பொதுமக்களுக்கு குப்பை அறிவுறுத்தல்

Image

என்ன செய்தார் சைதை துரைசாமி – 322

தங்கள் வீடு சுத்தமாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் அத்தனை குப்பைகளையும் ஒன்றாகப் போட்டு, வெளியே தூக்கி எறியும் மனப்பான்மை மக்களிடம் காலம்காலமாக இருந்துவருகிறது என்பதை மேயர் சைதை துரைசாமி நன்கு அறிவார். குப்பைகளை பிரித்துப் போடுவதால் என்ன நன்மை, எதற்காக குப்பையைப் பிரித்துத் தர வேண்டும், எவையெல்லாம் மக்கும் குப்பை என்பதெல்லாம் பொதுமக்களுக்குத் தெரிவதில்லை. இதனை அறிந்துகொள்ளவும் அக்கறை காட்டுவதில்லை.

ஆகவே, மக்களுக்கு குப்பை மேலாண்மை குறித்து விழிப்புணர்வு கொண்டுவர வேண்டியது மாநகராட்சியின் கடமை என்று மேயர் சைதை துரைசாமி நினைத்தார். குப்பையில் இருந்து மின்சாரம், உரம், மறுசுழற்சி போன்றவை செய்யப்படுகிறது என்பதை புரிய வைக்க நினைத்தார். இத்தனை பணிகள் நடைபெறுகிறது என்ற புரிதல் இருந்தால் மட்டுமே, அவர்கள் குப்பையைப் பிரித்துத் தருவதற்கு முன்வருவார்கள் என்று விழிப்புணர்வூட்ட முன்வந்தார் மேயர் சைதை துரைசாமி.

எவையெல்லாம் மக்கும் குப்பைகள் என்று மக்களுக்கும் மாணவர்களுக்கும் புரியும் வகையில் தெளிவாக விளக்கம் அளிக்கப்பட்டன. அதாவது, இயற்கையில் இருந்து கிடைக்கும் பொருட்களை மீண்டும் இயற்கையோடு கலப்பதே மக்கும் குப்பை. தினமும் பயன்படுத்தும் காய்கறிகள், பழங்கள், உணவுப் பொருட்களின் கழிவுகள், இலைகள், தேங்காய் நார், சிரட்டை போன்றவை எல்லாம் மக்கும் குப்பையைச் சேர்ந்தவை. இவற்றை மண்ணில் போட்டவுடன் மக்கி மண்ணாகிப் போய்விடும்.  

வீட்டில் இட வசதி இருப்பவர்கள் இந்த வகையான குப்பைகளை சே,மித்து மக்க வைத்து, வீட்டில் இருக்கும் செடிகளுக்கு இயற்கை உரமாகப் பயன்படுத்திக் கொள்ள முடியும். விற்பனையும் செய்யலாம். இதனை தனியாகப் பிரித்து கொடுப்பதன் மூலம், மக்கும் குப்பையில் இருந்து மாநகராட்சி இயற்கை உரங்கள் தயாரிப்பு எளிதாகிறது. இந்த இயற்கை உரங்கள் குறைந்த விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இவை பயிர்களுக்கு எந்த பக்கவிளைவுகளும் தருவதில்லை என்பதுடன் நல்ல விளைச்சலுக்கும் உதவி செய்கிறது.

இதன் மூலம் செலவில்லாமல் இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்க முடியும். இதில் விளையும் உணவுப் பொருட்களால் மக்களுக்கு எந்த பக்கவிளைவுகளும் ஏற்படுவதில்லை. எனவே, மக்கும் இயற்கைப் பொருட்களை அடையாளம் கண்டறிந்து தனியே பிரித்துவைக்க வேண்டும் என்று மேயர் சைதை துரைசாமியே முன்னின்று விழிப்புணர்வூட்டினார்.

  • நாளை பார்க்கலாம்.

Leave a Comment