நிலவேம்புக் கஷாயம், பப்பாளி இலைச்சாறுக்கு அரசு அங்கீகாரம்

Image

என்ன செய்தார் சைதை துரைசாமி – அத்தியாயம் 79

சித்த மருத்துவத்தின் மூலம் டெங்கு நோயை நிச்சயம் குணப்படுத்த முடியும் என்று கிங் மையம் உறுதி அளித்ததும், மேயர் சைதை துரைசாமி மிகுந்த மகிழ்ச்சி அடைந்தார். ஆங்கில மருத்துவத்தின் ஆதிக்கத்தினால் மதிப்பு குறைந்து போயிருந்த சித்த வைத்தியத்தின் பெருமையை இதன் மூலம் மீண்டும் நிலைநாட்ட முடியும் என்று நம்பினார்.

‘டெங்கு நோய்க்கு எதிராக நிலவேம்பு மற்றும் பப்பாளி இரண்டுமே வீரியத்துடன் நன்கு செயல் புரிகிறது, இதனை மக்கள் பயன்படுத்தலாம். இதனால் பக்கவிளைவுகள் ஏற்படுவதில்லை’ என்று கிங் நோய்த்தடுப்பு மற்றும் ஆய்வு நிறுவனம் கொடுத்திருக்கும் ஆய்வு ரிப்போர்ட்டை உடனடியாக தமிழக முதல்வர் ஜெயலலிதாவிடம் காட்டி, இதனை மக்களுக்கு உடனடியாக கிடைப்பதற்கு ஏற்பாட்டைச் செய்ய வேண்டும் என்று அனுமதி கேட்டார்.

மக்களை பயமுறுத்தும் டெங்கு காய்ச்சலுக்கு மருந்து கிடைத்துவிட்டது என்ற தகவல் ஜெயலலிதாவுக்கும் ரொம்பவே மகிழ்ச்சியைக் கொடுத்தது. இதற்கு கடுமையான முயற்சிகள் மேற்கொண்ட சைதை துரைசாமிக்கு பாராட்டு தெரிவித்ததுடன் உடனடியாக மக்களுக்கு வழங்குவதற்கான அனுமதியும் வழங்கினார். அதோடு, இந்த மருந்துகளுக்கு அரசு அங்கீகாரம் இருக்கிறது என்பதை பொதுமக்கள் அறிந்துகொள்ளும் வகையில் நாளிதழில் விளம்பரம் செய்ய வேண்டும் என்ற சைதை துரைசாமியின் கோரிக்கையையும் நிறைவேற்றினார்.

அதன்படி, ’சித்த மருத்துவத்தின் நிலவேம்புக் கஷாயம் மற்றும் பப்பாளி இலை சாறுக்கு அரசு அங்கீகாரம் இருக்கிறது என்பதை பொதுமக்கள் தெரிந்துகொள்வதற்கு வசதியாக,  பிரபல நாளிதழ்களில்,  அரசு சுகாதாரத் துறை  மூலம் முழுப்பக்க விளம்பரம் கொடுக்கப்பட்டது. 

சித்த மருந்துக்கு அரசு அங்கீகாரம் கொடுத்து முழுப்பக்க விளம்பரம் மூலம் மக்களுக்குத் தெரியப்படுத்தியது வரலாற்றில் இதுவே முதல் முறை ஆகும். இந்த செய்தி தமிழகம் முழுக்க அத்தனை பகுதி மக்களுக்கும் காற்றை விட வேகமாகப் பரவியது.

  • நாளை பார்க்கலாம்.

Leave a Comment