ஹியர்போன் இசை காதுக்கு அழகு .?

Image

மருத்துவர் கோபிநாத்



தாங்கவே முடியாத வலியைக் கொடுக்கக்கூடிய அவயங்களில் ஒன்று காது. அத்தனை முக்கியத்துவமான காது பிரச்னைகள் குறித்து கோவையைச் சேர்ந்த பிரபல காது மூக்கு தொண்டை நிபுணர் கோபிநாத்திடம் பேசினோம்.

பொதுவாக, காது பாதிக்கப்பட என்ன காரணம்? காதைப் பாதுகாக்க என்ன செய்ய வேண்டும்?

இயற்கையாகவே நமது உடல், அனைத்துக் கழிவுகளையும் வெளியில் தள்ளிவிட்டுவிடும். அதுபோலத்தான் காதில் அழுக்கு மற்றும் கழிவுகள் இருந்தால் அதுவே தானாகவே வெளியில் வந்துவிடும். இந்த அழுக்கை எடுக்கப் பலரும் பட்ஸையே உபயோகிக்கிறார்கள். இதை, உபயோகிப்பது தவறு. இதை உபயோகப்படுத்தினால் அழுக்கை, இன்னும் கொஞ்சம் உள்ளே தள்ளிவிடுமே தவிர, வெளியில் கொண்டுவராது. இதனால் காது அடைப்பு, கேட்கும் தன்மை, தொற்று உள்ளிட்டவை உண்டாக  வாய்ப்புகள் அதிகம். கடந்த 15 வருடங்களுக்கு முன்னால் யாரும் பட்ஸ் உபயோகிக்கவில்லையே? அப்போது, எல்லோரும் நன்றாகத்தானே இருந்தார்கள். அதுபோல், இப்போதும் இருக்கலாம். ஆகையால், பட்ஸைத் தவிர்ப்பது நலம். பட்ஸ் மட்டுமின்றி, ஊக்கு, ஹேர்பின், பேனா, பென்சில், பலப்பம், தீக்குச்சி, சாவி என கையில் கிடைப்பதை எல்லாம் காதுக்குள் விடுவதைத் தவிர்க்க வேண்டும்.


அடுத்து சளி பிடித்தால் உடனே சிகிச்சை மேற்கொள்ள வேண்டும். இல்லையென்றால், தொண்டையையும் நடுக்காதையும் இணைக்கின்ற ஈஸ்டாக்கியன் குழல் (Eustachian tube) வழியாக நடுக்காதுக்குச் சென்று,  காது ஜவ்வில் ஓட்டை விழுவதற்கு வாய்ப்புகள் அதிகம் உள்ளன. இதனால் காதில் சீழ் வரவும் வாய்ப்பிருக்கிறது. அதுபோல், ஒருதடவை காதில் சீழ் வந்துவிட்டால் அதற்குறிய மருத்துவரைச் சந்தித்து சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும். அப்படி சிகிச்சை எடுக்கத் தவறினால் அந்தக் காது சவ்வில் இருக்கும் ஓட்டை மறையாமல் இருந்து எப்போது சளிபிடித்தாலும் சீழ் வந்துகொண்டே இருக்கும். அதனால் ஆபரேஷன்கூட செய்ய வேண்டி வரலாம்.

அதுபோல் அடிக்கடி சளி பிடித்தல், காதில் சளி இருத்தல் அல்லது வேறு மாதிரியான காது மூக்குப் பிரச்னைகளால் காதில் சதை வளர்ச்சி உருவாவதற்கு வாய்ப்பிருக்கிறது. அந்த சதை வளர்ச்சியானது, எலும்பை அரித்துவிட்டு மூளைவரை செல்வதற்கும் வாய்ப்பு உள்ளது. இதனால் பாதிப்பு ஏற்படலாம். ஆகையால் சாதாரண சளி மற்றும் சீழ் வடியும்போது உடனே  மருத்துவரை பார்த்து சிகிச்சை எடுக்க வேண்டும். அலட்சியம் கூடாது.
ஹியர்போன் கேட்பதால் காது பாதிக்கப்படுமா? காதில் வலி மற்றும் அடைப்பு ஏற்படுது ஏன்?

