மகிழ்ச்சி தரும் க்ளைமாக்ஸ்

Image

அலைபாயுதே

உலகம் முழுக்கவே காதல் திரைப்படங்களுக்கு என்று எழுதப்படாத ஒரு இலக்கணம் இருக்கிறது. அதாவது, இருவரும் சந்தித்த தருணத்தில் இருந்து எப்படி காதல் அரும்புகிறது, அவர்கள் எத்தனை தடைகளை சந்தித்த பிறகு ஒன்று சேர்ந்தார்கள் என்பது தான் கதையாக இருக்கும். இருவரும் ஒன்று சேர்ந்ததும் அந்த காதல் ஜெயித்துவிட்டதாக அர்த்தமாகிவிடும்.

இதிலிருந்து கொஞ்சம் மாறுபட்டது அலைபாயுதே. தேடி அலைந்து போராடி வெற்றி அடைவது மட்டும் காதல் அல்ல, காலம் முழுக்க பாதுகாப்பதே காதல் என்பதை இளமைத் துள்ளலுடன் கொடுத்திருப்பார் மணிரத்னம்.

நடிகர் நாசரும் கமீலாவும் வீட்டுக்குத் தெரியாமல் திருமணம் செய்துகொண்டு தனித்தனியே வாழ்ந்ததாக சொல்லப்படும் கதையை, சினிமாவுக்கு மணிரத்னம் மாற்றியதாகச் சொல்வதுண்டு.

அலைபாயுதே என்றதுமே இந்த வசனமே எல்லோருக்கும் நினைவுக்கு வரும். 25 ஆண்டுகளுக்குப் பிறகும் காதலர்களை தெறிக்க விடும் வசனம்.  

ரயில் நிறுத்தங்களின் இடையில் சக்தியின் அருகே வரும் கார்த்திக் “நீ அழகா இருக்கேன்னு நெனக்கல.. நான் உன்னை லவ் பண்ணலே.. ஆனா இதெல்லாம் நடந்துடுமோன்னு பயமா இருக்கு.. யோசிச்சு சொல்லு” என்று தன் காதலைச் சொல்லி விட்டு சட்டென்று அகன்று விடுகிறான். இந்த வசனம் இன்றும் காதலர்களால் சொல்லப்படுகிறது, கேட்கப்படுகிறது.

அலைபாயுதே படத்தின் கதை சின்னது தான். வீட்டுக்குத் தெரியாமல் ரக்சியமாக கல்யாணம் செய்துகொண்டு வாழும் ஒரு ஜோடி, வீட்டை விட்டு வெளியேறி தனியே வாழவேண்டிய சூழல் உருவாகிறது. இந்த புதிய வாழ்க்கைக்குள் சிக்கிக்கொண்டு ஒருவரையொருவர் குற்றம் சொல்லி சண்டை போட்டுக் கொள்கிறார்கள். அவர்களுக்குள் தொலைந்துபோன காதலை மீண்டும் எப்படி கண்டுபிடிக்கிறார்கள் என்பது தான் கதை.

இதனை நேரடியாக சொன்னால் சுவாரஸ்யமாக இருக்காது என்பதாலே நான்லீனியர் வகையில் திரைக்கதை அமைக்கப்பட்டிருக்கும். தன்னுடைய மனைவி ஷாலினியைக் காணவில்லை என்று மாதவன் பைக்கில் பதைபதைப்புடன் தேடிக்கொண்டிருக்கும் நேரத்தில், ஃப்ளாஷ்பேக்கில் மாதவனின் பழைய வாழ்க்கை காட்டப்படும்.

எனர்ஜி பொங்கும் இளைஞனாக தலையில ஹெட்போன் மாட்டி, சிரிச்சுக்கிட்டே என்றென்றும் புன்னகை என்று கார்த்திக் பைக்கில் கிளம்பியதும் படமும் றெக்கை கட்டி பறக்கத் தொடங்கும். நண்பரின் திருமணத்தில் ஷக்தியைப் பார்த்ததும் மனதைப் பறிகொடுக்கிறார். சென்னையில் மருத்துவக் கல்லூரி மாணவி என்றதும் அவளை தேடிக் கண்டுபிடித்து விரட்டி விரட்டிக் காதலிக்கிறார். அவரது குறும்பும் தைரியமும் ஷக்திக்கும் பிடிக்கிறது.

குடும்பத்தில் காதலை ஒப்புக்கொள்ள மறுக்கிறார்கள். கார்த்திக்கை விட்டு தன்னால் பிரிந்திருக்க முடியாது என்பதை உணரும் ஷக்தி ரகசியமாக பதிவுத் திருமணம் செய்து கொண்டு அவரவர் வீட்டில் தனித்தனியாக வாழ்கிறார்கள். ஷக்தியின் அக்காவை கல்யாணம் முடிக்க வரும் மாப்பிள்ளையின் தம்பி ஷக்தியை பெண் கேட்க, திருமணக் குட்டு உடைகிறது. எனவே, இருவரும் வீட்டை விட்டு வெளியேறி தனிக்குடித்தனம் செய்ய நேர்கிறது.

அது வரை இருந்த காதல் மயக்கம் குறைந்து நிஜ உலகம் கண்ணுக்குத் தெரிகிறது. ஒருவரையொருவர் மோதி காயப்படுத்திக் கொள்கிறார்கள். திருமணத்திற்கு முன்பு தன் மீது காதலுடன் இருந்த கார்த்திக், இப்போது அப்படி இல்லை என்று தனக்குள் வேதனைப்படுகிறாள், அதற்காக சண்டை போடுகிறாள்.

