குழந்தைகள் ஜாக்கிரதை
நம் நாட்டில் மட்டுமின்றி, உலகம் முழுமையாகவே குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருகிறது. ஆண், பெண் என்ற பாகுபாடு இல்லாமல் 80 சதவீத குழந்தைகள், ஏதோ ஒரு வகையில், பாலியல் சீண்டல்களுக்கு ஆளாக நேரிடுகிறது. குறிப்பாக, பெற்றோரின் நம்பிக்கைக்கு பாத்திரமானவர்கள், உறவினர்களே இந்த குற்றச்சம்பவங்களில் ஈடுபடுவர்களாக இருக்கின்றனர் என்பதுதான் அதிர்ச்சி.
பாலியல் வன்முறைக்கு உட்பட்ட குழந்தைகள் அனைவரும், குட் டச், பேட் டச் எதுவென வித்தியாசம் தெரியாததுதான் காரணம். கண்ணுக்குத் தெரியாத ஆபத்துகளைப் பற்றி இன்றைய குழந்தைகளுக்குத் தெரியப்படுத்துவதே அவர்களின் நிகழ்காலத்திற்கும் சிறப்பான எதிர்காலத்திற்கும் நல்லது.
ஆகையால் பெண் குழந்தைகளுக்கும் ஆண் குழந்தைகளுக்கும் இரண்டு வயது முதலே, ‘குட் டச்’, ‘பேட் டச்’ பற்றியும் சொல்லித்தர வேண்டும். பேட் டச் யாராவது செய்தால், அடுத்தகட்டமாக என்ன செய்ய வேண்டும் என்பது குறித்தும் விழிப்பணர்வு ஏற்படுத்த வேண்டியது கட்டாயம். உங்களின் குழந்தைகளுக்கு பாலியில் ரீதியான தொந்தரவு தரும் தொடுதல் பற்றி தெளிவுபடுத்துவதற்கு கூச்சப்படுவதில் அர்த்தமே இல்லை. உங்களுக்கு கூச்சமாக இருந்தால், ஆசிரியர் அல்லது வீட்டுப் பெரியவர்கள் மூலம் கற்பிக்கலாம். குழந்தைகள், நீங்கள் சொல்வதைப் புரிந்துகொள்ள ஆரம்பிக்கும் நேரத்தில் அதாவது பள்ளியில் சேர்க்கும் 3வது வருடத்திலேயே, தொடுதல் பற்றிய விழிப்புணர்வைப் பற்றி நீங்கள் கற்பிக்கத் தொடங்கலாம்.
நீங்கள் என்ன சொல்கிறீர்கள் என்பதைப் புரிந்துகொள்ள உங்கள் பிள்ளை மிகவும் இளமையாக இருப்பது பற்றி நீங்கள் கவலைப்பட வேண்டியதில்லை.
அவர்கள் வளரும்போது வளர்ச்சிக்கேற்ற விழிப்புணர்வை படிப்படியாக நீங்கள் அதிகரிக்க வேண்டும். நீங்கள் முதலில் மனித உடலின் பாகங்களைப் பற்றி அவர்களுக்கு கற்பிக்க வேண்டும். பிள்ளைகள் தங்களின் உடலின் சில பகுதிகள் அந்தரங்கமானது என்பதை குழந்தைப் பருவத்திலிருந்தே உணர்கிறார்கள். ஆகையால், அவர்களுக்கான பாடப் புத்தகம், படங்கள், கார்ட்டூன்ஸ், விளையாட்டு, கதைகள் மூலம் குட் டச், பேட் டச் பற்றிச் சொல்லிக்கொடுக்கலாம்.
