குறை என்று எதுவும் இல்லை
இன்னும் கொஞ்சம் வெள்ளையாகப் பிறந்திருக்கலாம், கொஞ்சம் உயரமாக வளர்ந்திருக்கலாம், பணக்கார வீட்டில் பிறந்திருக்கலாம்’ என்று தங்கள் உடல் மீதும் வாழ்க்கை மீதும் பலருக்கும் நிறையவே குற்றமும், குறையும் உண்டு.
அதேபோல், ‘எனக்கு யாராவது உதவி செய்திருந்தால், சரியான வழியைக் காட்டியிருந்தால், முதலீடுக்குப் பணம் கொடுத்திருந்தால், என் இஷ்டப்படி படிக்க வைத்திருந்தால்…’ என்று தங்கள் தோல்விக்குப் பிறரை காரணம் காட்டுவதும் உண்டு.
ஆனால், ‘குறை என்று எதுவும் இல்லை’ என்று வாழ்ந்துவரும் இரண்டு பேரை மட்டும் இங்கே பாருங்கள்.
கைகளே கால்கள் ciyon clark
ஓஹியோ நகரைச் சேர்ந்த சீயோன் கிளார்க் என்ற 23 வயது இளைஞர் பிறவியிலேயே இரு கால்களும் இல்லாமல் பிறந்துள்ளார். ஆனாலும் மனம் தளராமல் உடற்பயிற்சி மேற்கொண்டு வந்துள்ள இவர், மல்யுத்தம் மற்றும் சக்கர நாற்காலி பந்தயம் உள்ளிட்ட பாராலிம்பிக் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். இந்நிலையில் கைகளால் வேகமாக ஓடி ரெனால்ட்ஸ் என்பவரின் சாதனையை கிளார்க் தற்போது முறியடித்துள்ளார்.
இவர், 20 மீட்டர் தூரத்தை 4 புள்ளி 78 வினாடிகளில் கடந்து சீயோன் கிளார்க் உலக சாதனை படைத்துள்ளார். இது ஒரு கின்னஸ் சாதனை என்பதும் குறிப்பிடத்தக்கது.
இவர், 2022ம் ஆண்டு அக்டோபர் மாதம், லாஸ் ஏஞ்சல்சில் உள்ள ஜிம்மில் மூன்று நிமிடங்களில் கைகளால் அதிக பாக்ஸ் ஜம்ப் மற்றும் அதிக டைமண்ட் புஷ்-அப்கள் எடுத்து கின்னஸ் சாதனை படைத்துள்ளார். மன உறுதியும் விடாமுயற்சியும் இருந்தால் உலக சாதனையை முறியடிக்கமுடியும் என்பதை நிரூபித்திருக்கிறார் சீயோன் கிளார்க்.
கால்களே கைகள் Vitoria Bueno
பிரேசிலில் இருந்து விட்டோரியா புவேனோ கைகள் இல்லாமல் பிறந்தாள். ஆனால், அந்த குறை தெரியாமல் வளர்த்தார்கள். கால்களைக் கொண்டே சாப்பிடுவது, குளிப்பது போன்ற எல்லா செயல்களையும் செய்யத் தொடங்கினாள். ஒரு நாள் தொலைக்காட்சியில் பாலே நடனத்தைப் பார்த்தவள், தானும் அதுபோல் ஆட வேண்டும் என்று ஆசைப்பட்டாள். அவள் ஆசையை பலரும் கிண்டல் செய்தாலும், அவள் கனவு காண்பதை நிறுத்தவில்லை.
பாலே நடனம் ஆடுவதற்கு கால்கள் முக்கியம் என்றாலும், பேலன்ஸ் பண்ணுவதற்கு கைகள் மிகவும் அவசியம். கைகள் இல்லாமலும் தன்னால் பாலே நடனம் ஆட முடியும் என்ற முடிவுக்கு வந்தாள். அப்படியே அமெரிக்காவின் காட் டேலன்ட் ஆல் ஸ்டார்ஸ் 2023ல் பங்கேற்று மாபெரும் சாதனை படைத்திருக்கிறாள்.
இவர்கள் மட்டுமல்ல, இன்னமும் இந்த உலகில் லட்சக்கணக்கான மனிதர்கள் உடலில் சில பாகங்கள் இல்லையென்றாலும், குறை எதுவும் இல்லை என்ற மனநிலையில் முன்னேறிக்கொண்டே செல்கிறார்கள்.
எது கொடுக்கப்பட்டதோ, அது குறை இல்லாத வாழ்க்கை என்று மகிழ்வுடன் ஏற்றுக்கொள்ளுங்கள்.
ஆம், குறை என்று எதுவும் இல்லை.