புதிய பாதை உருவாகட்டும்
’விட்டுக்கொடுப்போர் கெட்டுப்போவதில்லை” என்பது தமிழ் முதுமொழி. விட்டுக்கொடுக்காமல் கெட்டுப்போனவர்கள் பட்டியல் மிக அதிகம். அதுவும் இப்போது, கழுத்தில் ஏறிய தாலியின் மெருகு குறையும் முன்னரே, விவாகரத்து கேட்டு நீதிமன்றத்துக்கு வருகிறார்கள். இதற்கு முக்கியக் காரணம், விட்டுக்கொடுக்கும் குணம் விட்டுப் போனதுதான்.

ஒற்றையடி பாதை பற்றிய கதை உங்களுக்குத் தெரியும் என நினைக்கிறேன். ஒருவர் மட்டுமே செல்லக்கூடிய ஒற்றையடிப் பாதையில், இரண்டு நல்லவர்கள் எதிரெதிரே வந்தால், அங்கு மூன்று பாதை உருவாகும் என்பார்கள். அவர் செல்லட்டும் என இவரும், இவர் செல்லட்டும் என்று அவரும் பாதையில் இருந்து இறங்கி புதிய பாதையில் நடப்பார்கள். அதுவே இரண்டு கெட்டவர்கள் என்றால், அந்த ஒற்றையடிப் பாதை அடைபட்டுப்போய்விடும். ஆம், இருவரும் ஒரே பாதையில் முட்டி மோதி அந்தப் பாதையை அடைத்துவிடுவார்கள். அதனால், விட்டுக்கொடுத்துச் சென்றால் புதிய பாதையும், சந்தோஷமும் கிடைக்கும்.
அப்படித்தான் வாழ்க்கையும். கணவனும் மனைவியும் அவ்வப்போது விட்டுக்கொடுத்து வாழ வேண்டும். எல்லா நேரமும் ஒருவரே விட்டுக்கொடுக்க வேண்டும் என்று எதிர்பார்க்கக்கூடாது. ஒருசிலருக்கு ஒரு கொள்கை இருக்கும். அந்த விஷயத்தில் அவர்கள் விட்டுக்கொடுக்க வேண்டும் என்று எதிர்பார்க்கக்கூடாது. உதாரணமாக கணவனுக்கு ஆன்மிகத்தில் நாட்டம் இல்லை என்றால், கண்டிப்பாக தன்னுடன் கோயிலுக்கு வரவேண்டும் என்று சண்டையிடுவதில் அர்த்தம் இல்லை.
இந்த வாழ்க்கை என்பது குறுகிய காலம் என்பதை புரிந்துகொள்ளுங்கள். இன்னும் எத்தனை நாட்கள் இங்கு வாழ்வோம் என்று தெரியாது. அந்த குறுகிய காலத்தில், யாருடனாவது பகையுடன் வாழத்தான் வேண்டுமா? நம்முடைய கணவன் என்று மனைவியும், என்னுடைய மனைவி என்று விட்டுக்கொடுப்பதில் போட்டியிட வேண்டும். அதுதான் நல்ல தாம்பத்தியத்திற்கு அழகு.
குடும்ப விஷயங்களில் கணவன் – மனைவி இருவரும் எதை விட்டுக்கொடுக்க முடியும், எதை விட்டுக்கொடுக்க முடியாது என முதலில் மனம்விட்டுப் பேசவேண்டும். மனைவிக்கு இரவு நேரத்தில் வெளியே சுற்றுவது பிடிக்காது என்றால், அதற்கு கணவனும் மதிப்பு கொடுத்து, வெளியே சுற்றுவதை குறைத்துக்கொள்ள வேண்டும். அதுபோல், குடும்ப வேலைகளை இருவரும் பகிர்ந்துகொள்ளவும் வேண்டும்.
மேலும், நம் குடும்பத்தையும், நம்மவர்களையும் எப்போதும் எங்கும் யாரிடமும் விட்டுக்கொடுக்காமல் இருக்க வேண்டும். ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து வாழும்போது, எவ்வளவு பெரிய பிரச்சினைகள், போராட்டங்கள் வந்தாலும் சந்தோஷமான வெற்றியுள்ள வாழ்க்கையை வாழலாம். விட்டுக்கொடுக்கும் மனது யாரிடம் உள்ளதோ, அவர்கள் எந்த சூழலிலும் குடும்பத்தை வெற்றிகரமாக நடத்த முடியும். இன்னும் சொல்லப்போனால், விட்டுக்கொடுத்தலே ஓர் உளப்பயிற்சிதான். ஆம், மனதில் உள்ள இறுக்கங்கள் குறைய விட்டுக்கொடுத்துச் செல்லுங்கள். வாழ்க்கை எந்நாளும் சந்தோஷமாக இருக்கும்.