கவித்துவம்
சின்னச் சின்ன வார்த்தைகளில் உலகத்தையே சுருக்கி வைக்கும் அற்புதமே கவிதை. எங்கோ எவரோ எழுதிய கவிதை யார் யாருடைய நெஞ்சத்தை எல்லாம் வருடிக் கொடுக்கும், அழவைக்கும். அப்படிப்பட்ட சில குட்டிக் கவிதைகள்
தத்தி தாவும் சாபம்
தவறுதலாக
தவளைக் குஞ்சொன்றை
மிதித்து அழித்துவிட்டேன்
எத்தனை காலம்
அது என்னில் ஓலமிட்டு திரியுமோ?
எத்தனை காலம்
என் உறக்கத்துக்கு குறுக்கே நிற்குமோ?
தாய்த் தவளையின் சாபத்தால்
எத்தனை இரவுகள்
தவ்விக் குதித்து எழுவேனோ?
இத்தனை இடங்களுக்கும் பதிலாக
பாப்பா சொன்னது போலவும் நடக்கலாம்
அடுத்த பிறவியில்
நான் தவளையாகவும்
தவளை பூபாலனாகவும் மாற,
நான் நசுங்கிச் சாவேன்
பூபாலன் புழுங்கிச் சாவான்
- இரா பூபாலன்
அபத்தம்
நாம் ஒரு
குறிப்பிட்ட காலத்தில்
அறிந்து வைத்திருப்பதுதான்
என்றென்றும்
இறுதியான அறிவு
என்ற முடிவு போல்
அபத்தமானதும் ஆபத்தானதுமான
சிந்தனை
வேறெதுவுமே இல்லை.
- சுந்தரராமசாமி
அன்பு
யாராலும்
நிறைவு
செய்ய முடியாத
ஒரு வெற்றிடத்தை
தந்துவிட்டு செல்வதை
போன்ற பழிதீர்த்தல்
வேறெதுமிருக்கிறதா?
~ ரதிராஜ்
பார்வை
பறவையின்
பார்வையில்
எல்லா மனிதர்களும்
ஊனமுற்றவர்களே…!!
– நாடன் சூர்யா