கற்பக விருட்சமான பனை மரங்களின் பாதுகாவலர்

Image

என்ன செய்தார் சைதை துரைசாமி – 188

பப்பாளி, மாமரம், தென்னை போன்ற மரங்கள் மட்டும் வளர்த்தால் போதாது, மீண்டும் தமிழகம் முழுக்க பனை மரங்கள் பெருக வேண்டும் என்று மேயர் சைதை துரைசாமி கூறியதைக் கேட்டு மக்கள் ஆச்சர்யமானார்கள். ஏனென்றால் பெருநகர சென்னையில் கிட்டத்தட்ட ஒரு தலைமுறை மக்களுக்கு பனை மரத்தின் நன்மைகளும், அதன் மகிமையும் தெரியவே இல்லை.

நகர்மயமாக்கத்தில் முதலில் அழிக்கப்பட்டவை இந்த பனை மரங்கள்தான். அதனாலே சென்னையில் பனை மரங்களைப் பார்க்கவே முடியாத நிலை உருவாகிவிட்டது. இந்த நிலையில் பனை மரம் பற்றிய விழிப்புணர்வை தமிழகத்தில் மீண்டும் ஏற்படுத்தியவர் மேயர் சைதை துரைசாமி தான். பனை மரமே தமிழர்களின் பராம்பரிய மரம் என்பதால் இதனை மீண்டும் சென்னைக்குக் கொண்டுவர சைதை துரைசாமி உறுதி எடுத்துக்கொண்டார்.

எல்லோரிடமும் பனை மரத்தின் நன்மைகளைப் பரப்பினார். ‘’பனங்கொட்டையை ஒரு முறை நட்டுவிட்டால் போதும், அதன்பிறகு முறையான பராமரிப்பு கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை. இன்னும் சொல்லப்போனால் எப்போதாவது பெய்யக்கூடிய மழையே பனை மரம் வளர்வதற்குப் போதுமானது. கால்நடைகளாலும் மனிதர்களாலும் பனை மரத்திற்கு ஆபத்து வராது. பனை மரத்தின் நுங்கு, பதநீர், பனம் பழம், பனையோலை, பனங்குருத்து, மரம் என அனைத்து பாகங்களும் ஏதேனும் ஒரு வகையில் மக்களுக்குப் பயன் தரக்கூடியது என்பதால் இதனை கற்பக விருட்சம் என்று சொல்வார்கள். எந்த செலவும் செய்யாமல் பனைமரத்திலிருந்து நுங்கு, பதநீர், கருப்பட்டி, பனங்கற்கண்டு, ஓலைகள், விறகு போன்றவற்றை பெற முடியும்.

பனை மரத்தில் செய்யப்பட்ட ஓலைச்சுவடிகளில் தான் நம் தமிழ் மொழியின் அனைத்து நூல்களும் நமக்குக் கிடைத்துள்ளன. ஏழைகள் மற்றும் மகளிர் சுய உதவிக்குழுக்கள் ஓலை, தடுக்கு, கூடை போன்ற பல்வேறு கைவினைப் பொருட்களைச் செய்து வருமானம் ஈட்டுகிறார்கள். இவை எல்லாவற்றையும் விட, பனை மரம் உடலுக்கு நன்மை தரும் மூலிகை மரமாகவே இருக்கிறது.   

இவை எல்லாவற்றையும்விட, பனை மரத்தின் சல்லி வேர்கள்  நீர் மற்றும் காற்றினால் ஏற்படும் மண் அரிப்பைத் தாங்கும் தன்மை கொண்டது. கடற்கரையின் உப்பு நீரிலும் வளரும் தன்மை கொண்டது. அதனால், பெருநகர சென்னை மாநகரின் கடற்கரைகளின் 15 கி.மீ. தூரத்திற்கு 3 மீட்டருக்கு ஒரு பனை மரம் வீதம் நடவு செய்வதற்குத் திட்டமிடப்பட்டது. சென்னை மாநகரத்தில் 20 லட்சம் பனைமரங்களை நட்டு சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் மண் அரிப்பைத் தடுப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இதற்காக அரசின் துணை அமைப்பான காதிகிராப்ட் அமைப்பிடம் முதல் கட்டமாக 5 லட்சம் பனைமரக் கன்றுகள் வழங்கப்பட்டன.

மேயர் சைதை துரைசாமி பனை மரம் பற்றி விழிப்புணர்வூட்டிய பிறகே தமிழகம் முழுக்க பல்வேறு சமூக ஆர்வலர்களும் இந்த விஷயத்தில் கவனம் செலுத்தினார்கள். இப்போது தமிழகம் முழுக்க பனை மரம் மீண்டும் வளர்க்கத் தொடங்கியிருக்கிறார்கள் என்றால், அதற்கு சைதை துரைசாமியின் பங்களிப்பு முக்கியமானது.

  • நாளை பார்க்கலாம்

Leave a Comment