• Home
  • யாக்கை
  • இலவச வைட்டமின் டி எடுத்துக்கோங்க

இலவச வைட்டமின் டி எடுத்துக்கோங்க

Image

நூறு நோய்களில் இருந்து விடுதலை

அமெரிக்க, ஐரோப்பிய நாட்டு மக்கள் வைட்டமின் டி கிடைக்காமல் திண்டாடுகிறார்கள். ஆனால், நம் நாட்டிலோ அள்ளிக் கிடைக்கிறது வைட்டமின் டி. ஆனால், அதை எடுத்துக்கொள்வதற்குத்தான் நம் மக்களிடம் சோம்பேறித்தனம் கொட்டிக் கிடக்கிறது.

உலகிலேயே ஒரு ரூபாய்கூடச் செலவில்லாமல் எளிதாகக் கிடைக்கும் ஒரே சத்து, வைட்டமின் டி மட்டும்தான். தண்ணீர், காற்றுகூட விற்பனைக்கு வந்துவிட்ட இந்தக் காலத்திலும், செலவில்லாமல் கிடைக்கும். இது மறுக்க முடியாத உண்மை. `உடலில் வெயில்பட்டால் போதும், நம் உடல் வைட்டமின் டி யை உருவாக்க ஆரம்பித்துவிடும்’

இந்தியர்கள் இந்த விஷயத்தில் மிகவும் கொடுத்துவைத்தவர்கள். பூமத்தியரேகைக்கு அருகில் வாழ்வதால், அதிகமாகவே கிடைக்கிறது. அதிலும் பெரும்பாலான மாதங்களில் வெயில் நிலவுகிறது. ஆனாலும், ஒரு நாளைக்குத் தேவையான வைட்டமின் டி கிடைக்காமல், பலரும் இந்தச் சத்து தொடர்பான பல நோய்களுக்கு ஆளாகும் நிலை என்பது சற்று முரணாகத்தான் தோன்றுகிறது.

உண்மையில், சூரிய ஒளியிலிருந்து நமக்கு ஒரு நாளைக்குத் தேவையான வைட்டமின் டி கிடைக்குமா அல்லது உணவின் மூலமே பெற முடியுமா என்பதைப் பார்க்கலாம்.

“வைட்டமின் ‘டி’-யை நமது உடல் சூரிய ஒளியின் உதவியோடு உற்பத்தி செய்துகொள்கிறது. சூரிய ஒளியிலிருந்து வரும் புறஊதாக் கதிர்கள் உடலின் சருமப்பகுதியில் படுகின்றன. அப்போது, சருமத்தில் உள்ள திசுக்களால் வளர்சிதை மாற்றம் அடைந்து, இது உற்பத்தி செய்யப்படுகிறது.

பால் பொருள்கள், மீன், முட்டை, இறைச்சி, வெண்ணெய், காய்கறிகள், கீரைகள், பருப்பு வகைகள் போன்றவற்றிலும் வைட்டமின் டி கிடைக்கும். ஆனால், இயற்கையாகக் கிடைக்கும் சூரிய ஒளியின் மூலம்தான் அதிகமாக இச்சத்து உடலுக்குக் கிடைக்கிறது.

இன்றைக்கும் பச்சிளம் குழந்தைகளை இளம் வெயிலில் காட்டும் வழக்கம் சிலரிடம் இருக்கிறது. வைட்டமின் டி கிடைப்பதற்காக இந்தப் பழக்கத்தை நம் முன்னோர்கள் அந்தக் காலத்தில் வைத்திருக்கிறார்கள். இதன் மூலம் எலும்புகளின் வலிமையை அதிகரிக்கச் செய்யும். நம் உடல், கால்சியத்தை உறிஞ்ச உதவும். உயர் ரத்த அழுத்தத்தைக் குறைக்கும். எலும்புப் புற்றுநோய் ஏற்படுவதைத் தடுக்கும். குழந்தைகளின் எலும்பு வளர்ச்சிக்கு உதவும்.

வயதானவர்களின் எலும்பு பலவீனத்தைப் போக்கும். தசைகளின் ஆரோக்கியத்துக்கு உதவும். சரும நோய்களிலிருந்து பாதுகாக்கும். மூட்டுகளில் உண்டாகும் வலியைத் தடுக்கும் குணம் இதற்கு உண்டு. ரத்தத்தில் உள்ள சர்க்கரையை எரிக்க உதவும். திசுக்களின் வளர்ச்சிக்கும் உதவும்.

