குறைந்த விலையில் வயிறு நிறைய உணவு

என்ன செய்தார் சைதை துரைசாமி – 503

மனிதநேயம் இலவச ஐ.ஏ.எஸ். அறக்கட்டளை மூலம் உடல் உழைப்புத் தொழிலாளர்கள், ஏழைகள், முதியவர்களுக்கு பயன் தரும் வகையில் 2006-ம் ஆண்டு சைதாப்பேட்டை பூக்காரத் தெருவில் மலிவு விலை உணவகம் கொண்டுவந்தார் சைதை துரைசாமி.  

காலை, மதியம், இரவு என மூன்று வேளையும் உணவு வழங்கப்பட்டது. இட்லி, பொங்கல், சாம்பார் சாதம், தயிர் சாதம், சப்பாத்தி என மூன்று நேரமும் அனைத்து உணவுகளும் வழங்கப்பட்டன. வயிறு நிரம்ப சாப்பிட்டாலும் 5 ரூபாய்க்குள் இருக்கும் வகையில் விலை நிர்ணயம் செய்யப்பட்டது. அங்கு தயார் செய்யப்படும் உணவுப் பொருட்களின்  தரமும், சுவையும் எந்த வகையிலும் குறையக்கூடாது என்பதில் சைதை துரைசாமி மிகவும் அக்கறை செலுத்தினார். தரமான பொருட்களை அவரே வாங்கிவந்து கொடுத்தார்.  

ஆரோக்கியமான உணவு மிகவும் சுவையாகவும் அதேநேரம், மிகவும் குறைவான விலையில் கொடுக்கப்படும் தகவல் சென்னை முழுக்க பரவியது. இதையடுத்து சைதையின் மலிவு விலை உணவகத்திற்கு மக்களிடம் அமோக ஆதரவு கிடைத்தது.

சைதாப்பேட்டை ஏரியாவைச் சேர்ந்த மக்கள் மட்டுமின்றி நகரின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் மக்கள் சைதாப்பேட்டைக்குத் தேடிவந்து சாப்பிட்டு மகிழ்ந்தார்கள். பள்ளி, கல்லூரி மாணவர்கள், ஆட்டோ ஓட்டுனர்கள், கட்டுமானத் தொழிலாளர்கள் போன்ற பல்வேறு உழைப்பாளிகள் மலிவு விலை உணவகத்தின் நிரந்தர வாடிக்கையாளராக மாறினார்கள்.

மலிவு விலை உணவகம் மூலம் தினமும் குறிப்பிட்ட அளவுக்கு நிதி இழப்பீடு ஏற்படும் என்பது தெரிந்து, சேவை மனப்பான்மையுடனே சைதை துரைசாமி தொடங்கியிருந்தார். ஆனால், அவருக்கு ஆச்சர்யமான ஒரு உண்மை தெரியவந்தது.

  • நாளை பார்க்கலாம்.

Leave a Comment