• Home
  • பணம்
  • உறவினருக்கு தங்கம் விற்றால் வரி கட்டணுமா?

உறவினருக்கு தங்கம் விற்றால் வரி கட்டணுமா?

Image

பணமே ரிலாக்ஸ் ப்ளீஸ்

உலகில் ஏற்பட்டுள்ள பொருளாதார மந்தநிலை மற்றும் தங்கத்தின் உற்பத்தி மற்றும் தேவையில் உள்ள இடைவெளி காரணமாக கடுமையாக உயர்ந்து வரும் தங்கத்தின் விலையைக் கண்டு நடுத்தர மற்றும் ஏழை மக்கள் செய்வதறியாது திகைத்து வருகின்றனர்.

 ஏதாவது ஒரு நேரத்தில் தங்கம் விலை குறைந்தால் உடனடியாக ஆபரண தங்க நகைகளை வாங்கி விடலாம் என்று அதற்கான சந்தர்ப்பத்திற்காக காத்துக் கொண்டிருக்கின்றனர்.

இந்த நிலையில் சராசரி தனிநபர் எவ்வளவு தங்கம் வைக்கலாம்? தங்கத்தை விற்றால் அரசுக்கு எவ்வளவு வருமான வரி கட்ட வேண்டும் மேலும் தங்கம் வைத்துக் கொள்ள இந்திய அரசு விதித்துள்ள சட்ய விதிகள் என்ன சொல்கின்றன என்று பார்க்கப் போகிறோம்.

இந்திய மக்கள்; குறிப்பாக பெண்கள், தங்கத்தின் மீது தீராத மோகம் கொண்டுள்ளனர். மேலும் மக்களின் சேமிப்பு மற்றும் சொத்து மதிப்பில் முக்கிய இடம் பெறுகிறது. ஆபரண நகைகள், தங்க , வெள்ளி நாணயங்கள் அல்லது தங்க முதலீட்டுத் திட்டங்களாக இருந்தாலும், ஏறக்குறைய ஒவ்வொரு குடும்பமும் அவர்களது வசதிக்கு ஏற்ப குறிப்பிட்ட அளவு தங்கத்தை வைத்திருக்கின்றனர்.

மக்களிடம் உள்ள தங்கத்தின் மீதான இந்த ஆர்வம் நாட்டில் பொருளாதார வளர்ச்சிக்கு மிகப்பெரிய அளவில் உதவி செய்து பணவீக்கத்தை கட்டுப்படுத்துகிறது. இந்திய அரசின் புதிய சட்ட விதிகளின்படி இந்திய குடிமக்கள் ஒருவர் வீட்டில் எவ்வளவு தங்கம் வைத்திருக்கலாம் உள்ளிட்ட வரம்புகள் என்பது உங்களுக்குத் தெரியுமா?

 தங்கம் வாங்குவதற்கு முன்பாக அரசாங்கத்தின் விதிமுறைகளை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டியது அவசியம். சமீபத்திய அரசின் திருத்தப்பட்ட சட்ட விதிமுறைகளின்படி, திருமணமான பெண் ஆபரண தங்கம், கட்டி தங்கம் மற்றும் தங்கப் பத்திரங்கள் என 500 கிராம் வரை வைத்திருக்க அனுமதிக்கப்படுகிறது. அதாவது வருமான வரி தாக்கல் செய்யும் திருமணமான பெண் ஒருவர் 62 சவரன் தங்கத்தை வரி எதுவும் செலுத்தாமல் வைத்துக்கொள்ள மத்திய நேரடி வரிகள் வாரியம் (CBDT) சட்டம் அனுமதிக்கிறது.

மேலும் திருமணமாகாத பெண்கள் 250 கிராம் அதாவது 31 சவரன் தங்கமும். குடும்பத்தில் உள்ள தனிநபர் ஆண்கள் 100 கிராம் அதாவது 12.5 சவரன் வரை வரி செலுத்தாமல் வைத்துக்கொள்ள முடியும். பரம்பரை சொத்தாக கிடைக்கும் தங்கத்திற்கு வரி உள்ளதா? வருமான வரி தாக்கலின் போது பரம்பரை சொத்து அல்லது சொத்தில் கிடைத்த பங்கு அல்லது விவசாய வருமானத்தில் வாங்கிய தங்கம் என்று ஆதாரத்துடன் தனிநபர் வருமானம் பத்திரம் தாக்கல் செய்யும் போது மேற்கண்ட தங்கத்திற்கு வரியில் இருந்து விலக்கு வருமான வரி விலக்கு அளிக்கப்படுகிறது.