வைட்டமின் டி குறைபாடு

உடலில் 20 நானோகிராமுக்கும் குறைவாக இருப்பதையே வைட்டமின் டி குறைபாடு என்கிறோம். இதன் காரணமாக நூற்றுக்கும் மேற்பட்ட நோய்கள் வருகின்றன. முதுகுவலி, தசைவலி, உடல் வலி, காரணமே இல்லாமல் உடல் சோர்வு, சிலருக்கு உடலில் இனம்புரியாத வலி இருக்கும். இது போன்ற பிரச்னைக்கு ஆளானவர்கள் வைட்டமின் டி பரிசோதனையைச் செய்துகொள்ளலாம். இவற்றை அலட்சியப்படுத்தும் போது எலும்புகள் வலுவிழக்கும், பற்கள் நரம்புகளில் பாதிப்பை உண்டாக்கும்.

இந்த குறைபாட்டை_நிவர்த்தி செய்யாவிட்டால் `ரிக்கட்ஸ்’ என்ற நோயின் தாக்குதலுக்கு ஆளாக நேரிடும். வைட்டமின் டி போதிய அளவு இல்லாத குழந்தைகளின் கால்கள் வில்போல் வளைந்துவிடும். வயிறு உப்புசம். எலும்புகள் வலுவிழந்துவிடும். பற்கள், நரம்புகளில் பாதிப்பு உண்டாகும். பெரியவர்களுக்கு அடிக்கடி சோர்வு ஏற்படுதல், சர்க்கரையானது அடிக்கடி சிறுநீர் மூலமாக வெளித்தள்ளப்படுதல், முதுமைத்தன்மை விரைவில் ஏற்படுதல், எலும்பு அழற்சி, எலும்பு புரை போன்றவை ஏற்படும்.எலும்பு சார்ந்த நோய்கள் உண்டாக வாய்ப்புண்டு,

சிலருக்கு அதிகப்படியான குறைபாடு உண்டாகும் போது முடக்குவாதம், நுரையீரல் பிரச்சனைகளும் அதிகரிக்கலாம்.

தீர்வுகள்

சுமார் 600 யூனிட் முதல் 2 ஆயிரம் யூனிட் வரை ஒரு நாளைக்கு ஒரு மனிதனுக்கு வைட்டமின் தேவை. வயது, உடல் எடையைப் பொறுத்து இதன் தேவை மாறுபடும். குறைந்தபட்சம் வாரத்துக்கு மூன்று நாள்கள், 20 நிமிடங்கள் சூரிய ஒளி நேரடியாகப் படும்படியாக இருந்தாலே போதும். இந்தப் பிரச்னை வராது. உங்கள் குழந்தை வெளியில் போய், வெயில் படும்படியாக விளையாடுகிறதா என்பதைக் கவனிக்க வேண்டும். அப்படி இல்லாத பட்சத்தில், மேலைநாடுகளைப்போல, உணவுகளில் இந்த சத்தைச் சேர்ப்பதைத் தவிர வேறு வழியில்லை.

வயது ஆக ஆகத் தோலில் சுருக்கம் ஏற்பட்டுவிடுவதால், சூரிய ஒளியை உள்வாங்கி வைட்டமின் டி யை உற்பத்தி செய்யும் சக்தி தோலுக்குக் குறைந்துவிடும். வைட்டமின் டி உடலுக்குக் கிடைக்க, தினமும் காலை அல்லது மாலை இளம் வெயிலின் ஒளி உடம்பில் படும்படி பார்த்துக்கொள்வது நல்லது. இந்தச் சத்து நிறைந்துள்ள உணவுகளைச் சேர்த்துக்கொள்ளலாம்.

