர மக்களுக்கு உணவகம் அமைப்பது குறித்தும் அறிக்கை தயார் செய்துவருவது குறித்துத் தெரிவித்தார். மேயர் துரைசாமியின் சிந்தனைகளைப் பாராட்டிய முதல்வர் ஜெயலலிதா, ‘’மிகவும் நல்ல யோசனைகள், கண்டிப்பாக எல்லாவற்றையும் நிறைவேற்றுவோம்’’ என்று உறுதி கொடுத்தார்.
ஆனால், முதல்வர் ஜெயலலிதா உடல் நிலை மற்றும் மேயர் பதவி காலம் முடிந்து போனதால், இந்த திட்டங்களை செயல்படுத்த முடியாமல் போனது.
- நாளை பார்க்கலாம்.