பாட்டி சொன்ன குட்டி வைத்தியம்

Image

ஈஸி ஆரோக்கியம் முதல் பாகம்

சின்னச்சின்ன விஷயங்களுக்கு எல்லாம் மருத்துவரைத் தேடி ஓடுவது, தேவையே இல்லை. சித்தர்கள் மற்றும் பாட்டி வைத்தியம் கையில் இருந்ததால் நம் முன்னோர்கள் மருத்துவரைத் தேடி ஓடியதே இல்லை. வீட்டில் இருக்கும் பொருட்கள், மூலிகைகள் மூலமே நோயை குணப்படுத்தினார்கள். அப்படி சித்தர்களும் பாட்டிமார்களும் சொன்ன குட்டிக்குட்டி வைத்தியங்களைப் பார்க்கலாம்.

* கிராமப்புறங்களில் வீடுகளின் முற்றங்களில் காலை வேளையில், மாட்டுச்சாணத்தை நீரில் கரைத்து தெளிப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். மாட்டுச்சாணம் ஒரு கிருமிநாசினியாகும். அதனால்தான நோய்களிலிருந்து தங்களை காத்துக்கொள்ள இந்த பழக்கவழக்கத்தை பின்பற்றுகிறார்கள். அதேபோல் திருநீறு எனப்படும் விபூதி மாட்டுச்சாணத்தை வெயிலில் காய வைத்து தீயில் எரித்து சாம்பலாக்கி அதன்பின் அதை நெற்றியில் பூசுவார்கள். இது தலையில் உள்ள நீரை வெளித்தள்ளும் தன்மை படைத்தது.

*  தலைவலி வந்தால் உடனே சுக்கை எடுத்து உரைகல்லில் சிறிது தண்ணீர் விட்டு உரசி நெற்றியில் பற்று போடுவார்கள். அடுத்த சில நிமிடங்களிலேயே தலைவலி பஞ்சாய் பறந்துவிடும். வலி போனதும் சுக்கு பற்றை கழுவி விட வேண்டும். இல்லையென்றால் எரிச்சல் கொடுக்க ஆரம்பித்துவிடும்.

* விதை பிடிக்காத பிஞ்சு புளியங்காயை பறித்து வந்து காய்ந்த மிளகாய், பூண்டு, உப்பு சேர்த்து  அம்மியில் வைத்து அரைத்து சாப்பிடுவார்கள். இது பித்த சம்பந்தமான வியாதிகள் மற்றும் கிறுகிறுப்பு போன்றவற்றை குணமாக்கக்கூடியது. துவையலை வழித்து எடுத்த பிறகு ஆங்காங்கே ஒட்டிக்கொண்டிருப்பதோடு பழைய சாதத்தை போட்டு விரவி சாப்பிடும்போது கிடைக்கும் சுவையே தனி. இது உடம்புக்கும் நல்லது.

* கருணைக்கிழங்கை வெறுமனே வேக வைத்து சாப்பிட்டால், சுணப்பெடுக்கும். அதாவது அரிக்கும். இதை போக்குவதற்காக கிழங்கை தோலுடன் வேக வைக்கும்போது புளிய இலையைப் போட்டு வேக வைப்பார்கள். செலவில்லாதது மட்டுமல்ல, அரிக்கும் தன்மையை முழுமையாக அகற்றிவிடும்.

* அறுவடை முடிந்ததும் நெல்லை சேமித்து வைக்கும் குதிர், குலுக்கை போன்றவற்றில் கூடவே புங்கை மரத்து இலைகளையும் சேர்த்து வைப்பார்கள். ஏனென்றால், நாளடைவில் அந்துப்பூச்சி என்றொரு வெள்ளை நிற பூச்சிகள் நெல்லை உண்டுவிட்டு அத்தனையையும் பதராக்கிவிடும். அதனால் முன்னெச்சரிக்கையாக இத்தகைய இலைகளை போட்டு வைப்பார்கள். இதேபோல் நொச்சி இலைகளையும் போட்டு வைப்பார்கள்.

* பல்லி எச்சம் நமது உடம்பில் பட்டுவிட்டால் நீர் சுரந்துகொண்டு புண் மாதிரி இருக்கும். அப்படிப்பட்ட நேரத்தில் பனைமரத்தின்மீது கல்லை வைத்து அடித்தால் அதன் சாறு வரும். அதை பல்லி எச்சம் பட்ட இடத்தில் தினமும் காலை வேளையில் தடவி வந்தால் சரியாகிவிடும்.

*  தேனீக்கள் இறக்கை முளைத்து பறப்பதற்குமுன் புழு பருவத்தில்  (அதன்கூட்டில்) இருக்கும்போது எடுத்து சாறு பிழிந்து சாப்பிட்டால் காச நோயாளிகளுக்கு (டி.பி) வரக்கூடிய இருமல் குணமாகும். குத்திருமலுக்கு நல்லது என்று கிராமத்தில் சொல்வார்கள்.

 * அரைக்கீரை மாதிரியே ஒரு வகை கீரை கிராமங்களில் குப்பைமேடுகளில் காணப்படும். இதனால் இதை குப்பைக்கீரை என்பார்கள். இந்த கீரையை சமைத்து சாப்பிடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். ஏழைகேத்த எள்ளுருண்டை என்பார்கள். அப்படியல்ல வைட்டமின் சத்துக்கள் நிறைந்தது அந்தக்கீரை. புளிப்புச்சுவையுள்ள சாணைக்கீரை என்றொரு கீரை வயல்வெளிகளில் காணப்படும். இதனுடன் புளி கொஞ்சம் அதிகமாக சேர்த்து சமைத்து சாப்பிடுவது ஆரோக்கியம் தரும்.

* பனைமரத்தில் இருந்து நுங்கு, பதநீர், கருப்பட்டி போன்றவற்றை மட்டுமே நாம் பயன்படுத்துவோம். ஆனால் கிராமங்களில் பனம்பழம், செங்காயை (காயும், பழமுமாக இருக்கும்) வெட்டிப்போட்டு கருப்பட்டி போட்டு வேக வைத்து சாப்பிடுவார்கள். பனைமரத்தை வெட்டும்போது அதன் உள்ளே இருக்கும் சோறு எனப்படும் சதைப்பகுதியை சிறுவர்கள் சுவைத்து சாப்பிடுவார்கள். பிறகு பனங்கிழங்கை வேக வைத்து அதனுடன் காய்ந்த மிளகாய், வெள்ளைப்பூண்டு, உப்பு சேர்த்து உரலில் போட்டு இடித்து சாப்பிடுவார்கள். இதை குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை சுவைத்து சாப்பிடுவார்கள். வேகவைத்து நன்றாக காய வைத்த பனங்கிழங்கை தூளாக்கி சாப்பிடுவார்கள். இப்படி பல்வேறு நிலைகளில் சாப்பிடும் இந்த பனை உணவுகளை உண்பதால் மலச்சிக்கலிலிருந்து விடுதலை அளிப்பதோடு தேக நலன் தரும். பனங்கிழங்கை எடுத்தபிறகு மண்ணுக்குள் இருக்கும் அதன் கொட்டையை எடுத்து உடைத்து அதில் உள்ள தவுண் எனப்படும் வெள்ளை நிற பொருளை உண்பார்கள். இவையெல்லாம் கிராமங்களில்தான் கிடைக்கும்.

Leave a Comment