பக்தி என்பது பழக்கம்
இந்த பிரபஞ்சமும் மனிதனும் கடவுளின் விளையாட்டு என்கிறார்கள். உண்மையில் கடவுள் என்பது மனிதன் உருவாக்கிய விளையாட்டு பொம்மைதான். பரிட்சையில் பாஸ் செய்வது தொடங்கி, பல் வலியை சரி செய்வது வரைக்கும் ஒவ்வொரு மனிதனுக்கும் ஏதாவது ஒரு வகையில் கடவுள் தேவைப்படுகிறார். அவனால் எளிதில் செய்யமுடியாத ஒன்றை, கடவுள் முடித்துத்தருவார் என்று நம்புறான்.
அப்படியொரு கடவுள் இருந்தால் தன்னைவிட மேம்பட்டவராக இருப்பார் என்று எண்ணுகிறான். அதனால்தான் நான்கு கைகளும் ஆறு முகங்களும் கொண்ட கடவுளை மனிதன் படைக்கிறான். ஒரு பன்றிக்கு கடவுள் தேவைப்பட்டால், அது நிச்சயம் ஒரு பிரமாண்டமான பன்றியைத்தான் கடவுளாக வழிபடும். ஏனென்றால் அந்த குறியீடுதான் கும்பிடுவதற்கு வசதியாக இருக்கும்.
இந்து மதத்தில் பாம்பு, காகம், மயில் தொடங்கி ஏகப்பட்ட உருவங்கள் கடவுளாக வணங்கப்படுகிறது. கடவுளுக்கு உருவம் இல்லை என்று சொல்லப்படும் இஸ்லாம் மதத்திலும் சில குறியீடுகள் இருக்கின்றன. அதனால் கடவுளை குறிப்பிடும் உருவம், குறியீடுகள் எல்லாமே மனிதன் படைத்தவையே. மனிதனை படைத்தது கடவுள் என்று வைத்துக்கொண்டாலும், பூமியில் இருக்கும் கடவுளை படைத்தது நிச்சயம் மனிதன்தான். அவனவனுக்குத் தெரிந்த வகையில் கடவுளை படைத்துவிட்டான் மனிதன்.
அணுதான் இந்த பிரபஞ்சத்தின் ஆதாரம். ஆனால் அணுவை உடைத்துப் பார்த்தால் ஒளிந்திருக்கும் மின்சாரத்தையும் ஆயுதத்தையும் மட்டுமே பார்க்கமுடியும். கடவுளை எப்போதும் ஆய்வுகள் மூலம் கண்டுபிடிக்க முடியாது. அப்படி கண்டுபிடிக்க முடிந்தால், அவர் பெயர் கடவுளும் அல்ல. அணுவுக்குள், பாற்கடலுக்குள், ஜெருசலேமுக்குள், மெக்கா, மதீனாவுக்குள் கடவுளை கண்டுபிடித்துவிட முடியாது.
இந்த உடலாலும், இந்த கண்களாலும் கடவுளை காண நினைக்கிறான் மனிதன். கடவுள் இந்த உடலைத் தாண்டியவர். அதனால் பக்தி அல்லது தியானத்தால் கடவுளை கண்டறியமுடியும் என்று எண்ணுவது முட்டாள்தனம். கல்லாலும் மண்ணாலும் செய்யப்பட்ட கடவுளை பூதவுடலால் தேடும் எண்ணத்தை முதலில் கைவிட வேண்டும்.
எண்ணங்களால், சிந்தனையால், ஞானத்தால் வடிவமைக்கப்பட்ட கடவுளை, உன்னுடைய மனதால் தேடவேண்டும். அப்போது கடவுள் தட்டுப்படலாம், தட்டுப்படாமலும் போகலாம்.