பாலியல் துன்புறுத்தல் செய்பவர்கள் பேட் என்று சொல்லிக்கொடுத்தால், அப்படிப்பட்ட நபர்களை எளிதில் அடையாளம் காட்டிவிடுவார்கள். இவற்றையெல்லாம் நீங்கள் அவர்களிடம் சொல்வதற்கு முன், அதாவது, இந்த விஷயத்தில் தெளிவாக இருக்க வேண்டும். அதற்காக, உங்கள் அறிவை மேம்படுத்திக்கொள்ள வேண்டும். இவற்றைப் பற்றி ஒரே நாளில் குழந்தைக்குச் சொல்லிக் கொடுக்க முடியாது. ஆகையால், பொறுமையாக சரியான வார்த்தை அல்லது செயல்முறை மூலம் கற்றுத்தர வேண்டும். அவர்கள் உட்கார்ந்து ஓய்வெடுக்கையில் அல்லது அவர்களது விளையாட்டின் இடைப்பட்ட ஓய்வின் போது அவர்களிடம் இதைப் பற்றி பேசலாம்.
சுற்றிலும் பலர் இருக்கும்போது தலையை வருடுவது, கைகளைத் தொடுவது குட் டச். இதில், தவறு இல்லை. ஆனால், உடையால மறைக்கப்பட்ட பகுதிகளான மார்பைத் தொடுவது, தொடைப் பகுதிகளைத் தொடுவது, பின்புறம் மற்றும் பிறப்புறுப்பைத் தொடுவது அல்லது வலிப்பதுபோல அழுத்தமாகக் கிள்ளுவது போன்ற செய்கைகள் எல்லாம் பேட் டச். இவற்றை நீங்களும் செய்யாதீர்கள். மற்றவர்கள் செய்யவும் அனுமதிக்க விடாதீர்கள். யாராவது அப்படியான பேட் டச்களை செய்ய முயன்றால், நோ எனக் கத்தச் சொல்லுங்கள். பிறகு, அங்கிருந்து நீங்கள் இருக்கும் இடத்துக்கு வந்துவிடச் சொல்லிக்கொடுங்கள். அதன்பிறகு, அங்கு நடந்தது குறித்து பேசச் சொல்லுங்கள். அதாவது, no, go, tell என மூன்றையும் குழந்தைக்கு அவசியமாகச் சொல்லிக்கொடுங்கள்.
இது தவிர்த்து குறிப்பாக, வேலைக்குச் செல்லும் பெற்றோர் குழந்தைகளை பக்கத்து வீட்டில் விடுவதும், தமது வீட்டிலேயே தனியாக இருக்க விடுவதும் தவறு. அக்குழந்தைக்கு உரிய பாதுகாப்பை ஏற்படுத்த வேண்டியது பெற்றோர் கடமை. விழிப்புணர்வு இல்லாத குழந்தைகள், தனக்கு நடக்கும் தவறை இயல்பாக கருதி, அதை தொடர அனுமதியளித்து விடுகின்றனர். மேலும் குழந்தைக்குத் தெரியாதவர்களிடமிருந்து பரிசுப் பொருளோ, சாக்லேட் போன்றவற்றை வாங்கக்கூடாது என்று சொல்லுங்கள்.
உங்கள் குழந்தையின் உடல், அவர்களுக்கே சொந்தம் எனவும், யாரும் அதை அனுமதிக்கக் கூடாது என்றும் அவரிடம் எடுத்துச் சொல்லுங்கள். உங்கள் குழந்தைகள் திடீரென யாராவது புதிய நபரிடம் அதிகமாக நெருங்கிப் பழகினால் உடனே அந்த நபர் மீது சந்தேகம் கொள்வதில் தவறில்லை. ஏன் இந்த திடீர் நெருக்கம் என்று நீங்கள் தெரிந்துகொள்ளுங்கள். ஏனெனில் குழந்தைகளை பாலியல் ரீதியாக ஏமாற்ற வேண்டுமென்றால், சில வக்கிர ஜென்மங்கள் முதலில் குழந்தைகளுடன் நெருங்கிப் பழகுவார்கள். சாக்லேட், ஐஸ்க்ரீம் கொடுத்து அன்பை வளர்த்துக்கொள்வார்கள். அதனால், மிகவும் உஷாராக கவனியுங்கள்.
