சேலம் சிவராமனின் உடல் நலக் குறிப்புகள்
சேலம் என்றாலே மாம்பழம் என்ற அடையாளத்தை மாற்றும் வகையில், சேலம் என்றாலே ஸ்ரீசரவணபவன் ஹோட்டல் எனும் அளவுக்கு சுவை ராஜாங்கம் நடத்திவருகிறார் சுவை ராமன் என்று அழைக்கப்படும் விசிஎஸ். சிவராமன். ஹோட்டல் தொழிலில் 50 ஆண்டு கால அனுபவசாலி. யாக்கை இதழுக்காக மனம் திறந்து பேசினார்.
கேள்வி ; வெற்றிகரமாக ஹோட்டல் நடத்திவருகிறீர்கள். உண்மையைச் சொல்லுங்கள், உடல் நலனுக்கு ஹோட்டல் உணவு ஏற்றது தானா..?
விசிஎஸ். சிவராமன் ; வீட்டுச் சாப்பாடு போலவே ஹோட்டல் சாப்பாடும் உடலுக்கு ஆரோக்கியமானது தான். இந்த நடைமுறையை நான் தொடங்கவில்லை. எனக்கு முன்பே சென்னையில் சரவணபவன் ராஜகோபால் அண்ணாச்சி தொடங்கிவிட்டார். நாடி வரும் வாடிக்கையாளர்களின் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தி தரமான உணவுக்கு உத்தரவாதம் கொடுத்தார். ஹோட்டல் தொழிலுக்கு ஒரு தனி மதிப்பும் மரியாதையும் தோன்றுவதற்கு அண்ணாச்சியும் இம்பாலா பாயும் தான் முக்கியமான காரணம்.
ஹோட்டல் தொழில் நடத்துகிறோம் என்றாலும் வாடிக்கையாளரின் வாயையும் வயித்தையும் கெடுத்து சம்பாதிக்கக் கூடாது என்பதில் மிகவும் உறுதியாக இருக்கிறேன். எங்கள் ஹோட்டலுக்கு வரும் வாடிக்கையாளர்களை குடும்ப உறுப்பினர்களாகக் கருதுகிறோம். விருந்தினர்களுக்கு உபசரிப்பது போன்று தரமான உணவுப் பொருட்களை மட்டுமே பரிமாறுகிறோம். குழந்தைகள், முதியவர்கள், கர்ப்பிணிகள், நீரிழிவு நோயாளிகள் என ஒவ்வொரு நபருக்கும் ஏற்ற உணவு கொடுக்கிறோம்.
பொதுவாகவே எங்கள் ஹோட்டலில் சிறு தானிய உணவுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறோம். இதுவரை 40 சிறுதானிய ரெசிபிகள் எங்கள் ஹோட்டலில் அறிமுகம் செய்திருக்கிறேன். இன்னமும் 150 ரெசிபி தயாராகிறது. நாட்டுச் சோளத்தை ரவையாக்கி இட்லி செய்கிறோம். அடுத்து சுண்டல் செய்ய இருக்கிறோம். குதிரை வாலி, கம்பு, ராகி, கருப்பு உளுந்து கலந்து டயட் இருப்பவர்களுக்கும் சர்க்கரை நோயாளிகளுக்கும் சிறப்பு உணவு கொடுத்துவருகிறோம்.
எங்கள் ஹோட்டலில் சாப்பிடுபவர்களுக்கு நெஞ்செரிச்சல், எதுக்களிப்பு போன்ற எந்த பிரச்னையும் வந்துவிடக் கூடாது என்பதற்காக, இருப்பதிலேயே தரமான பொருட்களை தேடிப் பிடித்து வாங்குகிறோம். அதனால் தான் விலை கொஞ்சம் கூடுதலாக இருந்தாலும் குடும்பத்தோடு வந்து திருப்தியாக சாப்பிடுகிறார்கள். மீண்டும் மீண்டும் குடும்பத்தோடு வருகை தந்து பேராதரவு கொடுக்கிறார்கள்.
கேள்வி ; தரமான பொருட்கள் என்று எப்படி தேர்வு செய்கிறீர்கள்..?