வைட்டமின் டி உணவுகள்

  • தினமும் ஒரு தம்ளர் பால் குடிப்பதால் உடலுக்குத் தேவையான வைட்டமின் டி சத்தில் 20 சதவீதம் வரை பெற முடியும். பாலில் கால்சியம், பாஸ்பரஸ் மற்றும் ரைபோஃப்ளேவின் உள்ளது. அசைவம் சாப்பிடாதவர்கள் பால் குடிப்பது அவசியம் என்கிறார்கள். பசும்பால் போன்று சோயா பாலிலும் வைட்டமின்களும் தாதுக்களும் நிறைந்திருக்கிறது.
  • பால் பொருள்களில் யோகர்ட் தினமும் சேர்த்து வரலாம். செயற்கை இனிப்புகள் கலந்து வெளியில் விற்கப்படும் யோகர்ட்டை வாங்காமல் வீட்டிலேயே தயாரித்து சாப்பிடுவது மிகவும் நல்லது.
  • உணவு பொருள்களில் காளானில் வைட்டமின் டி அதிகம் உள்ளது. சூரிய ஒளியிலேயே வளரும் இந்த மஷ்ரூமில் வைட்டமின் பி1 பி2 பி5 சத்துகள், காப்பர் போன்றவை நிறைந்திருக்கிறது. அடிக்கடி இதை க்ரேவியாகவோ, பிரியாணியில் சேர்த்தோ சமைத்து சாப்பிடலாம். சூரிய ஒளியினால் திறந்த வெளியில் வளர்க்கப்பட்டு விற்பனை செய்யப்படும் மஷ்ரூம்களில் மட்டுமே வைட்டமின் டி நிறைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
  • அசைவம் சாப்பிடுபவர்கள் அதிகப்படியாக சால்மன் மீன் சேர்த்துவருவது நல்லது. வைட்டமின் டி, கால்சியம், செலினியம், பாஸ்பரஸ் மற்றும் நல்ல கொழுப்பு நிறைந்த மீன் இது. மற்ற மீன்களை காட்டிலும் இந்த மீனில் அதிகப்படியான வைட்டமின் டி இருக்கிறது.  
  • ஆரஞ்சு பழச்சாறு புளிப்பும் இனிப்பும் நிறைந்த இந்த ருசிக்கு மயங்காதவர்கள் யாருமே இல்லை என்பதால் இதை தினமும் எடுத்துகொள்ளலாம். தினமும் காலை உணவோடு ஒரு தம்ளர் ஆரஞ்சு பழச்சாறையும் எடுத்துகொள்ளுங்கள்.இது வைட்டமின் மற்றும் கால்சியம் நிறைந்தது என்பதால் வளர்ந்த நாடுகள் இதை வலியுறுத்துகின்றன.
  • சிலருக்கு பால் குடித்தால் ஒவ்வாமை பிரச்சனை உண்டாகும் இதற்கு மாற்றாக வைட்டமின் டி மற்றும் வைட்டமின் சி நிறைந்த ஆரஞ்சு பழச்சாறு நாளுக்கு வேண்டிய சத்தை கொடுத்துவிடும்.
  • மீன் வாசனையே பிடிக்காதே என்றும் சிலர் சொல்வதுண்டு. அவர்களுக்கு இந்த முட்டையின் மஞ் சள் கரு ஓரளவு பலனளிக்கவே செய்யும். முட்டையின் மஞ்சள் கருவில் கொழுப்பு, வைட்டமின்கள், தாதுக்கள் உள்ளது. சூரிய ஒளி படாமல் ஹார்மோன் ஊசிகள் உதவியால் வளர்க்கப்படும் பிராய்லர் கோழிகளின் முட்டையில் இந்த வைட்டமின்களை எதிர்பார்க்கமுடியாது. நாட்டு கோழிகள் வெயி லில் அலைந்து திரிந்து திறந்த வெளியில் வளரும் கோழிகளிடமிருந்து பெறும் முட்டைகளை எடுத்துகொள்வது நிச்சயம் பலனளிக்கும்.
  • தானியங்கள் எப்போதுமே உடலுக்கு சத்துகளை அளிப்பவையே. அந்த வகையில் ஓட்ஸ் உணவு வைட்டமின்கள், தாதுக்கள், கார்போஹைட்ரேட் கொண்டிருக்கும் உணவு. இது உடல் ஆரோக் கியத்தையும் அதிகரிக்கிறது. வாரம் மூன்று நாள் காலை உணவாக ஓட்ஸ் எடுத்துகொள்வது உங்களுக்கு கிடைக்க வேண்டிய வைட்டமின் டி அளவை ஓரளவு கொடுக்கும்.
  • காட் லிவர் எண்ணெய்யில் வைட்டமின் டி நிறையவே உள்ளது, ஒமேகா 3  கொழுப்பு  அமிலங்களும் நிறைந்து உள்ளன.அவை எலும்பு ஆரோக்கியத்தை மேம்படுத்தும். பெரியவர்களுக்கு  அஸ்டியோபொரோசிஸ் ஏற்படாமல் தடுக்க உதவும்.

இயற்கையை தவிர்க்க முற்படுவதாலே வைட்டமின் டி பற்றாக்குறை உண்டாகிறது. ஆகவே, இயற்கையுடன் இணைந்து வெயிலோடு இணைந்து வாழ்ந்தால் வைட்டமின் டி பற்றாக்குறை இல்லாமல் ஆரோக்கிய வாழ்வு வாழமுடியும்.

Leave a Comment