என்ன செய்தார் சைதை துரைசாமி – 179
தமிழர்களின் பாரம்பரியமே மூலிகைகள் அடிப்படையில் உருவானது என்பதால் சித்த வைத்தியத்துக்கு சைதை துரைசாமி மிகவும் முக்கியத்துவம் கொடுப்பவர். இயற்கை வைத்தியம் மூலம் தனக்குக் கிடைத்திருக்கும் ஆரோக்கியத்தை அத்தனை மக்களும் பெற வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர். அதனால், பூங்காக்களில் மறுமலர்ச்சி கொண்டுவந்த நேரத்தில் மக்களுக்கு மூலிகைகளை அறிமுகம் செய்வதற்குத் திட்டமிட்டார்.
முன்பு நம் மக்கள் நாட்டு வைத்தியத்தில் தலைசிறந்து விளங்கியதாலே அதிக ஆரோக்கியத்துடன் வாழ்ந்தார்கள். சின்னச்சின்ன உடல் நோய்களுக்கு உணவே மருந்து, மருந்தே உணவு என்ற ரீதியில் இயற்கையாகக் கிடைக்கும் மூலிகைகளைக் கொண்டே குணப்படுத்தினார்கள். கீரைகள், காய்கறிகள், பழங்கள், இஞ்சி, மிளகு, சுக்கு, வெந்தயம், சீரகம், மஞ்சள் போன்ற சமையலுக்கு உதவும் பொருட்களைக் கொண்டே நோய்களைக் குணப்படுத்தி ஆரோக்கியமாக வாழ்ந்தார்கள்.
சாதாரணமாக விளையும் குப்பைமேனி, ஆவாரம், கற்றாழை, துளசி, நந்தியாவட்டை, செம்பருத்தி போன்ற மூலிகைகளில் எக்கச்சக்க மருத்துவப் பயன்கள் ஒளிந்திருக்கின்றன என்பதை நம் மக்கள் மறந்தே போனார்கள். எதற்கெடுத்தாலும் மாத்திரை, மருந்து என்று ஆங்கில மருத்துவத்திற்கு அடிமையாக இருக்கும் மக்களுக்கு மூலிகை விழிப்புணர்வு கொடுக்க வேண்டியது அவசியம் என்பதை உணர்ந்தார். கொரோனா தொற்று நோய்க்குப் பிறகு நம் மக்களுக்கு மூலிகைகள் மீது மதிப்பு தோன்றியுள்ளது என்றாலும், அதற்கு முன்னரே மூலிகைகளை மக்களிடம் கொண்டுபோய் சேர்த்தவர் மேயர் சைதை துரைசாமி.
பூங்கா என்றால் பொதுமக்களின் கண்களுக்கு விருந்தாகும் வகையில் ஏராளமான வண்ண மலர்களும், பசுமை மாறாத புல்தரைகளும் இருப்பது மட்டும் போதாது, உடல் ஆரோக்கியத்துக்குப் பயன்படும் மூலிகைத் தாவரங்களும் இடம்பெற வேண்டும் என்று விரும்பினார். எனவே, முதல் கட்டமாக மூன்று மூலிகைப் பூங்காக்கள் பெருநகர சென்னையில் உருவாக்கப்பட்டன.
இந்த பூங்காவில் ஏராளமான மூலிகைகள் வளர்க்கப்பட்டு, அவற்றின் பெயர் மற்றும் தன்மைகள் எழுதிவைக்கப்பட்டன. பூங்காவுக்கு வந்த மக்கள் இந்த மூலிகைச் செடிகளைக் கண்டு மிகவும் ஆச்சர்யமானார்கள். ஒவ்வொரு மூலிகையும் எதற்குப் பயன்படுகிறது என்பதை அறிந்துகொள்வதற்கும், மூலிகைகளை இனம் கண்டுகொள்ளவும் சைதை துரைசாமியினால் உருவாக்கப்பட்ட மூலிகைப் பூங்காக்கங்கள் மிகவும் உதவிகரமாக இருந்தன.
- நாளை பார்க்கலாம்.