விசிஎஸ். சிவராமன் ; நம்பர் ஒன் குவாலிட்டி பொருட்கள் மட்டுமே பயன்படுத்துகிறோம். இதற்காக ஒவ்வொரு பொருளும் எங்கே சிறப்பாக இருக்கிறது என்று தேடித்தேடி வாங்குகிறோம். எல்லா இடத்திலும் கோதுமை கிடைக்கும் என்றாலும் நாங்கள் பஞ்சாப்பில் இருந்து மட்டுமே கோதுமை வாங்குகிறோம், குல்பர்ஹாவில் இருந்து துவரம் பருப்பு நம்பர் ஒன் தரத்தில் வாங்குகிறோம். இந்த பருப்பில் வாய்வுத் தொந்தரவு இருக்காது. நாட்டுப் புளி பயன்படுத்த மாட்டோம், தொந்தரவு கொடுக்காத டும்கூர் புளி வாங்குகிறோம். திருத்தணியில் இருந்து இட்லி அரிசியும் இங்கு அதிக விலையுள்ள சாப்பாட்டு அரிசியும் வாங்குகிறோம்.
மல்லி, மிளகாய் போன்ற பலசரக்குப் பொருட்களில் கலப்படம் இருக்கும் என்பதால் நாங்களே நல்ல தரமானவற்றைத் தேடி வாங்கி இங்கேயே அரைக்கிறோம். சமையலுக்கு கடலை எண்ணெய் மட்டுமே பயன்படுத்துவோம். பாமாயில், சன் ஃப்ளவர் ஆயிலுக்கு எங்கள் ஹோட்டலுக்குள் அனுமதி இல்லை. மிக்சர், சேவு தயாரிப்பதற்கு ஒரு முறை பயன்படுத்திய எண்ணெய்யை மீண்டும் உபயோகிப்பதில்லை. அதனால் எங்களிடம் வாங்கும் மிக்சர் 3 மாதங்கள் வரை கெட்டுப் போகாது.
கேரளாவில் தேங்காய் விலை குறைவு, ஓரளவு தரமாக இருக்கும் என்றாலும் நாங்கள் பொள்ளாச்சியில் இருந்து தான் வரவழைப்போம். பொள்ளாச்சி தேங்காய் விலை அதிகம். அதேநேரம் இதில் சுவையும் சத்தும் சிறப்பாக இருக்கும். பிரட், கேக்கிற்கு இந்தியாவிலேயே தரமான மைதா வாங்குகிறோம். கிரீம் வாங்கியும் கேக் போடலாம் என்றாலும் நாங்கள் பட்டர் மட்டுமே பயன்படுத்துகிறோம். சூப் ஸ்டிக்கை அனைவரும் மைதாவில் செய்வார்கள். ஆனால், நாங்கள் பஞ்சாப் கோதுமையில் செய்கிறோம்.

தரமான பொருள் என்று பிறர் சொல்வதைக் கேட்டு நான் ஒருபோதும் நம்புவதில்லை. வாங்கும் பொருட்களை லேப் டெஸ்ட்க்கு அனுப்பி, அதில் பாஸ் ஆன பிறகே பணம் கொடுப்போம். ஏதேனும் பொருள், சுவையில் வித்தியாசம் தெரிந்தால் உடனே பரிசோதனை செய்வோம். விலை கொஞ்சம் கூடுதலாக இருந்தாலும் பொருட்களின் தரத்தில் ஒருபோதும் சமரசம் செய்துகொள்ளவே மாட்டோம்.
அதனால் தான், தினமும் காபி குடிப்பதற்கென்றே அதிகாலை நேரத்தில் பல கிலோமீட்டர் பயணித்து எங்கள் ஹோட்டலைத் தேடி வருகிறார்கள். பொதுவாக எல்லோரும் 60க்கு 40 என்ற ரீதியில் காபியும் சிக்கரியும் கலக்குகிறார்கள் என்றாலும் நான் ஹோட்டல் ஆரம்பித்த காலத்தில் இருந்து 10 சதவீதம் மட்டுமே சிக்கரி சேர்க்கிறேன். அதனால் இங்கு காபி குடித்தவர்களுக்கு வித்தியாசம் மிகவும் நன்றாகத் தெரியும். காபி குடித்ததும் அவர்களுக்கு மிகப்பெரிய ரிலாக்ஸ் கிடைக்கும். அதனாலே விலையைப் பொருட்படுத்தாமல் தேடி வந்து குடிக்கிறார்கள். நல்ல பொருட்களைக் கொடுத்தால் நிச்சயம் மக்கள் ஆதரவு தருவார்கள் என்பதற்கு உதாரணமாகவே எங்கள் சரவணபவன் ஹோட்டல் திகழ்கிறது.