 வருமான வரிச் சட்டத்தின் பிரிவு 56(2) இன் படி, பெற்றோர் மனைவி அல்லது குழந்தைகளிடமிருந்து தங்கத்தை மாற்றிக்கொள்ளும் போது வருமான வரி விதிக்கப்படாது.  இருப்பினும், 50,000 ரூபாய்க்கு மேல் மதிப்புள்ள தங்கத்தை இரத்த உறவுகள் அல்லாத உறவினர்கள் மற்றும் நண்பர்களிடம் இருந்து வரும் தங்கப் பரிசுகளுக்கு, பிற வருமான பிரிவின் கீழ் வரி விதிக்கப்படுகிறது‌.

மேலும் திருமணத்திற்கு பரிசாக பெறப்படும் தங்க நகைகளுக்கு வரியில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது. அதேநேரத்தில் அந்த தங்கத்தை விற்பனை செய்யும் போது மூலதன ஆதாய வரி விதிக்கப்படுகிறது. வருமான வரி தாக்கலுக்கு பிறகு ஏதாவது காரணத்தால் வருமான வரித்துறை சோதனை நடத்தினால், நிர்ணயிக்கப்பட்ட வரம்புக்குள் உள்ள தங்க நகைகளை அதிகாரிகள் பறிமுதல் செய்ய முடியாது என்பதை கவனிக்கவும்.

மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு தங்கத்தை விற்றால் எவ்வளவு வரி விதிக்கப்படும்?தங்கத்தை 3 வருடங்கள் வைத்திருந்த பிறகு விற்றால், கிடைக்கும் லாபத்தில் இருந்து நீண்ட கால மூலதன ஆதாய வரி (Long Term Capital Gain Tax) அதிகபட்சமாக 20 சதவீதம் மற்றும் 4 முதல் 8% வரை செஸ் வரி விதிக்கப்படுகிறது.

தங்கப் பத்திரங்களை விற்பதற்கு வரி எவ்வளவு?

 இந்திய அரசு வழங்கும் தங்கப் பத்திரங்கள் (Sovereign Gold Bond) பரிமாற்ற வர்த்தக நிதி பத்திரங்கள் ( Exchange Trade Fund) 3 ஆண்டுகளுக்குள் விற்கப்பட்டால், அதன் லாபத்தை தனிநபர் வருமானத்தில் சேர்க்கப்பட்டு அவரின் ஆண்டு வருமான அடிப்படையில் வருமான வரி விதிக்கப்படுகிறது. மேலும் SGB தங்க பத்திரத்தை 3 ஆண்டுகளுக்குப் பிறகு விற்பனை செய்தால் அதன் லாபத்தில் இருந்து 10 முதல் 20% வரை வரி விதிக்கப்படும்.

பத்திரம் முதிர்வு வரை வைத்திருந்தால் லாபத்திற்கு வரி இல்லை.தங்கத்தில் முதலீடு செய்வது சமீபத்தில் அதிகரித்து வருகிறது. ஆனால் தங்கத்தில் மீதான வரி குறித்து பொதுவான விழிப்புணர்வு இல்லாததால் பலர் வரி உள்ளிட்ட சிக்கல்களில் மாட்டிக்கொள்கின்றனர்.

மேற்கண்ட தகவல் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று நம்புகிறோம். உங்களுக்கும் உங்கள் நலன் விரும்பிகளுக்கும் இந்த தகவலை கொண்டு சேர்த்து வருமான வரி சிக்கலில் இருந்து விழிப்புணர்வு கொள்ளுங்கள், நண்பர்களுக்கும் சொல்லுங்கள்.

– மணியன் கலியமூர்த்தி

Leave a Comment