பாட்டி சொன்ன குட்டி வைத்தியம்

Image

ஈஸி ஆரோக்கியம் இரண்டாம் பாகம்

சின்னச்சின்ன விஷயங்களுக்கு எல்லாம் மருத்துவரைத் தேடி ஓடுவது, தேவையே இல்லை. சித்தர்கள் மற்றும் பாட்டி வைத்தியம் கையில் இருந்ததால் நம் முன்னோர்கள் மருத்துவரைத் தேடி ஓடியதே இல்லை. வீட்டில் இருக்கும் பொருட்கள், மூலிகைகள் மூலமே நோயை குணப்படுத்தினார்கள். அப்படி சித்தர்களும் பாட்டிமார்களும் சொன்ன குட்டிக்குட்டி வைத்தியங்களைப் பார்க்கலாம்.

 * மலச்சிக்கலில் இருந்து விடுதலை பெற மாதம் ஒருமுறை (குழந்தைகளுக்கு) கடுங்காபியில் (பால் கலக்காதது) விளக்கெண்ணெய் கலந்து குடிக்க கொடுப்பார்கள். நல்ல பேதியாகும்.

* முற்றின கத்தரிக்காயை தீயில் சுட்டு பிசைந்து அதனுடன் தீயில் சுட்ட காய்ந்த மிளகாய், சிறிய வெங்காயம் போன்றவற்றை வெட்டிப்போட்டு உப்பு சேர்த்து பிசைந்து சாப்பிடுவார்கள். பழைய சாதத்துக்கு தொட்டுக்கொள்ள இது நல்ல காம்பினேஷன். இந்த கூட்டினை அம்மை நோய் பரவும் நேரங்களில் சாப்பிட்டால் நம்மை நோய் தொற்றாது. அந்த அளவுக்கு நோய் எதிர்ப்பு சக்தி படைத்தது.

* சின்ன வெங்காயம் ஒரு கிருமி நாசினியாக செயல்படுகிறது. அம்மை நோய் மற்றும் ஏனைய தொற்றுநோய்கள் பரவும் காலங்களில் சின்ன வெங்காயத்தை வெட்டி வீட்டின் வாசல் மற்றும் ஜன்னல் ஓரங்களில் வைத்துவிட்டால் நம்மை நோய் தாக்காது.

* ஒற்றைத் தலைவலிக்கு பூவரசு மரத்தின் காய்கள் நல்லதொரு மருந்து. அதாவது பசுமையான பூவரசங்காய்களை அரைத்து பற்று போட்டு வந்தால் நிவாரணம் கிடைக்கும்.

* ஆலும் வேலும் பல்லுக்குறுதி என்பார்கள். கிராமங்களில் இன்றைக்கும் ஆல மரத்தின் வேர், வேப்ப மரத்தின் கம்பு (தண்டு) போன்றவற்றை பல் துலக்க பயன்படுத்துகிறார்கள். இதுமட்டுமல்ல நாயுருவி செடியின் வேரை பல் துலக்கினால் பல் ஈறு சம்பந்தமான வியாதிகள் குணமாகும்.

* நுணா எனப்படும் மஞ்சணத்தி மரத்தின் பழங்களை கிராமத்து சிறுவர்கள் விரும்பி சாப்பிடுவார்கள். இது கருப்பு நிறத்தில் ஒருவித நாற்றத்துடன் காணப்படும். இதனால் இதை பீநாரி பழம் என்றும் சொல்வார்கள். இந்த பழத்தை சாப்பிடுவதால் ஆஸ்துமா குணமாகும்.

* நொச்சி இலையை நீரில் போட்டு கொதிக்க வைத்து அதன் ஆவியை முகத்தில் காட்டி வந்தால் ஜலதோஷம் குணமாகும். இதே இலையை நல்லெண்ணையில் போட்டு காய்ச்சி தலைக்கு தேய்த்து (வெந்நீரில்) குளித்து வந்தால் மூக்கடைப்பு, ஜலதோஷம், சைனஸ் கோளாறுகள் விலகும். இலையை தலையணையில் வைத்து தூங்கி வந்தாலும் இந்த கோளாறுகள் சரியாகும்.

* கொசுவை விரட்ட வேப்பிலை, நொச்சி இலைகள் பயன்படுகின்றன. பச்சைப்பசேல் என இருக்கும் வேப்ப இலைகளை பறித்து வந்து வைக்கோலுடன் சேர்த்து மூட்டம் (தீ தணலில்) போட்டால் கொசுக்கள் வராது. மனிதர்களுக்கு மட்டுமல்ல… மழை நேரங்களில் ஆடு, மாடுகளை கடிக்கும் கொசுக்களை விரட்டவும் இது பயன்படுத்தப்படுகிறது.

* பிறந்த குழந்தைகளின் வாயில் வசம்பு தடவுவார்கள். 6 மாதம் ஆன குழந்தையின் நாக்கில் வசம்பு தடவலாம். உரைகல்லில் ஒரு உரசு உரசி நாக்கில் தடவ வேண்டும். இப்படி செய்வதால் குழந்தைகள் சீக்கிரம் பேசுவதுடன் திக்குவாய் போன்ற பிரச்னைகள் வராமல் தடுத்துவிடும்.

* குளவி, தேனீ போன்றவை கொட்டி விட்டால் மரண வேதனை எடுக்கும். அந்த இடத்தில் சுண்ணாம்பு தடவினால் போதும், இன்னும் சிலர் சிறுநீரை மண்ணோடு சேர்த்து தேய்த்து விடுவார்கள். அடுத்த சில நிமிடங்களில் விஷம் குறைந்து வலி பறந்துவிடும்.

* வாதக்கோளாறுகளுக்கு வாதநாராயணன் கீரை நல்ல மருந்து. இதை தனியாக சாப்பிட்டால் ஒருவித வாடை அடிக்கும். எனவே, அதனுடன் முருங்கைக்கீரை, லெச்சக்கொட்டை கீரை போன்றவற்றை சம அளவு சேர்த்து சமைத்து சாப்பிட்டால் வாதக்கோளாறுகள் விலகி நிற்கும். இதை எல்லோருமே சாப்பிடலாம். உடல் உழைப்பு செய்பவர்களுக்கு சில நேரம் அசதியாக இருக்கும். அப்படிப்பட்ட நேரத்தில் வாதநாராயணன் இலையை தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து பொறுக்கும் சூட்டில் (உறங்கப்போகும் முன்) உடம்பில் ஊற்றி வந்தால் வலி பறந்து சுகமான நித்திரை வரும்.

Leave a Comment