• Home
  • யாக்கை
  • முளைகட்டிய பயிறுகளில் ஒளிந்திருக்கும் நோய்கள்

முளைகட்டிய பயிறுகளில் ஒளிந்திருக்கும் நோய்கள்

Image

மருத்துவ மூடநம்பிக்கை

முளை கட்டிய பயிறுகளை முழுமையான ஆரோக்கிய உணவாக மக்கள் கருதுகிறார்கள். இது குறித்த தெளிவான விளக்கம் அறிவோம்.

சூப்பர் மார்க்கெட்களில் இப்போது முளைகட்டிய பயிறுகள் பாக்கெட்களில் விற்பனை செய்யப்படுகின்றன. விலை அதிகம் என்றாலும் ஆரோக்கியத்திற்கு நல்லது என்று பலரும் போட்டி போட்டுக்கொண்டு வாங்குகிறார்கள்.

அமோகமாக விற்பனையாகும் இந்த முளைத்த பயிறு எப்படி உருவாக்கப்படுகிறது என்பதை அறிந்துகொள்வோம். பயிறுகளை நீரில் ஊறவைத்து, அதனை சில மணி நேரங்கள் அல்லது நாட்கள் வெப்பநிலையில் வைக்கும்போது முளை (sprout) ஏற்படுகிறது. இந்த செயல்முறை காரணமாக பைடிக் ஆசிட் போன்ற ஊட்டச்சத்து எதிர்ப்புத் தன்மை குறைகிறது. அதனால் உணவுப் பொருட்களின் சத்துக்களை உடல் எளிதாக உறிஞ்ச முடிகிறது. அதோடு புரதம், இரும்புசத்து, கால்சியம், ஜிங்க் போன்றவை அதிகம் உறிஞ்சப்படக்கூடிய நிலையில் இருக்கும். மேலும் நார்ச்சத்து மற்றும் என்சைம்கள் உடல் செரிமானத்திற்கு பெருமளவு உதவுகின்றன.

முளை கட்டிய பயிறுகள் குறைந்த களோரி மற்றும் உயர் ஃபைபர் கொண்டவை. இவை ரத்தத்தில் உள்ள குளுக்கோஸ் அளவை நன்கு கட்டுப்படுத்துகிறது. எனவே டைப் 2 நீரிழிவு நோயாளிகளுக்கும், உடல் பருமன் உள்ளவர்களுக்கும் மிகுந்த பயனளிக்கிறது. இதில் கொழுப்பு மிகவும் குறைவு என்பதால் ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தி இதயத்துக்கு ஆரோக்கியம் தருகிறது.

முளை கட்டும்போது உருவாகும் உயிர் என்சைம்கள் (digestive enzymes) செரிமானத்தை மேம்படுத்துகின்றன. இது மலச்சிக்கல், வாய்வு போன்ற பிரச்சனைகளைக் குறைக்கிறது. முளைத்த பயிறுகளில் வைட்டமின் சி, ஏ  மற்றும் ஆன்டி-ஆக்ஸிடெண்ட்கள் அதிகம் உள்ளதால், முளை பயிறுகள் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்துகின்றன. முளை பயிறுகளில் உள்ள புளியூவோனாய்டுகள் (polyphenols), நோய் எதிர்ப்பு மற்றும் நுரையீரல், கல்லீரல் பாதுகாப்பில் முக்கியப் பங்காற்றுகின்றன.

ஒளிந்திருக்கும் ஆபத்து

அதேநேரம், முளை கட்டிய பயிறுகள் பாக்டீரியா வளர்ச்சிக்கு உகந்த சூழலில் வளர்கின்றன. எனவே, இவற்றை நன்றாக கழுவி, சுத்தமான முறையில் தயாரித்து சமைத்து உட்கொள்வது அவசியம். இவற்றை பச்சையாக சாப்பிடும்போது இகோலி, சல்மோனெல்லா போன்ற தொற்று வாய்ப்புகள் இருக்கக்கூடும்.