ஷக்தியின் அக்கா திருமணம் நின்றுபோனதற்கு தாங்களே காரணம் என்று நினைக்கும் கார்த்திக், அவர்களை ஒன்று சேர்த்துவைக்கிறான். அது தெரியாத ஷக்தி அவனை சந்தேகப்படுகிறாள். ஒரு கட்டத்தில் உண்மை தெரியவரவே, மகிழ்ச்சியில் மிதக்கிறாள்.

அந்த சந்தோஷத்தில் உலகை மறந்து ரோட்டில் கால் வைக்க காரில் அடித்து வீசப்படுகிறாள். அவள் வீட்டுக்குத் திரும்பவில்லை என்று தான் கார்த்திக் தேடிக்கொண்டிருக்கிறான். காவல் நிலையத்தில் புகார் கொடுத்திருக்கும் கார்த்திக்கைத் தேடி போலீஸ் வருகிறது.

மருத்துவமனையில் ஷக்தி இருக்கிறார் என்பதை கார்த்திக்கிடம் போலீஸ் சொல்வதிலிருந்து க்ளைமாக்ஸ் காட்சி ஆரம்பமாகிறது. ஷக்தியை காரில் மோதியவர் மிகப்பெரிய அதிகாரி என்பதும் அவர்தான் மருத்துவமனையில் சேர்த்து ஆபரேஷன் செய்ய வைத்திருக்கிறார் என்பதும் தெரியவருகிறது.

‘’கடவுள் நம்பிக்கை இருந்தா வேண்டிக்கோங்க, என் மனைவிக்கு எதுவும் ஆச்சின்னா உங்களை யாராலும் காப்பாத்த முடியாது’’ என்று கண்ணீருடன் அரவிந்தசாமியை மிரட்டுகிறான் கார்த்திக்.

அப்போது அவன் அருகிலிருக்கும் குஷ்பு, ‘’அப்படி எதுவும் நடக்காது. அப்படி நடந்தா அதுக்கு முந்தியே நான் செத்துடுவேன்.. நான் தான் கார் ஏத்திட்டேன். அவர் மேல எந்த தப்பும் இல்லை’’ என்று கண்ணீர் மல்கப் பேசுகிறாள்.

தன் மனைவியை சமாதானப்படுத்தும் அரவிந்த்சாமி, ‘’உங்க வைஃப் மேல உசுரையே வைச்சிருக்கீங்க. உங்களை விட்டு அவங்க எங்கேயும் போக மாட்டாங்க’’ என்று நம்பிக்கை தருகிறார். ஐந்து நிமிடங்களுக்கும் குறைவாக வந்து போகும் இந்த காதல் ஜோடியின் கதை ரொம்பவே அழுத்தமானது.

சிகிச்சையில் இருக்கும் ஷக்தி தலையில் கட்டுடன் கண்களை மெல்லத் திறக்கிறாள். அம்மா, அக்கா, கார்த்திக் என எல்லோரையும் பார்க்கிறாள்.

கண்ணீர் பொங்க கார்த்திக் அருகிலிருப்பதைப் பார்த்ததும், ‘’பயந்துட்டியா..?’’ என்று கேட்க, ‘’உசுரே போயிடுச்சு’’ என்று கண் கலங்குகிறான்.

’’பொண்டாட்டி போயிட்டா…’’ என்று ஆரம்பிக்க கார்த்திக் விழிக்கிறான்.

‘’பொண்டாட்டி போயிட்டா ஜாலியா இருக்கலாம்னு பார்த்தியா?’’ என்று அவளுடைய வழக்கமான குறும்புப் பேச்சைக் கேட்டதுமே கார்த்திக்கிற்கு காதல் புரிகிறது. இந்த படம் ஆரம்பத்தில் இருந்து கார்த்திக் ஆயிரம் முறை ஐ லவ் யூ சொல்லியிருப்பான்; ஒரு முறை கூட ஷக்தி ஐ லவ் யூ என்று திருப்பி சொல்லியிருக்கவே மாட்டார். முதன்முறையாக தன் பக்கத்தில் கண்ணீருடன் இருப்பவனைப் பார்த்து, ‘ஐ லவ் யூ’ என்கிறாள்.

‘டிரெயினில் இருந்து விழச்சொன்னா விழுவியா..?’ என்று முன்பு ஷாலினி கேட்ட கேள்விகளை எல்லாம் ஒவ்வொன்றாகத் திருப்பிக் கேட்கிறான் கார்த்திக்.

அத்தனை கேள்விகளுக்கும், ‘ஐ லவ் யூ’ என்பதையே பதிலாகத் தருகிறாள் ஷக்தி.

ஷக்தியின் ஐ லவ் யூவுடன் படம் முடிகிறது. இதை விட வேறு எப்படியும் இந்த படத்தை முடிக்க முடியாது.

மணிரத்னத்தின் மேஜிக் உங்களையும் மெய் மறக்கச் செய்யும். தனிமையில் ஒரு முறை இந்த படத்தின் கிளைமாக்ஸ் காட்சியைப் பாருங்கள். உங்களுக்குள்ளும் காதல் பூக்கும்.

Leave a Comment