மகிழ்ச்சிக்கும் தேவை பயிற்சி

Image

சும்மா எதுவும் கிடைக்காது பாஸ்

காலையில் கண் விழித்தது முதல், இரவு தூங்கச் செல்வது வரையிலும் மகிழ்ச்சியாக இருக்கவேண்டும் என்பதுதான் ஒவ்வொரு மனிதனின் ஆசையும், லட்சியமுமாக இருக்கிறது.

ஆனால், மகிழ்ச்சி மட்டுமே கிடைப்பது சாத்தியமா என்று ஒரு கணம் சிந்திக்க வேண்டும். ஏனென்றால், மகிழ்ச்சியை மட்டுமே எதிர்பார்க்கும்போது ஏமாற்றமும், அதனால் வருத்தங்களும் ஏற்படவே செய்யும். எனவே, இன்பத்தையும் துன்பத்தையும் சமமாக ஏற்றுக்கொள்ள தயாராக இருப்பவர்கள்தான், மகிழ்ச்சி பெறுவதற்கு தகுதியானவர்கள். மேலும், மகிழ்ச்சி என்பது வெளி நபர்கள் மூலம் கிடைப்பதில்லை. அது, உங்களுக்குள்தான் ஒளிந்திருக்கிறது. அதனை வெளியே கொண்டுவருவதற்கு முயற்சியும் கொஞ்சம் பயிற்சியும் மட்டும்தான் தேவை.

ஏனென்றால், மகிழ்ச்சி என்பதற்கான வரையறை ஒவ்வொரு மனிதருக்கும் மாறுபடும். ஒரு மனிதருக்கு மகிழ்ச்சி தரும் ஒரு விஷயம், வேறொருவருக்கு துன்பமாக இருக்கலாம். ஒரு சமயத்தில் மகிழ்ச்சி தருவதுவே, பின்னர் வருத்தம் தருவதாகவும் மாறிவிடுவதுண்டு. மதிய உணவாக பிரியாணி கொடுத்தால் கிடைக்கும் மகிழ்ச்சி, அதையே இரவு உணவாகவும் கொடுத்தால், கிடைப்பதில்லை. எனவே, மகிழ்ச்சி என்பது அவ்வப்போது மாறக்கூடியது என்பதையும் உணர்ந்துகொள்ள வேண்டும்.

அதேநேரம், மகிழ்ச்சியாக இருக்க முடியும் என்பதை ஒருவர் நம்புவது முக்கியம். மேலும், மகிழ்ச்சிக்கு இடையூறாக இருக்கும் ஒருசில விஷயங்களைக் கண்டறிந்து களைய வேண்டும்.

  • கட்டுப்பாடு இல்லாததற்கு கவலை எதற்கு..?

மகிழ்ச்சியின் முதல் எதிரி என்றால் அது, தேவை இல்லாத கவலை. அதுவும் குறிப்பாக நமது கட்டுப்பாட்டில் இல்லாத விஷயங்களுக்காக கவலைப்படுவது. பெரும்பாலோர் கடந்த காலத் தவறுக்காக வருந்துகிறார்கள். நடந்ததை எதுவுமே மாற்ற முடியாது என்று தெரிந்தாலும், அதற்காக வருந்துகிறார்கள். உயிருடன் இருந்த நேரத்தில் பெற்றோரை கவனிக்காமல் அசட்டையாக இருந்துவிட்டு, அவர்கள் செத்தபின்பு, வருந்துகிறார்கள். குறைந்த விலைக்கு நிலத்தை விற்பனை செய்துவிட்டோம் என்பது கவலைப்படுகிறார்கள்.

பரிட்சையில் ஃபெயிலாகிவிடுவோமா..? நீரிழிவு நோயில் இருந்து மீளவே முடியாதா? வேலை போய்விடுமா…? இரவு தூக்கம் வருமா? என்றெல்லாம் நம் கட்டுப்பாட்டில் இல்லாத விஷயங்களுக்காக அச்சப்படுகிறார்கள். நடந்து முடிந்துவிட்டதை அப்படியே ஏற்றுக்கொள்ள வேண்டுமே தவிர, புலம்புவதும் கவலைப்படுவதும் மன அழுத்தமே தரும். மேலும், நிகழ்காலம், எதிர்காலம் குறித்த நம்பிக்கையும் அவசியம். நினைத்தது எல்லாம் உடனடியாக நடந்துவிடாது, அவை நடப்பதற்கு காத்திருக்க வேண்டும் என்பது புரிய வேண்டும். அந்த காலம் கனியும் வரை காத்திருக்கும் பொறுமை மகிழ்ச்சிக்கு மிகமிக அவசியம்.