கேள்வி ; நீங்கள் எப்படி ஹோட்டல் தொழிலுக்கு வந்தீர்கள்.. உங்களைப் பற்றி கொஞ்சம் சொல்லுங்கள்…
விசிஎஸ்.சிவராமன் ; நெல்லைக்கு அருகிலிருக்கும் வெங்கடராயபுரம் எங்கள் ஊர். வறுமையான குடும்பம். எங்கள் அப்பா சுப்புராய ரெட்டியாரும் அம்மா ருக்மணியும் கடுமையான உழைப்பாளிகள். அப்பா எல்லா வேலைகளும் செய்வார். கொஞ்ச காலம் இலங்கைக்குச் சென்று வேலை பார்த்தார். எனக்கு 8 வயதான சமயத்தில் கோவைக்கு வந்தோம். அது வரையிலும் நான் பஸ், ரயில், ரோடு என்று எதையும் பார்த்தது கூட கிடையாது.
பள்ளியில் எனக்கு சீட் கிடைக்கவில்லை. ஹெட்மாஸ்டர் காலில் விழுந்து 3ம் வகுப்பில் சேர்ந்து 7ம் வகுப்பு வரை படித்தேன். படிப்பு எனக்கு அத்தனை சீக்கிரம் பிடிபடவில்லை என்றாலும் ஒழுக்கத்தில் முதல் மாணவன். அந்த ஒழுக்கத்தையும் அங்கு கற்றுக்கொண்ட நீதி போதனைகளையும் இன்று வரையிலும் நான் வாழ்க்கையில் கடைப்பிடிக்கிறேன்.
என்னுடைய 13 வயதில் 25 ரூபாய் சம்பளத்துக்கு செல்லப்பாண்டியன் என்பவரிடம் ஹோட்டல் வேலைக்குச் சேர்ந்தேன். என் ஹோட்டல் வாழ்வுக்கு அவர் தான் குரு. இலை எடுப்பது தொடங்கி சமையல் வரையிலும் அத்தனை வேலையையும் அங்கு நான் கற்றுக்கொண்டேன். சமையலுக்குத் தரமான பொருட்களை எப்படி தேர்வு செய்வது என்பதை அவர் கற்றுக் கொடுத்தார்.
அதன் பிறகு எனது அக்காள் கணவரின் உதவியுடன் நண்பர்களுடன் சேர்ந்து கிருஷ்ணகிரியில் ஹோட்டல் ஆரம்பித்து சரியாக அமையவில்லை. அடுத்து நெல்லூரில் ஹோட்டல் தொடங்கி தண்ணீர் பிரச்னையால் நடத்த முடியாமல் போனது. அதன் பிறகே சேலத்தில் ஹோட்டல் தொடங்கினேன். கடந்த 37 வருடங்களாக சேலத்தில் ஸ்ரீசரவணபவன் ஹோட்டல் நடத்தி நானும் வளர்ந்து, ஹோட்டலையும் வளர்ச்சியடைய வைத்திருக்கிறேன். சேலத்து மக்களின் பேரன்பும் இறைவனின் கருணையும் இந்த வெற்றிக்குக் காரணம்.
இந்த வெற்றியில் எங்கள் ஊழியர்களின் அர்ப்பணிப்பும் மகத்தானது. எங்கள் ஹோட்டலில் பணிபுரியும் ஒவ்வொரு தொழிலாளர் மீதும் மிகுந்த மதிப்பு வைத்திருக்கிறேன். அவர்களுக்குத் தேவையான வசதிகள் செய்து தருகிறேன். அதனால் தான் 30 வருடங்களாகத் தொடர்ந்து இங்கு வேலை செய்பவர்கள் இருக்கிறார்கள். சமீபகாலமாக நிறைய பெண்களை ஹோட்டல் பணியில் ஈடுபடுத்தி வருகிறேன். இந்த மாற்றம் வாடிக்கையாளர்களுக்கும் பிடித்திருக்கிறது.

இப்போது என்னுடைய மனைவி கார்த்திகா காலை முதல் மாலை வரை ஹோட்டல் நிர்வாகத்தை சிறப்பாகக் கவனித்துக் கொள்கிறார். அதோடு சிங்கப்பூரில் மேனேஜ்மெண்ட் படித்து வரும் என் மகள் வன்ஷா விரைவில் நிர்வாகத்தைக் கவனிக்க வருகிறார். ஆகவே, முழுக்க முழுக்க சிறுதானியங்களுக்கு என ஒரு ஹோட்டல் தொடங்கும் திட்டம் இருக்கிறது. அதேபோல், வித்தியாசமான முறையில் கொஞ்சம் மலிவு விலையில் ஃபாஸ்ட் ஃபுட் ஹோட்டல் தொடங்கும் விருப்பமும் இருக்கிறது.
கேள்வி : உங்கள் ஆரோக்கியத்தை எப்படி பாதுகாக்கிறீர்கள்..?
