• Home
  • அரசியல்
  • விஜய் கண்களில் பேராசை.. வாய் நிறைய பொய்

விஜய் கண்களில் பேராசை.. வாய் நிறைய பொய்

Image

ஞானகுரு தரிசனம்

நடிகர் விஜய் அரசியல் மாநாட்டில் பேசிய கொள்கை குறித்தும் அவரது அரசியல் வருகை குறித்தும் ஞானகுருவிடம் கேட்டதற்கு, ‘அவர் தானாக வந்ததாகத் தெரியவில்லை ஏனென்றால் வாய் முழுக்க பொய்’ என்கிறார் ஞானகுரு.

இது குறித்து ஞானகுரு, ‘’தொழில் உச்சத்தில் இருக்கும்போது நான் அரசியலுக்கு வந்திருக்கிறேன் என்கிறார். நிஜமான வார்த்தை. ஆனால், அவர் சினிமாவில் இருந்து செலவு மட்டுமே செய்யக்கூடிய சேவையாளராக அல்லது அறக்கட்டளை தொடங்கவோ இல்லை. சினிமாவை விட அதிகம் பணம் சம்பாதிக்கக்கூடிய அரசியலையே தேர்வு செய்திருக்கிறார். அரசியலில் எப்படியெல்லாம் சமாதிக்க முடியும் என்பதற்கு ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி மட்டுமல்ல சீமான், அண்ணாமலை போன்றவர்களும் சாட்சி.

சினிமாவில் உச்சத்தில் இருப்பதாக அவரே சொல்லிக்கொண்டாலும் மாஸ்டருக்குப் பிறகு வந்த பீஸ்ட், வாரிசு, லியோ, கோட் ஆகிய எல்லாமே சொதப்பல் படங்கள். ஆகவே, அவருக்கு ஒரு பிரேக் தேவைப்படுகிறது.

இன்னொரு உண்மை என்னவென்றால், பெற்ற தாய்க்கும், தந்தைக்கும் விஜய் வீட்டில் இடம் இல்லை. அவரை பார்க்கவே எங்களால் முடியாது என்று எஸ்.ஏ.சந்திரசேகர் மீடியாக்களில் வெளிப்படையாகவே குற்றம் சாட்டினார். அவரை இழுத்துவந்து உட்கார வைத்து ஆசிர்வாதம் வாங்குவது மிகப்பெரும் நாடகம்.

சினிமா வாரிசாக இருந்த ஒரே காரணத்தால் சினிமாவுக்குள் நுழைய முடிந்த விஜய், தி.மு.க.வின் குடும்ப அரசியல் குறித்து விமர்சனம் செய்வது தவறான முன்னுதாரணம். தன் மீது அழுக்கு இல்லாத நபரே இன்னொருவர் மீது குற்றம் சுமத்தும் தகுதியுடையவர். விஜய் சினிமாவில் இருந்த வரை பிளாக் அண்ட் ஒயிட் என்ற நடைமுறையில் சம்பளம் வாங்கியவர். அதனாலே ரெய்டுக்கு ஆளானவர். இவர் எப்படி ஊழலை ஒழிப்பார் என்பது ஆச்சர்யமான கேள்வி.

மக்களுக்கு நன்மை செய்வதற்காக அரசியலுக்கு வந்திருப்பதாகச் சொல்கிறார். இதுவரை சினிமாவில் மக்களுக்கு மோசமான வன்முறைகளைப் போதித்தவர் விஜய். மக்களுக்கு நல்ல வழிகாட்டியாகத் திகழவேண்டும் என்பதற்காக தன்னுடைய சினிமாவை ஒரு பள்ளிக்கூடம் போன்று காட்டியவர் எம்.ஜி.ஆர். அவர் அளவுக்கு இல்லை என்றாலும் மது குடிக்காமல், புகை பிடிக்காமல், பெத்த அப்பனை கொல்பவனாக இல்லாமல் விஜய் நடித்திருக்கலாம். ஆக, மக்கள் நலனுக்காக வருவதாகச் சொல்வதும் பொய்.

கடவுள் நம்பிக்கை இல்லாத பெரியார் கொள்கை என்பது மூளை இல்லாத மனிதனுக்குச் சமம். ஜாதி, இன வேறுபாடுகளைக் களைய வேண்டும் என்றால் மதத்தை வேரோடு புடுங்க வேண்டும். அது முடியாது என்றால், பெரியார் படம் என்பது சும்மா அழகுக்கு வைக்கப்படும் பூ ஜாடி போன்றே இருக்கும்.

இத்தனை குளறுபடிகள் இருந்தாலும் விஜய்க்கு முதல்வராகும் ஆசை இருக்கிறது. அந்த ஆசையை வேறு யாரோ ஒருவர் பயன்படுத்துகிறார், விஜய்யை அரசியலுக்குள் இழுக்கிறார். அரசியல் இல்லையென்றால் திரும்பவும் சினிமாவுக்குப் போய்விடலாம் என்று உத்தரவாதம் காரணமாக களத்தில் இறங்குகிறார் என்பதே நிஜம்.

அவர் யார் என்பதை விஜய் மட்டுமே வெளிப்படையாகச் சொல்ல வேண்டும்.

இதனை வீடியோவாகப் பார்க்க…

நடிகர் விஜய் எதற்காக அரசியலுக்கு வந்திருக்கிறார்? actor vijay why entering tamil nadu politics

Leave a Comment