மகாத்மா காந்தியின் காதல் கடிதம்

Image

நேசத்தை எங்கு தொடங்க வேண்டும்?

ஆயுதம் இன்றி அன்பு மூலமாக உலகை வெல்லமுடியும் என்று நிரூபித்துக்காட்டியவர் மகாத்மா காந்தி. அன்பு என்பது எங்கே தொடங்கவேண்டும் என்பதற்கும் அவரே வழிகாட்டி இருக்கிறார். ஆம், அன்பு முதலில் குடும்பத்தில் தொடங்க வேண்டும். மனைவியை கணவனும் கணவனை மனைவியும் காதலிக்க வேண்டும். அந்த காதல் குழந்தைகளுக்கும், முதியவர்களுக்கும் பரவ வேண்டும். 

பிறருக்கு சொல்வதற்கு முன்பு, அதன்படி தானும் வாழவேண்டும். அப்படித்தான் காந்தியடிகள் வாழவும் செய்தார் என்பதற்கு உதாரணமே இந்தக் கடிதம்.  ஆம், உலகம் போற்றிய அகிம்சை நாயகன் மோகந்த் தன் மனைவி கஸ்தூரிபாவுக்கு தென்னாப்பிரிக்கச் சிறையிலிருந்து எழுதிய கடிதத்திலிருந்து,

“நீ மட்டும் தைரியத்தைக் கைவிடாமல் இருந்து, தேவையான சத்தான ஆகாரங்களையும் எடுத்துக்கொண்டால் உடம்பு சரியாகிவிடும். நான் உன்னை எந்த அளவுக்கு நேசிக்கிறேன் என்றால், நீ இறந்துவிட்டாலும்கூட என்னைப் பொறுத்தவரை வாழ்ந்துகொண்டுதான் இருப்பாய். உன் ஆன்மாவுக்கு மரணமில்லை. நான் அடிக்கடி சொல்லியிருப்பதை மீண்டும் சொல்கிறேன். உன் வியாதி உன்னை எடுத்துச் சென்றுவிடுமானால் நான் இன்னொரு திருமணம் செய்துகொள்ள மாட்டேன்”

இந்தக் கடிதத்தில் நாம் தெரிந்துகொள்ள வேண்டிய சமாச்சாரம் என்னவென்றால், அந்தக் காலத்தில் மனைவிக்கு கடிதம் எழுதுவதே மோசமான கலாசாரமாக பார்க்கப்பட்டது. வீட்டில் தாய், தந்தையருக்குத்தான் கடிதம் எழுதவேண்டும் என்று எழுதப்படாத நியதி இருந்த காலத்தில் தன் மனைவிக்கு, உடல் நலமில்லை என்ற சூழலில் எழுதிய கடிதம் இது. அதேபோன்று இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்த காலத்திலும் தன் மனைவிக்கு ஒரு கடிதம் எழுதினார்.

‘’தினமும் உனக்கு நாலு எழுத்து சொல்லித்தர வேண்டும் என்று நினைக்கிறேன். அப்போதுதான் உன்னுடைய அறியாமை நீங்கி, உலகத்தோடு இணைந்து எப்படி வாழவேண்டும் என்பதை கற்றுக்கொள்வாய்” என்று எழுதியிருக்கிறார்.

கணவனும் மனைவியும் ஒருவரையொருவர் மதிக்க வேண்டும்,  விட்டுக்கொடுத்து வாழ்க்கை நடத்த வேண்டும். அதுதான் வெற்றிகரமான குடும்பத்துக்கு அடிப்படை என்பதற்கு உதாரணமாய் வாழ்ந்தவர்கள் அந்தத் தம்பதியினர்.  

கதர் உடை, ராட்டையில் நூல் நூற்றல், தானே தனக்கான உணவு தயாரித்தல், கழிவறையை தானே சுத்தம் செய்தல் போன்றவற்றை காந்தியடிகளைப் போன்றே கஸ்தூரிபாயும் கடைபிடித்து வந்தார். அதைக் கண்ட ஒரு பணக்காரப் பெண் கஸ்தூரிபாய்க்கு ஒரு கடிதம் எழுதினார்.