  • உறவுகளுக்கு மரியாதை

ஒருவருக்கு இன்பம் கொடுப்பதிலும் துன்பம் கொடுப்பதிலும் உறவுகளே முக்கிய இடம் பிடிக்கிறது. உறவு என்பது பெற்றோர், பிள்ளைகள், உறவினர் மட்டுமின்றி நட்பு வட்டாரமும்தான். ஒரு திருமணத்தில் கலந்துகொள்வது மகிழ்ச்ச்சியைக் கொடுக்கலாம். ‘மணப்பெண்ணுக்கு சிவப்பு நிறத்தில் சேலை எடுத்திருக்கலாம், பஃபே முறையில் உணவு பரிமாறியிருக்கலாம்’ என்று சாதாரணமாக அபிப்ராயம் சொல்வதுகூட, சிக்கலை உருவாக்கலாம்.

பிறருடைய விஷயத்தில் தேவையின்றி தலையிடுவது அவசியம் இல்லை. யாரும் கேட்காத வரையில் ஆலோசனையும், அறிவுரையும் சொல்லவே வேண்டாம். அடுத்த தலைமுறையினருக்கு புத்திமதி சொல்கிறேன் என்று பிறர் விஷயத்தில் தலையிடுவது, அவமானமே பெற்றுத்தரும். எல்லோருக்கும் ஒரு வாழ்க்கை இருக்கிறது, அதனை எப்படி வாழவேண்டும் என்பது அவர்களுக்கு நன்றாகவே தெரியும். எனவே, உறவுகளுடன் மிகவும் நெருக்கமாகப் பழக வேண்டாம், அதேநேரம் முழுமையாக விலகவும் வேண்டாம்.

பொதுவாக உறவுக்குள் பணம் கொடுக்கல், வாங்கலில்தான் நிறைய பிரச்னைகள் உருவாகிறது. எனவே, முடிந்த வரை கடன் கொடுப்பதை தவிர்த்துவிடலாம். கண்டிப்பாக பணம் கொடுக்கவேண்டிய சூழல் என்றால், முடிந்த அளவுக்கு குறைந்த தொகையைக் கொடுத்துவிட்டு, அந்த பணம் வராவிட்டாலும் பரவாயில்லை என்ற மனநிலையில் இருப்பது உறவுகளை உயிரோட்டமாக வைத்திருக்கும்.

அதேபோன்று ஒருசிலர் பேசிய கடினமான வார்த்தைகளை, நடந்த சண்டையை மனதில் வைத்திருப்பது அவசியம் இல்லை. ஏனென்றால் தவறு செய்யாத மனிதர்கள் யாரும் இல்லை. நமது பிள்ளைகள் செய்யும் தவறுகளை மன்னிப்பது போன்று, உறவுகள் செய்யும் தவறுகளையும் மன்னிக்கும் குணம் அவசியம். பிறர் செய்த குற்றங்களை, தவறுகளை மனதில் போட்டு அசை போட்டுக்கொண்டே இருந்தால், உடல்நலனும் மனநலனும் பாதிக்கப்படுவதற்கு வாய்ப்பு உண்டு. எனவே, குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை என்ற முதுமொழியை எப்போதும் ஞாபகம் வைத்துக்கொள்ளுங்கள்.

  • பிறருக்காக வாழலாமா?

பிறர் என்ன நினைப்பார்களோ என்பதுதான் பெரும்பாலான மனிதர்களின் கவலையாக இருக்கிறது. அதனால், தங்கள் விருப்பப்படி வாழமுடியாமல் போலி வாழ்க்கையை பலர் நடத்துகிறார்கள். அக்கம்பக்கத்தினர், உறவினர், நட்புவட்டாரத்தில் யாரேனும் ஒருவர் போன்று வாழவேண்டும் என்று லட்சியத்தை வளர்த்துக்கொள்ளாமல், உங்களுடைய வாழ்க்கையை தனித்தன்மையுடன் வகுத்துக்கொள்ளுங்கள்.  

கண்ணில் தெரியும் அனைவரும் சந்தோஷமாக வாழ்வது போலவும், நமக்கு மட்டுமே நிறைய சிக்கல்கள் இருப்பதாக நினைப்பதும் உண்மை அல்ல. ஒவ்வொரு நபரின் வாழ்க்கையிலும் பிரச்னைகள் உண்டு. அது, அவர் அருகே சென்று பார்த்தால் மட்டுமே புரியவரும். எனவே, பிறரை பற்றிய பிரமிப்பு தேவையில்லை.

அதேநேரம், உங்களுக்கு யாருடைய அங்கீகாரமும், பாராட்டும் தேவை இல்லை, இதனால் உங்களுக்குக் கிடைக்கப்போவது எதுவுமில்லை என்பதை புரிந்துகொள்ளுங்கள். அதேநேரம் பிறர் அங்கீகாரத்துக்காக நீங்கள் நிறையவே மாற வேண்டியிருக்கும், போலியாக நடிக்க வேண்டியிருக்கும். எனவே, உங்களுக்கு எது சரியென தோன்றுகிறதோ, அப்படிப்பட்ட வாழ்க்கையை வாழுங்கள்.

