ஞானகுரு தமிழ் லீடர் 2024 சினிமா விருதுகள்

Image

தமிழ் சினிமா கலைஞர்களை ஊக்குவிக்கும் வகையில் ஞானகுரு தமிழ் லீடர் ஆண்டுதோறும் சிறந்த கலைஞர்களுக்கு விருது அறிவித்து வருகிறது.  அந்த வகையில் 2023ம் ஆண்டுக்குரிய விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. சினிமா மற்றும் பத்திரிகை துறையில் பணியாற்றும் பத்துக்கும் மேற்பட்ட நபர்கள் இணைந்து விருதுக்கு தகுதியானவர்களைத் தேர்ந்தெடுத்துள்ளனர்.

வெற்றி பெற்றவர்களை வாழ்த்துவதில் தமிழ் லீடர் பெருமிதம் கொள்கிறது.

2023ம் ஆண்டு வெளியானதில் கவனிக்கத்தக்க படங்களை கை விரல்களுக்குள் அடக்கிவிடலாம். அதேநேரம், மோசமான படங்களின் எண்ணிக்கை எக்கச்சக்கம். மிக அதிக பொருட்செலவில் எடுக்கப்பட்ட படு மொக்கை திரைப்படம் என்ற விருதை மிக அதிக வாக்குகள் வித்தியாசத்தில் இந்தியன் 2 பெறுகிறது. அதேநேரம், சிறந்த படங்கள் என்ற பட்டியலின் இறுதிச்சுற்றுக்குள் விடுதலை 2, மகாராஜா, லப்பர் பந்து ஆகிய மூன்று படங்கள் மட்டுமே வந்து நின்றன.  

கமல், ரஜினி, விக்ரம், சூர்யா, விஜய் ஆகிய முக்கிய நடிகர்களின் படங்கள் வெளியாகியிருந்தாலும் சிறந்த நடிகர் பட்டியலுக்குள் அவர்கள் எட்டியே பார்க்கவில்லை. கேப்டன் மில்லர், ராயன் ஆகிய இரண்டு படங்களில் வித்தியாசமான கேரக்டர்களில் தனுஷ் நடித்திருந்தார் என்றாலும் கேரக்டர் சொதப்பல் காரணமாக அவரும் சிறந்த நடிகர் என்ற இடத்துக்கு வரவில்லை. விஜய் சேதுபதி இரண்டு படங்களில் கலக்கியிருந்தார். அமரன் படத்தில் சிவகார்த்திகேயன் நிறைய கெட்டப் போட்டிருந்தாலும் சிறந்த நடிகர் பட்டியலுக்குள் வரவில்லை. விஜய் சேதுபதியுடன் போட்டியிட்டவர்கள் மெய்யழகன் கார்த்தியும் லப்பர் பந்து தினேஷும் தான்.

இவர்களில் இருந்து வித்தியாசமாக தனது நடிப்பையும் கதையும் நம்பி படம் இயக்கி, கதாபாத்திரமாகவே வாழ்ந்திருந்த பாரி இளவழகனுக்கு சிறந்த நடிகருக்கான சிறப்பு விருது வழங்கப்படுகிறது. சிறந்த நடிகைக்குப் போட்டியே இல்லை. கண்களாலே கதை பேசி அமரன் படத்தை ஜிலுஜிலுவென மாற்றிய சாய் பல்லவிக்குப் பக்கத்தில் கூட விடுதலை மஞ்சு வாரியர் வரவில்லை.

சிறந்த இயக்குனரை தேர்வு செய்வதில் சிரமம் இருந்தது. வெற்றிமாறன், நிதிலன் சாமிநாதன், பிரேம்குமார், ராஜ்குமார் பெரியசாமி ஆகியோர் மட்டுமே பரீசீலனைக்குள் இருந்தார்கள். சிறந்த அறிமுக இயக்குனராக லப்பர் பந்து இயக்குனர் தமிழரசன் பச்சமுத்து தேர்வு செய்யப்பட்டதால் அவர் இந்த பட்டியலில் இடம்பெறவில்லை. இவர்களில் உண்மைக்குப் பக்கத்தில் ரசிகர்களின் நெஞ்சைத் தொட்டவர் என்ற வகையிலே சிறந்த இயக்குனர் தேர்வு செய்யப்பட்டார்.

சிறந்த அறிமுக இயக்குனர் பட்டியலில் நிறைய பேர் இருந்தாலும் வெற்றிகரமான படம் கொடுத்தவர் என்பதால் தமிழரசன் பச்சமுத்துக்கு எளிதாக விருதை தட்டிச் செல்கிறார். உண்மைக் கதை என்று விடுதலை, அமரன் ஆகிய படங்கள் இருந்தாலும் தமிழ் சினிமாவுக்குப் புதிய கதை என்ற வகையில் நிதிலனுக்கு விருது வழங்கப்படுகிறது.