உங்கள் குழந்தைகள் பாதுகாப்பாக இருக்க, தினமும் அவர்களை சுற்றி நடப்பதை யாராவது ஒருவரிடம் கட்டாயம் பகிர்ந்துகொள்ள வேண்டும். அந்த நபர் குழந்தைகள் மட்டுமின்றி நீங்களும் நம்பும் நபராக இருக்க வேண்டும். இதுபோல் மொத்தம் 5 நபர்களை உங்கள் குழந்தைகள் தேர்ந்தெடுக்க வேண்டும். அந்த 3 பேரில் ஒருவர், நிச்சயம் உங்கள் குழந்தை மற்றும் நீங்கள் நம்பும் ஆசிரியரும் இருக்க வேண்டும். அப்போதுதான் பள்ளியில் ஏதேனும் நடந்தால் உடனே அந்த ஆசிரியரிடம் அவர்கள் கூறுவார்கள். ஆசிரியர் மூலம் நீங்கள் விஷயத்தை தெரிந்துகொள்ளலாம். வகுப்பு முடிந்து வேறு வகுப்பு போனதும், பழைய ஆசிரியரை மாற்றிவிட்டு புதிய ஆசிரியரை அந்த 3 பேர் பட்டியலுக்குள் கொண்டுவாருங்கள்.
மேலும் ஆண் குழந்தையையும் பெண் குழந்தையையும் சமமாக பாவித்து பெற்றோர் நடத்த வேண்டும். பிள்ளைகளுக்கு பெண்களை மதிக்க கற்றுக் கொடுக்க வேண்டும். பாலியல் கல்வியையும், பெண்களை சமமாக மதிக்கும் போக்கையும் அடிமட்டத்தில் இருக்கும் ஆண்களுக்கு சொல்லிக் கொடுப்பது அவசியம்.
உங்கள் குழந்தை ஒருவேளை பாலியல் கொடுமைகளைச் சந்தித்திருந்தால் இதன்மூலம் தெரிந்துகொள்ளுங்கள். அதாவது, நன்றாக சிரித்துப் பேசி குறும்பு செய்யும் குழந்தைகள் திடீரென அமைதியாகிவிடுவார்கள். அதிகம் பேசாமல் தனியாகவே இருக்கவும் விரும்புவார்கள். சக நண்பர்களோடும், சுற்றியிருப்பவர்களோடும் சகஜமாக பழகத் தயங்குவார்கள். குறிப்பிட்ட ஒரு நபரைக் கண்டு பயம்கொள்வார்கள். தூக்கத்தில் திடீரென அழலாம் அல்லது கெட்ட கனவுகள் காணலாம். அதிகமாக கோபப்படவும் வாய்ப்புகள் உண்டு.
சிறிய வயதிலேயே பாலியல் கொடுமைகளைச் சந்திக்கும் குழந்தைகளுக்கு உடல் நலம் மற்றும் மனநலம் அதிகமாக பாதிக்கும் வாய்ப்பு உள்ளது. பெண் குழந்தைகளாக இருந்தால், சிறிய வயதிலேயே கர்ப்பப்பை பாதிக்கப்படும். இரு பாலின குழந்தைகளுக்கும் மன உளைச்சல் ஏற்படும் என்கிறார்கள் மருத்துவ வல்லுநர்கள். ஆகையால், இவற்றை எல்லாம் பெற்றோர்கள் கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டும்.
இப்போது குட் டச், பேட் டச் என்பதை விட டோன்ட் டச் என்பதுதான் முக்கியம் என்று மனநல மருத்துவர்கள் சொல்லிவருகிறார்கள். ஏனென்றால், குழந்தைகளால் வித்தியாசம் அறிவது கடினம் என்பதால், எல்லோருக்கும் டோன்ட் டச் சொல்ல பழக்குங்கள் என்கிறார்கள்.
இதுதான் நல்ல யோசனை.