உங்கள் நண்பர் 1 கோடி ரூபாயில் வீடு வாங்கிவிட்டார் என்பதற்காக நீங்களும் வாங்க வேண்டியதில்லை. உங்கள் பக்கத்துவீட்டுக்காரரின் குழந்தை கான்வென்ட்டில் படிக்கிறது என்பதற்காக, அதுதான் சிறந்த படிப்பு என்று அர்த்தம் இல்லை. பிறரிடம் என்ன இருக்கிறதோ அதற்காக ஆசைப்படாமல், உங்களிடம் என்ன இருக்கிறதோ, அதற்காக பெருமைப்படுங்கள். உங்களுக்குத் தேவையில்லாத பொருட்களை வாங்காதீர்கள். பிறர் கஷ்டங்களைப் போக்குவதாகச் சொல்லி, அவர்களுடைய சுமையை நீங்கள் வாங்கிக்கொள்ள வேண்டாம்.  

  • சுமையாக இருக்காதீர்கள்

ஒருபோதும் பிறருடைய சுமையாக இருக்காதீர்கள். நீங்கள் பெற்ற பிள்ளை என்றாலும், அவருக்கு உங்களைக் காப்பாற்றும் கடமை இருக்கிறது என்று நினைக்காதீர்கள். முடிந்த வரை உங்கள் கைகளால் வாழுங்கள். இதற்கு முக்கியத் தேவை ஆரோக்கியம். எனவே, உங்கள் உடல் நலனுக்கு எதுவெல்லாம் தேவையோ, அவற்றை எல்லாம் அவசியம் செய்யுங்கள். சத்தான உணவு, போதிய தூக்கம், நடைபயிற்சி என்று வாழ்க்கையை வடிவமைத்துக்கொள்ளுங்கள். ஓரளவு சேமிப்பை எப்போதும் வைத்திருங்கள். அதுதான் உங்களுக்கு நம்பிக்கையைக் கொடுக்கும். அந்த நம்பிக்கையில் இருந்துதான் மகிழ்ச்சியும் கிடைக்கும். சேமிப்பு இல்லை என்றால், அதற்காக வருத்தப்படுவதில் அவசியம் இல்லை. சேமிப்பு இல்லையென்றாலு, மகிழ்ச்சியாக வாழமுடியும் என்ற நம்பிக்கையுடன் காத்திருங்கள்.

உங்களுக்குப் பிடித்த விஷயத்தை செய்வதற்கு தயங்காதீர்கள். சுற்றுலா செல்வதாக இருக்கட்டும், சினிமா பார்ப்பதாக இருக்கட்டும், செல்லப் பிராணிகள் வளர்ப்பதாக இருக்கட்டும். உங்களுக்கு விருப்பமானதை மகிழ்ச்சியுடன் செய்யுங்கள். இதனை செய்வதற்கு யாருடைய அனுமதியும் வேண்டியதில்லை. அதேபோல், உங்கள் ஒவ்வொரு நடவடிக்கையும் அனைவரையும் திருப்திபடுத்துமா இல்லையா என்று கவலைப்படத் தேவையில்லை. அது, உங்களுக்கு மகிழ்ச்சி தருவதுதான் முக்கியம். அதேநேரம், உங்களுடைய எல்லை, பிறரை தொல்லை படுத்துவதாக இருக்கக்கூடாது. எனவே, உங்களுக்கான வட்டத்தில் சந்தோஷமாக செயல்படுங்கள்.

  • டேக் இட் ஈஸி

எல்லாவற்றையும்விட முக்கியமான விஷயம், வாழ்க்கையில் எது நடந்தாலும், அதனை டேக் இட் ஈஸி என்று எடுத்துக்கொள்ளும் மனப்பான்மைதான். கண்ணில் தூசு விழுந்தாலே அழுது ஆர்ப்பாட்டம் செய்யும் நபர்கள் உண்டு, விபத்தில் கால் வெட்டுப்பட்டாலும் உறுதியுடன் நிற்பவர்களும் உண்டு. எல்லாமே நாம் எடுத்துக்கொள்ளும் மனப்பான்மையில்தான் இருக்கிறது.

எனவே, மகிழ்ச்சியான நிகழ்வுகள் நடந்தால் நல்லது, அப்படி இல்லை என்றால் மிகவும் நல்லது என்று எடுத்துக்கொள்ளுங்கள். பின்னர் எது நடந்தாலும் உங்கள் மனதில் மகிழ்ச்சிதான் இருக்கும்.

Leave a Comment