விசிஎஸ்.சிவராமன் ; உடல் ஆரோக்கியத்திற்கு என அதிகம் சிரமம் எடுத்துக்கொள்வதில்லை. காலை 5 மணிக்கு எழுந்தவுடன் 1 மணி நேரம் வாக்கிங் செல்வேன். காலை முதல் மாலை வரை ஹோட்டல் ரவுண்ட்ஸ் போய்வருவேன். குறைவாகச் சாப்பிட்டாலும் சரியான நேரத்தில் சாப்பிடுவதற்கும் இரவு தூக்கத்திற்கும் முக்கியம் தருவேன். இரவு மூன்று பிரெட் மட்டும் சாம்பாரில் தொட்டு சாப்பிட்டு உணவை முடித்துக்கொள்வேன். உடல் ஆரோக்கியமாக இருந்தால் மனமும் ஆரோக்கியமாக இருக்கும். எதையும் டேக் இட் ஈஸி என்று எடுத்துக்கொள்வேன். வாழும் காலத்தை வசந்த காலம் என்றும் எதிர்காலம் பொற்காலம் என்ற எண்ணத்துடனும் வாழ்ந்துவருகிறேன்.
கேள்வி ; வாசகர்களுக்கு ஆரோக்கியக் குறிப்புகள் கொடுங்களேன்…
விசிஎஸ்.சிவராமன் ; கிடைத்ததை சாப்பிட்டால் போதும் என்று கண்டதையும் சாப்பிடக்கூடாது. விலை மலிவு என்பதற்காக பொருட்கள் எதுவும் வாங்கக்கூடாது. வைத்தியருக்குக் கொடுப்பதை வாணியருக்குக் கொடு என்று நம் முன்னோர் சொல்லியிருப்பதை வாழ்க்கையில் கடைப்பிடிக்க வேண்டும். இன்று பெரும்பாலான மனிதர்கள் மருந்துகளுக்கே அதிகம் செலவழிகிறார்கள்.
தரமான உணவுப் பொருட்கள் வாங்கி சாப்பிடத் தொடங்கினால் மருத்துவமனைக்குச் செல்ல வேண்டிய அவசியம் வராது. எனவே, உணவுப் பொருட்கள் வாங்குவதில் கஞ்சம் பிடிப்பது கூடாது. இருப்பதிலே நம்பர் ஒன் குவாலிட்டி என்று கேட்டு வாங்க வேண்டும். எது சரியானது என்று தெரியவில்லை என்றால் கடைக்காரர்களிடம் கேளுங்கள். அவர்களே தரம் வாரியாக எடுத்துத் தருவார்கள். நன்றாக கணக்குப் பார்த்தால் மருந்துகளின் விலையை விட தரமான பொருட்களின் விலை குறைவாகவே இருக்கும்.
சிறுதானிய உணவுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். கவுனிக் கஞ்சி குடிப்பது மிகவும் ஆரோக்கியம் தரக்கூடியது. அதேபோல் ராகி, கம்பு, கேப்பை என்று அனைத்து சிறு தானியங்களுக்கும் தவறாமல் உணவில் இடம்பெற வேண்டும். எண்ணெய் அளவோடு பயன்படுத்த வேண்டும். தேங்காய்ப் பாலில் இல்லாத சத்து எதுவும் இல்லை. வெந்தயம், கருப்பு உளுந்து, முளை கட்டிய பயிறு, எலுமிச்சம்பழம், கிராம்பு போன்றவற்றின் தன்மை அறிந்து பயன்படுத்த வேண்டும்.
எத்தனை சுவையான உணவு என்றாலும் முழு வயிறு நிரம்பும் வகையில் சாப்பிடக்கூடாது. முக்கால் வயிறு சாப்பிட்டால் ஜீரணப் பிரச்னைகள் வராது. ஜீரணம் நன்றாக நடைபெற்றால் உடலில் நோய் வராது. சிறு தானிய உணவுகளையும் சுவையாக சமைக்க முடியும். அதற்காக கொஞ்சம் அக்கறை செலுத்தி சுவையைக் கொண்டுவர வேண்டும். அப்போது தான் எல்லா உணவுகளையும் மகிழ்ச்சியுடன் சாப்பிட முடியும். அந்த மகிழ்ச்சியே உடல் ஆரோக்கியத்திற்கும் நல்லது.
கேள்வி ; உங்கள் நண்பர்கள் பற்றி சொல்லுங்கள்..?