வசனத்துக்கு நல்ல போட்டி. “வன்முறை எங்க மொழியில்ல, ஆனா எங்களுக்கு அந்த மொழியும் பேசத் தெரியும்”, “தத்துவம் இல்லாத தலைவர்கள் ரசிகர்களை மட்டும் தான் உருவாக்குவார்கள், அது முன்னேற்றத்துக்கு உதவாது” என்றெல்லாம் விடுதலையில் வெற்றிமாறன் சிறப்பாக வசனம் வைத்து கைதட்டல் வாங்கியிருக்கிறார். அதேநேரம், இப்பல்லாம் யாரு சார் சாதி பார்க்கிறா என்று பேசும் இளசுகளின் முகத்தில் அறைவது போல, ‘ஆள்வதற்காகத்தான் அதிகாரம் என நினைச்சுக்கிட்டு இருந்தேன். ஆனால், இங்கே வாழ்வதற்கே அதிகாரம் தேவைப்படுகிறது” என்று இன்றைய தேவையை சுட்டிக்காட்டிய எழுதிய நந்தன் சரவணனுக்கு விருது.

இந்த ஆண்டு இணை நடிகரை தேர்வு செய்வது பெரும் சவாலாக இருந்தது. மெய்யழகன் அரவிந்தசாமி, வேட்டையன் பகத் பாசில், கருடன் சூரி, லப்பர் பந்து ஹரீஸ் கல்யாண் என்று எக்கச்சக்க நடிகர்கள் போட்டியைக் கொடுத்தனர்.

இளையராஜாவை விருது பட்டியலுக்குள் கொண்டுவருவது மரியாதையில்லை. எனவே ஏ.ஆர்.ரகுமான், யுவன் சங்கர் ராஜா, அனிருத் ரவிச்சந்தர், ஷான் ரோல்டன், ஹிப்காப் தமிழா, சந்தோஷ் நாராயண் ஆகிய இசையமைப்பாளர்களுக்கு இடையில் இந்த ஆண்டு அதிகம் ஜொலித்தவர் ஜீ.வி.பிரகாஷ். அமரன் படத்தின் மூலம் மற்ற இசையமைப்பாளர்களை எல்லாம் ஒரேயடியாக ஓவர்டேக் செய்துவிட்டார்.

நகைச்சுவைப் பஞ்சம் தமிழ் சினிமாவில் தலைவிரித்து ஆடுகிறது. சந்தானம், சூரி, யோகிபாபு என்று எல்லோரும் நாயகனாக நடிக்கப் போய்விட்டார்கள். பாலசரவணனை நகைச்சுவை நடிகர் என்று அடக்கிவிடாத அளவுக்கு அற்புதமாக கேரக்டர் ஆர்ட்டிஸ்டாக மின்னியிருந்தார் என்பதே உண்மை. அதேபோல் வில்லனுக்கும் பெரிய அளவுக்குப் போட்டியில்லை. கேரக்டராகவே மாறி சாதி வெறியைக் காட்டியிருந்த பாலாஜி சக்திவேலுக்கு விருது.

மற்ற வெற்றியாளர்களையும் பட்டியலில் அறிந்துகொள்ளுங்கள்.

சிறந்த திரைப்படம்     –        லப்பர் பந்து

சிறந்த நடிகர்           –        விஜய் சேதுபதி (மகாராஜா)

சிறந்த நடிகர் சிறப்பு விருது  –   பாரி இளவழகன் (ஜமா)

சிறந்த நடிகை         –         சாய் பல்லவி (அமரன்)

சிறந்த இயக்குனர்       –       சி.பிரேம்குமார் (மெய்யழகன்)

சிறந்த அறிமுக இயக்குனர்    – தமிழரசன் பச்சமுத்து (லப்பர் பந்து)

சிறந்த கதை, திரைக்கதை    –   நிதிலன் சாமிநாதன் (மகாராஜா)

சிறந்த வசனகர்த்தா    –        இரா.சரவணன் (நந்தன்)

சிறந்த இசையமைப்பாளர்   –    ஜி.வி.பிரகாஷ் (அமரன்)

சிறந்த பாடல்         –         ஹே மின்னலே (அமரன்)

சிறந்த பாடகர்         –         அபி வி (நீலோற்பம் நீரில் இல்லை – இந்தியன் 2)

சிறந்த பாடகி             –     ரக்‌ஷிதா சுரேஷ் (வெண்ணிலவு சாரல் நீ – அமரன்)

பாப்புலர் பாடல்         –       மனசிலாயோ (வேட்டையன்)

சிறந்த எதிர்நாயகன்     –      பாலாஜி சக்திவேல் (நந்தன்)

சிறந்த நகைச்சுவை நடிகர்   –   பால சரவணன் (லப்பர் பந்து)

சிறந்த இணை நடிகர்    –       சூரி (கருடன்)

சிறந்த துணை நடிகை     –     சுவாசிகா (லப்பர் பந்து)

சிறந்த கேமராமென்         –   சித்தார்த்தா நுனி (கேப்டன் மில்லர்)

மரண மொக்கை திரைப்படம் –   இந்தியன் 2

Leave a Comment