என்ன செய்தார் சைதை துரைசாமி – 327
ஒரே ஒரு தொழிற்சாலையின் கழிவுகள் முறையாக சுத்திகரிக்கப்படாமல் ஆற்று நீரில் கலப்பதன் மூலம் ஒட்டுமொத்த ஆற்றின் சுகாதாரமும் பாழாகிவிடும். மக்களுக்கு நோய்த் தொற்றுகளும் உண்டாகும். எனவே, கழிவுகளையும் குப்பைகளையும் மேலாண்மை செய்வதற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தார் மேயர் சைதை துரைசாமி.
சென்னை மாநகராட்சியில் முதன்முதலக பாபா அணு ஆராய்ச்சி நிலையத்தின் தொழில்நுட்ப உதவியுடன் புளியந்தோப்பு, ஓட்டேரி, வேலங்காடு, அத்திப்பட்டு போன்ற இடங்களில் குப்பையில் இருந்து மின்சாரம் எடுப்பதற்குப் பணிகள் தொடங்கப்பட்டன. இப்படி மக்கும் குப்பையிலிருந்து உற்பத்தி செய்யப்படும் எரிவாயுவை அம்மா உணவகத்திற்குப் பயன்படுத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. இதன் மூலம் அம்மா உணவகங்களுக்கு செய்யப்படும் செலவுகள் குறையும் என்று மேயர் சைதை துரைசாமி திட்டமிட்டார்.
இதையடுத்து ஆர்.எஸ்.ஆர்.எம் மருத்துவமனை வளாகம், லோகோ பிரதான சாலை, முதல் வட்டசாலை, ஜவஹர்நகர் , 7வது பிரதான சாலை, அண்ணாநகர், விருகம்பாக்கம், சி,ஐ,டி நகர் , பக்தவச்சலம் 3வது பிரதான சாலை, காமராஜ் சாலை , ராஜா அண்ணாமலைபுரம், வேளச்சேரி – தாம்பரம் பிரதான சாலை போன்ற இடங்களில் எரிவாயு உற்பத்தி செய்வதற்கு திட்டமிடப்பட்டன.
இந்த நேரத்தில் சென்னை மாநகராட்சியின் இறைச்சிக் கூடங்களிலிருந்து ஆடு, மாடுகளை இறைச்சிக்காக வெட்டும்போது மாதம்தோறும் 2400 மெட்ரிக் டன் கழிவுகள் வெளியேற்றப்படுவது மேயர் சைதை துரைசாமியின் கவனத்திற்கு வந்தது. இதனை முறைப்படி வெளியேற்றாத காரணத்தால் பல்வேறு நோய்ப் பாதிப்புகளும் சுற்றுச்சூழல் சிக்கல் ஏற்படுவதும் தெரியாந்தது. எனவே, நேரடியாக இறைச்சிக் கூடத்துக்கு வந்து இந்த கழிவுகளை என்ன செய்யலாம் என்று ஆய்வு செய்தார். இந்த கழிவுகளில் இருந்து எரிவாயு தயாரிக்க முடியும் என்பது தெரியவந்ததும், உடனடியாக அதனை நிறைவேற்றுவதற்கு உத்தரவு போட்டார்.
எந்த ஒரு திட்டத்தையும் தள்ளிப்போடுவது சைதை துரைசாமிக்குப் பிடிக்கவே பிடிக்காத செயல். செய்வதை நல்லதாக செய்ய வேண்டும், அதையே இன்றே செய்ய வேண்டும் என்பதே சைதையாரின் கொள்கை.
- நாளை பார்க்கலாம்.