துன்பத்திற்கு ஒரு டீ சாப்பிடுங்கள்

Image

வேதனை தீர்க்கும் வழிகள்

துன்பம், துயரம், கவலையால் பாதிக்கப்படாத மனிதர்கள் யாருமே இல்லை. பொதுவாக துன்பம், தோல்வி போன்றை மூன்று வழிகளில் வருகிறது. அதாவது நம்முடைய செயல், பிறரது செயல் மற்றும் இயற்கை.

நமது செயல், பிறரது செயலால் எல்லோரும் துன்பம், தோல்வி அடைந்திருப்பார்கள். இயற்கையும் அப்படி சதி செய்வதுண்டு. குடும்பத்தோடு மகிழ்ச்சியாக விடுமுறையைக் கொண்டாட ஊட்டி செல்கிறீர்கள். கடும் மழையால் போக்குவரத்து நெரிசலில் சிக்கி, அறையை விட்டு வெளியே எங்கேயும் சுற்றிப்பார்க்கச் செல்ல முடியாமல், ஊர் திரும்பினால் போதும் என்று ஒரு நிலை இயற்கையால் உருவாகலாம். கொரோனா எத்தனையோ மனிதர்களின் வாழ்க்கையைப் புரட்டிப் போட்டது.

எப்படியெல்லாம் ஊட்டிக்குப் போய் கஷ்டப்பட்டோம் தெரியுமா என்று பின்னர் ஒரு நாள் சொல்லிச்சொல்லி சிரிக்கலாம் என்பது தனிக் கதை. முன்பு கஷ்டப்பட்டதை பின்னர் ஒரு நாள் எல்லோருமே சொல்லி சிரிப்பது வழக்கம் தான்.

ஆனால், துன்பம் வரும் நேரத்திலும் சிரிக்க முடியுமா..? இடுக்கண் வருங்கால் நகுக என்று வள்ளுவர் சொல்வது எப்படி சாத்தியமாகும்?

திருவள்ளுவர்

பத்து மாதங்கள் வயிற்றில் பிள்ளையை சுமந்து, எக்கச்சக்க வேதனைக்குப் பிறகு குழந்தை பிறக்கிறது. பிரசவம் வரையிலும் கதறிக்கொண்டிருந்த பெண், உடனடியாக மகிழ்ச்சியான மனநிலைக்கு மாறுகிறாள். அவளுடைய பத்து மாதத் துன்பத்திற்குப் ஒரு பரிசு கிடைத்ததாக பூரித்துப் போகிறாள். இப்படியொரு பரிசு கிடைக்கப்போகிறது என்பது தெரிந்தே கர்ப்பத்தில் எத்தனை வேதனை கிடைத்தாலும் அதை தாங்கிக்கொண்டு சிரிக்கிறாள்.

இது போல் ஒவ்வொரு துன்பத்திற்குப் பிறகும் ஒரு இன்பம் கிடைக்கும், இந்த துன்பம் நிலையானது இல்லை என்ற உண்மையைப் புரிந்துகொண்டால், சிக்கலான தருணங்களிலும் சிரிக்க முடியும் என்பதே உண்மை.  

இடுக்கண் வருங்கால் நகுக அதனை

அடுத்தூர்வது அஃதொப்பது இல்.”

வள்ளுவரின் குறளை இப்படித்தான் பார்க்க வேண்டும். அதாவது, ஒரு செயல் செய்யும்போது இடையூறுகள் வருகிறது, சிக்கல் வருகிறது, துன்பம் நேர்கிறது என்றால் மகிழ்ச்சி அடையுங்கள். இந்த துன்பம் செயலை நல்லபடியாக செய்வதற்குத் தூண்டுகோலாக இருக்கிறது என்றும் இதனை செய்து முடித்தபிறகு மகிழ்ச்சி கிடைக்கப் போகிறது என்றும் நம்பிக்கை வையுங்கள். அதனால் துணிந்து நில்லுங்கள், தொடர்ந்து செல்லுங்கள், தோல்வி கிடையாது என்கிறார் வள்ளுவர்.

ஜே.கே.ரெளலிங்

ஹாரி பாட்டர் புத்தகம் எழுதிய ஜே.கே.ரெளலிங் பத்துக்கும் மேற்பட்ட புத்தக வெளியீட்டாளர்களால் அவமதிக்கப்பட்டார். அவரது புத்தகம் பிரசுரம் செய்வதற்குத் தகுதியற்றது என்று வந்த கடிதங்களை இன்றும் வைத்திருக்கிறார். பங்கேற்கும் கூட்டங்களில் அந்த கடிதங்களைக் காட்டி, பழைய துன்பத்தை நகைச்சுவையுடன் பகிர்ந்துகொள்கிறார்.

சில்வெஸ்டர் ஸ்டோலன் கதையையும் நடிப்பையும் ஆரம்பத்தில் எந்த தயாரிப்பு நிறுவனமும் ஏற்கவில்லை. அவமானப்படுத்தினார்கள். இப்படி எத்தனை ஆண்டுகள் அப்படி அவமதிக்கப்பட்டேன் என்பதை இன்றும் அவர் நகைச்சுவையாக சொல்லிக்கொண்டு இருக்கிறார்.

எனவே, தோல்வி என்பது நிரந்தரம் அல்ல. அது ஒரு கசப்பு மருந்து. வெற்றி பாதையைக் காட்டும் மருந்து. எனவே, தோல்வியை எதிர்கொள்வதற்கு கற்றுக்கொண்டால் எளிதில் வெற்றி அடையலாம்.