அந்தக் கடிதத்தில், “நீங்கள், அவரை மணம் புரிந்துகொண்டதால்தான் வாழ்க்கையில் பல இன்னல்களை அனுபவிக்க வேண்டியிருக்கிறது. நீங்கள் சந்தோஷமாகவும் சுதந்திரமாகவும் வாழ முடியாத அடிமை” என்று எழுதியிருந்தார்.

அதற்கு கஸ்தூரிபாய் உடனடியாக ஒரு பதில் எழுதினார், இதுதான் அந்தக் கடிதம்.
”என் கணவர், என் வாழ்க்கையைத் துன்பம் நிறைந்ததாக ஆக்கிவிட்டார் என்று நீ எப்படிக் கண்டுபிடித்தாயோ தெரியவில்லை. நான் சோகமாக இருந்ததையும் சோறு இல்லாமல் பட்டினி கிடந்ததையும் நீ இங்குவந்து நேரில் பார்த்தவள்போல் அல்லவா பேசுகிறாய்?

எனக்கு வாய்த்ததுபோல் ஒரு கணவர் உலகத்தில் வேறு ஒரு பெண்ணுக்கும் கிடைத்திருக்க முடியாது. இன்றுவரை தக்க காரணமின்றி, அவர் என்னைக் கடிந்துகொண்டதே இல்லை. நான் தவறுசெயதபோது அதைச் சுட்டிக்காட்டித் திருத்தியிருக்கிறார். அவ்வளவுதான். அது, ஒரு கணவனின் உரிமைதானே? என்னிடம் என் கணவர் அளவுகடந்த அன்பு வைத்திருக்கிறார். மனைவிக்குரிய மதிப்பும், மரியாதையும் கொடுத்து என்னுடன் பழகுகிறார்.

எனக்குக் கிடைத்திருக்கும் புகழுக்கெல்லாம் அவர்தான் காரணம். அப்படியிருக்கையில், நான் மகிழ்ச்சி நிறைந்த வாழ்க்கை நடத்தவில்லை என்று எப்படி நீ துணிந்துகூறுகிறாய்? ஒன்று மட்டும் சொல்ல விரும்புகிறேன். தற்காலத்துப் பெண்களைப்போல் எனக்கு நடந்துகொள்ளத் தெரியாது. கணவரைக் கிள்ளுக்கீரையா நினைத்து அதிகாரம் செய்து அவரைத் தம் கைக்குள் போட்டுக்கொள்ள நினைக்கும் நாகரிக மனைவிகள், கணவர் தங்கள் வழிக்கு வராவிட்டால், தங்கள் இஷ்டப்படி வாழ்க்கை நடத்துவதற்குத் துணிந்துவிடுகிறார்கள். அப்படிச் செய்வது இந்து தர்மத்தைப் பின்பற்றும் ஒரு பெண்ணுக்கு அழகல்ல” என்று ஆணித்தரமாக தன்னுடைய கருத்தையும் கணவரின் பெருமையையும், தங்கள் வாழ்க்கையின் உண்மையையும் அதில் உணர்த்தியிருந்தார்.

ஆம். அவர்கள் நினைத்திருந்தால் அரச வாழ்க்கையை வாழ்ந்திருக்க முடியும். சேவகம் செய்வதற்கு எத்தனையோ பேரை பயன்படுத்தியிருக்க முடியும். கோடிகோடியாக பணத்தையும் சொத்துக்களையும் சேர்த்திருக்க முடியும்.

ஆனால், அவர்களுடைய சிந்தனை முழுக்க முழுக்க இந்திய சுதந்திரம் பற்றியும், ஏழைகளின் வறுமை பற்றியும்தான் இருந்தது. எளிமையாக வாழ்வதுதான் வாழ்க்கை என்று பிறருக்கு புரியவைக்கவே அத்தகைய வாழ்க்கை வாழ்ந்தனர். ஆடம்பரமும் அகங்காரமும் அவர்கள் வாழ்க்கையில் இல்லவே இல்லை.

காந்தியடிகள் அளவுக்கு நம்மால் எளிமையாக வாழமுடிகிறதோ இல்லையோ, நம்முடைய துணை மீது அன்பாவது செலுத்துவோம். அதுதான் நம் தேசப்பிதாவுக்கு நாம் செலுத்தும் நன்றிக்கடன்.

Leave a Comment