 இன்று பலவகையான சத்தங்களைக் கேட்கிறோம். பொதுவாக, அதிகப்படி சத்தங்கள் கேட்பதை அனைவரும் தவிர்ப்பது நல்லது. உதாரணத்துக்கு சத்தமான இடங்களில் நிற்பதையோ, வேலை செய்வதையோ தவிர்க்கலாம். அதுபோல் அதிக சத்தம்வைத்து இசை கேட்பதும் தவறு. காதில் அடிக்கடி ஹியர்போன் வைத்து கேட்பதையும் தவிர்க்க வேண்டும். அதிக நேரம் செல்போன் பேசுவதையும் தவிர்க்கலாம். தற்போதைய ஆய்வு ஒன்றில், செல்போன் பேசுவதால் காது நரம்புகள் பாதிக்கப்படுவதாகக்  கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தவிர இதனால் மூளையும் பாதிக்கும், மூளையிலும் புற்றுநோய் வருவதற்கும் வாய்ப்புள்ளது என அதில் கூறப்பட்டுள்ளது. காதில் இயர்செட் வைத்து கேட்கும்போது காதின் கேட்கும் திறன் மந்தமாகும். அதிக சத்தத்துடன் இயங்கும் தொழிற்கூடங்களில் வேலை செய்துகொண்டிருப்பவர்கள், சாதாரணமாகக் கடைகளில் கிடைக்கும் ஹியர் பிளக்கை உபயோகப்படுத்த வேண்டும். இதை உபயோகிப்பதால் காது மந்தமாவதைத் தவிர்க்க முடியும். மேலும், இப்படி சத்தமுள்ள இடங்களில் வேலை பார்ப்பவர்கள் ஆறு மாதம் அல்லது ஒரு வருடத்தில் காது பரிசோதனை செய்துகொள்வது அவசியம்.

காது வலி வரக் காரணம் என்ன..?

நிறைய பிரச்னைகளால் காதில் வலி வரலாம். காதில் அழுக்கு சேர்தல், வெளிப்புற காதில் கிருமித்தொற்று,  சளி பிடித்தல், அடினாய்டு இன்பெக்‌ஷன் உள்ளிட்டவற்றால் காதில் வலி வரலாம். காதில் அழுக்கு இருக்கும் சமயத்தில், உள்ளுக்குள் செல்லும் நீர் அந்த அழுக்கை உப்பச் செய்யும். அதனால் செவிப்பறையில் வீக்கம் ஏற்படும். அப்போது காதில் வலி உண்டாகும். மூக்கிற்கும் தொண்டைக்கும் இடைப்பட்ட பகுதியே அடினாய்டு. இதில் அடிக்கடி இன்பெக்‌ஷன் ஏற்படுவதால் குழந்தைகளுக்கு காதில் வலி வரலாம். குழந்தைகளுக்கு எப்போதும் சளி பிடித்தாலும் காதில் வலி வர வாய்ப்புண்டு. காதில் தண்ணி போகலாம். அதனால் பிரச்னையில்லை. ஆனால், காது சவ்வில் ஓட்டை ஏற்பட்டால் பிரச்னை வர வாய்ப்பிருக்கிறது.

காது வலியைப்போன்றே நிறைய பிரச்னைகளால் காது அடைத்துக்கொள்வதும் ஏற்படுகிறது. சிலர் மேலே கீழே என ஏறி இறங்கிப் பயணம் செய்யும்போது, காதில் இருக்கும் பிரஷர் போன்ற டியூப், காதுகளை மெயிண்டன்ஸ் செய்யும். அது, சரியாக மெயிண்டன்ஸ் ஆகாதபோது காது அடைத்துக்கொள்ளலாம். அதுபோல், சளி பிடித்தாலும் உள் காதில் சளி கோர்த்துக்கொண்டு காது அடைப்பு ஏற்படலாம். காதுக்கும் மூக்கிற்கும் இடையேயான டியூப் வேலை செய்யாவிட்டாலும் காது அடைப்பு ஏற்படலாம். வெளிப்புற அழுக்கினாலும் காது அடைப்பு ஏற்படலாம். இதுபோன்ற காரணங்களால்தான் சிலருக்கு காது அடைத்திருக்கும். காது தொடர்ந்து அடைத்திருந்தால் மருத்துவரைப் பார்ப்பது அவசியம்.

Leave a Comment