தோல்வியை எதிர்கொள்ள வேண்டும் என்றால் தோல்வி என்றால் என்னவென்று தெளிவு வேண்டும். வெற்றிக்குச் செல்லும் பாதையில் தோல்வி என்பது தவிர்க்க முடியாத ஒன்று. தோல்வியால் பாதிக்கப்படாதவர்கள் யாருமே இல்லை என்ற புரிதல் வேண்டும்.

தோல்வி என்பது முடிவு அல்ல, அது ஒரு புதிய தொடக்கம்.

யாரும் தோல்வி வருவதை விரும்பமாட்டோம். ஆனா வெற்றி அடைந்த அனைவரும் வாழ்க்கையில் பல முறை தோல்வி அடைந்தவர்கள்தான். தோல்வி என்ன தரும் தெரியுமா..?

  1. எதையும் தாங்கும் சக்தியை தோல்வியே கொடுக்கிறது. இதுவே, நம்பிக்கை வரவழைக்கிறது.
  2. பிறர் உதவியால் யாரும் வெற்றி அடைய முடியாது. சொந்தமாக உழைத்தே முன்னேற முடியும் என்ற உண்மையை சொல்லித்தருகிறது.
  3. புதிய பாதையை தோல்விகளே காட்டுகின்றன. அதாவது ஒரே பாதையில் செல்லும்போது வெற்றி கிடைக்காது என்பது புரிந்தால் தான், புதிய பாதையில் முயற்சிக்க முடியும்.  
  4. வெற்றி மகிழ்ச்சி தரலாம். ஆனால், தோல்வி மட்டுமே தைரியம் தரும். மனதை வலிமையாக்கும்.
  5. விதை போட்டவுடன் செடி முளைக்காது. எனவே, வெற்றிக்குக் காத்திருக்க வேண்டும் என்ற பொறுமையை தோல்வியே கற்றுக் கொடுக்கிறது.
  6. இந்த உலகில் எதுவுமே சும்மா கிடைக்காது. கஷ்டப்பட்டுத்தான் வெற்றியைத் தொட முடியும் என்பது தெரிந்தால்தான், அதன் தனித்தன்மை தெரியவரும்.

இனி, தோல்விகளை சமாளிப்பதற்கான மூன்று வழிகளைப் பார்க்கலாம்.

  • தோல்வியை ஏற்றுக்கொள்ளுங்கள். தோல்வியை முழு மனதுடன் ஏற்றுக்கொள்பவர்களால் மட்டுமே அதனை ஆய்வு செய்து, செய்த தவறுகளைக் கண்டறிய முடியும். எனவே, தோல்வி, துன்பத்தை அப்படியே ஏற்றுக்கொள்வதே முதல் கட்டம். தோல்வி என்பது பாடம் கற்றுக்கொள்ள வேண்டிய பள்ளிக்கூடம். எனவே, தோல்வி ஏன் வந்தது, அது என்ன கற்றுத்தந்தது என்பதை தெளிவாக அறிந்துகொள்ள வேண்டும்.
  • மீண்டும் மீண்டும் தோல்வி அடைந்தாலும், அதில் கிடைத்திருக்கும் முன்னேற்றத்தைக் கொண்டாடுவதற்கு கற்றுக்கொள்ள வேண்டும். அதாவது, பழைய தவறுகளை செய்யாமல், புதிய தவறுகள் காரணமாக தோல்வி கிடைத்திருக்கலாம். இதை ஒரு வகையில் வெற்றியாகவே கருத வேண்டும். தோல்விகள், துக்கங்களில் இருந்து வெற்றி அடைந்தவர்களின் வாழ்க்கை வரலாறுகளை திரும்பத்திரும்ப படிப்பதும், கேட்பதும், பார்ப்பதும் ஊக்கம் தருவதாக அமையும். பிறருக்குக் கிடைத்த பெரிய தோல்விகள் நம் தோல்விகளை சின்னதாகப் பார்ப்பதற்குக் கற்றுக் கொடுக்கும். 
  • மீண்டும் மீண்டும் முயற்சி செய்வது மட்டுமே நமது வேலையாக இருக்க வேண்டும். வெற்றி, தோல்வி பற்றிய எதிர்பார்ப்பு தேவையே இல்லை. ஏனென்றால் வெற்றி, தோல்விக்கு நம்முடைய முயற்சி தவிர ஏகப்பட்ட காரணங்கள் உள்ளன.

தோல்வி, துன்பம், துயரம் வரும்போது, அதை சிரிப்பினால் மறைப்பதற்குப் பழக வேண்டும். எத்தனையோ துன்பங்களைப் பார்த்துவிட்டோம், இதுவெல்லாம் நமக்குப் புதுசா என்று துன்பத்தைப் பார்த்து சிரிக்கப் பழக வேண்டும்.  

தோல்வி, துக்கத்திற்கு சிரிப்பு என்பது மருந்தல்ல. ஆனால், அதுவே ஊக்கமும் நம்பிக்கையும் கொடுக்கும். எனவே, துன்பமும் தோல்வியும் வரும்போது சிரித்துப் பழக வேண்டும். சித்திரமும் கைப்பழக்கம் என்பது போன்று, துன்பத்தைக் கண்டு சிரிப்பதும் கொஞ்சம் கொஞ்சமாக சாத்தியமாகிவிடும்.

Leave a Comment