முளை கட்டும் போது பயறு வகைகள் ஒரே நேரத்தில் ஈரமாகவும் வெப்பமாகவும் வைக்கப்படுவதால் நோய் பாக்டீரியா வளர்ச்சி உண்டாகிறது. பொதுவாக கர்ப்பிணிப் பெண்கள், வயதானவர்கள், குழந்தைகள் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்களுக்கும் இது தேவையில்லாத சிக்கலை உருவாக்கக்கூடும். நீண்ட காலம் நீரிழிவு, ரத்த அழுத்தத்திற்கு மருந்துகள் எடுத்துவரும் நோயாளிகளிகளுக்கு இவை ஏற்ற உணவு இல்லை.

சிலருக்கு பயிறு வகைகளில் உள்ள புரத அலர்ஜி இருக்கலாம். அவர்களுக்கு வயிற்று வலி, குடல் புண், செரிமானப் பிரச்னைகள் ஏற்படுவதற்கு வாய்ப்பு உண்டு. முளை கட்டுவதற்கு பூச்சி தாக்கிய பயிறுகளை பயன்படுத்தினால், அது உடலுக்கு தீங்கு விளைவிக்கலாம். எனவே முளை கட்டிய பயிறுகளை பச்சையாக சாப்பிடுவது ஒரு போதும் ஆரோக்கியமான செயல் அல்ல.

முளைத்த உருளை

முளைத்த பயிறுகளில் நிறைய ஆரோக்கியமும் குறைந்த ஆபத்தும் இருக்கிறது. அதேநேரம், முளை விட்ட உருளைக் கிழங்கு அதிக ஆபத்தான உணவாகக் கருதப்படுகிறது. உருளைக் கிழங்கு செடியாக வளரும் சூழலில் க்ளைகோலாய்ட்ஸ் (glycoalkaloids) என்ற நஞ்சை அதிகமாக உற்பத்தி செய்கிறது. இந்த செயல் இயற்கையாக உருவாகும் நச்சுத்தன்மை, செடிகளை பூஞ்சைகள் மற்றும் பூச்சிகளின் தொற்றில் இருந்து பாதுகாக்க உதவுகிறது. எனவே முளை விட்ட உருளைக்கிழங்கு மற்றும் பச்சை நிறத்தில் தோற்றமளிக்கும் உருளைக் கிழங்கு போன்றவை நச்சுத்தன்மை கொண்டதாகக் கருதப்படுகிறது.

முளைவிட்ட உருளைக் கிழங்கு சாப்பிடும் நபர்களுக்கு வயிற்றுப்போக்கு, வாந்தி மற்றும் கடுமையான வயிற்று வலி, தலைசுற்றல், மயக்கம், குழப்பம், பலவீனமாக உணருதல், பார்வை திறனில் பிரச்னை, சுய நினைவை இழத்தல் போன்ற பிரச்னைகள் ஏற்படுவதற்கு வாய்ப்பு உண்டு. எனவே குருத்து விட்டவை, பச்சை நிறம் கொண்டவை, அழுகிய உருளைக்கிழங்குகளை பயன்படுத்தவே வேண்டாம்.

முளைவிட்ட வெங்காயம்

உருளைக் கிழங்கு முளைத்த நிலையில் சாப்பிடுவது உடலுக்கு ஆபத்து விளைவிக்கும் நிலையில், முளைவிட்ட வெங்காயம் மற்றும் பூண்டுகளில் அப்படிப்பட்ட நச்சுத்தன்மை எதுவும் இல்லை. எனவே, முளைத்த வெங்காயம், பூண்டு சாப்பிடுவதால் எந்த சிக்கலும் ஏற்படுவதில்லை. அதேநேரம், அழுகிய வெங்காயத்தை உட்கொள்வது நச்சுத்தன்மையாக மாறிவிடும்.

வெங்காயம், உருளைக்கிழங்கு போன்றவைகளை தனித்தனியே எடுத்து வைத்து பயன்படுத்த வேண்டும். அதோடு, சமைக்கும் முன்பு நன்கு பரிசோதித்து சமைப்பதே ஆரோக்கியத்துக்கு நல்லது.

Leave a Comment