விசிஎஸ்.சிவராமன் ; சேலத்துக்கு வந்து நான் கிட்டத்தட்ட 4 ஆயிரம் நண்பர்களை சம்பாதித்திருக்கிறேன். நல்லவர், கெட்டவர் என்றெல்லாம் பாகுபாடு பார்ப்பதில்லை. அதேநேரம், தவறான நபர்களுக்கு ஆதரவாக இருக்க மாட்டேன். பகையும், எதிரியும் சம்பாதித்துவிடாதே என்று என் தந்தை சொன்ன அறிவுரையை இன்று வரை கடைப்பிடித்து வருகிறேன்.
நண்பர்களைப் போலவே போட்டியாளர்களையும் மதிக்கிறேன். எங்கள் ஹோட்டலுக்குப் பக்கத்தில் கடை திறந்தாலும் கவலைப்பட மாட்டேன். எங்களுக்குக் கொடுக்க வேண்டியதை கடவுள் கொடுப்பார் என்ற நம்பிக்கையுடன் இருப்பேன்.
கேள்வி ; உங்களுடைய பொழுதுபோக்கு என்ன..?
விசிஎஸ்.சிவராமன் ; புத்தகங்கள் படிப்பதும் பாடல்கள் கேட்பதும் எனக்கு மிகவும் பிடித்தமான பொழுதுபோக்கு. இறையன்பு அவர்களின் புத்தகங்களை விரும்பிப் படிப்பேன். அதேபோல் கவிஞர் கவிதாசன் புத்தகங்கள் எனக்கு மிகுந்த தன்னம்பிக்கை கொடுக்கும். புத்தகத்தின் மீது எனக்கு இருக்கும் ஆர்வம் காரணமாகவே, நண்பர் அரசு கிருத்திகாவின் முயற்சியில் டாக்டர் பதூர் மொய்தீன் எழுதிய, ‘படிக்கத் திணறும் குழந்தைகளும் ஜெயிக்கும்’ என்ற புத்தகம் மூலம் பதிப்பாளராக மாறினேன். அடுத்து, மாணவர்களின் தற்கொலையைத் தடுக்கும் வகையில் வித்தியாசமான ஒரு புத்தகத்தை வெளியிட இருக்கிறோம். முன்னாள் தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு அவர்கள் எங்கள் பதிப்பகத்திற்காக இரண்டு சிறு புத்தகங்கள் எழுதிக் கொடுத்ததைப் பெருமையாக நினைக்கிறேன். இந்த புத்தகங்களில் கிடைக்கும் லாபத்தை எல்லாம் அறக்கட்டளைக்குக் கொடுத்துவிடுகிறேன்.
கேள்வி : இன்றைய இளைஞர்களுக்கு நீங்கள் சொல்ல விரும்புவது என்ன..?
விசிஎஸ்.சிவராமன் ; இன்றைய சொகுசுக்கு ஆசைப்பட்டால் எதிர்காலத்தில் சிரமப்பட வேண்டியிருக்கும். ஆகவே, இப்போது உழைப்பதற்கு இளைஞர்கள் முன்வர வேண்டும். கடினமாக உழைக்கத் தயாராக இருப்பவர்களுக்கு வாழ்க்கை சிறப்பாக இருக்கும். அதோடு வாழ்வில் ரிஸ்க் எடுக்கும் தைரியம் வர வேண்டும். ஒரு வெற்றியைப் பார்த்தவுடன் நிமிர்ந்து நிற்கக்கூடாது. எப்போதும் பணிவுடன் இருக்க வேண்டும். அந்த பணிவு தான் அடுத்தடுத்து வெற்றிகளைக் கொண்டுவரும்.
கேள்வி ; கல்விக்கும் மருத்துவத்திற்கும் நீங்கள் நிறைய சேவை செய்வதாகச் சொல்கிறார்களே..?
விசிஎஸ்.சிவராமன் ; ஒவ்வொரு மாதமும் குறிப்பிட்ட தொகையை ஒதுக்கி சேவை செய்துவருகிறேன் என்றாலும், அது குறித்து வெளியே பேசுவதற்கு விரும்பவில்லை. விளம்பரம் தேடிக்கொண்டால் அது சேவையாக இருக்காது. அதேநேரம், வெறும் கையுடன் வந்த என்னை வெற்றியாளராக மாற்றிய சேலம் மக்களுக்கு உதவும் வகையில், ஹைவேய்ஸில் இலவச ஆம்புலன்ஸ் வசதி ஏற்படுத்தும் திட்டம் இருக்கிறது. ஒரு மருத்துவமனையுடன் இணைந்து செயல்படும் எண்ணத்தில் இருக்கிறேன்.
இந்த நாடும் நாடும் நாட்டு மக்களும் நன்றாக இருக்க வேண்டும் என்று இறைவனைக் கேட்டுக்கொள்கிறேன்.
சந்திப்பு ; அரசு கிருத்திகா