அரசு நடைமுறை படுத்துமா?
பக்கத்தில் இருக்கும் கடைக்குப் போகலாம் என்று ஒரு டூவீலர் எடுத்துக்கொண்டு ஏதேனும் சந்துக்குள் நுழைந்தால், அங்கே ஒளிந்திருக்கும் போலீஸார் லபக்கென பிடித்துக்கொள்கிறார்கள். மது குடிக்க வேண்டும் என்று தான் கடையைத் திறந்து வைத்து பாரும் வைத்திருக்கிறார்கள். ஆனால், அங்கு குடித்துவிட்டு வண்டியில் ஏறினால் போலீஸார் பிடித்துக்கொள்கிறார்கள்.
இதுபோன்ற நடவடிக்கைகளில் அதிகம் மாட்டிக்கொள்வது ஏழை எளிய மக்கள் தான். இங்கேயும் வசதியான வீட்டுப் பையன்கள் யாருடைய பெயரைச் சொல்லி அல்லது அசால்ட்டாக அபராதத் தொகையைக் கட்டிவிட்டுப் போய்விடுகிறார்கள். இப்போது ஹெல்மட் போடவில்லை என்றால் அத்தனை ஆவணங்களையும் பறிமுதல் செய்யப்படும் என்று எச்சரிக்கிறார்கள்.
இது குறித்து, ‘’ஊழல் வழக்குகளில் சிக்கிய மந்திரிகள், அதிகாரிகளின் சொத்துக்கள், ஆவணங்களை பறிமுதல் செய்ய மாட்டார்கள். வங்கியில் கோடிகளில் பணம் வாங்கிவிட்டு கட்டாமல் ஏமாற்றுபவர்கள் சொத்துக்களை பறிமுதல் செய்ய மாட்டார்கள். ஆற்று மணல் கொள்ளையர்கள், போலி மருத்துவர்களை எல்லாம் விட்டுவிட்டு, ஹெல்மட் போடாத சராசரி மக்களுக்கு நெருக்கடி கொடுக்கிறார்கள்.
மது பாட்டிலிலும் பார்களிலும், ‘குடிப்பழக்கம் உயிருக்கும், வீட்டுக்கும், நாட்டுக்கும் கேடு’ என்று அச்சிட்டு விட்டு அதை அரசாங்கமே விற்பனை செய்கிறது. சிகரெட் பாக்கெட்டிலும் அப்படி எழுதி வைத்து விற்பனை செய்கிறார்கள். இதே பாணியில் எல்லா வண்டியிலும், ‘ஹெல்மட் போடாமல் ஓட்டுவது உயிருக்குக் கேடு’ என்று எழுதி வைத்தால் போதாதா..? அதை மீறுபவர்கள் தங்கள் சொந்த விருப்பத்தில் செய்வதாக எடுத்துக்கொள்ளலாமே… இதைவிட்டு, ஏதோ ஒரு கொலைக்குற்றவாளியைப் பிடிப்பது போன்று விரட்டி விரட்டி பிடிப்பதும், ஒளிந்திருந்து பிடிப்பதும் நியாயமா?’’ என்று கேட்கிறார்கள்.
தரமான சாலைகள் தர முடியாத அரசுக்கு ஹெல்மட் காரணம் காட்டி தண்டனை தருவதற்கு எந்த அதிகாரமும் இல்லை என்பதே உண்மை.