காந்தி என் ஆரோக்கிய வழிகாட்டி!

Image

எழுத்தாளர் ஜெயமோகன்!

எழுத்தாளர் ஜெயகாந்தனால் ‘தமிழில் எழுதும் இந்திய எழுத்தாளர் ‘என்று குறிப்பிடப்பட்ட எழுத்தாளர் ஜெயமோகனுக்கு அறிமுகம் தேவையில்லை. மொழியில் உள்ள அத்தனை எழுத்து வகைமைகளிலும் எழுதி வருபவர்.

விஷ்ணுபுரம், அறம் போன்றவை இவரது புகழ் பேசும் படைப்புகள். நட்சத்திர எழுத்தாளரான இவரது ஆக்கங்கள் உலகில் பல்வேறு மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு விற்பனையாகி வருகின்றன.

இவர் எழுதிய வெண்முரசு 26 ஆயிரம் பக்கங்கள் கொண்ட உலகின் மெகா நாவல்.

சிறுகதைகள், நாவல்கள் எனப் புனைவுகள் மட்டுமல்ல இலக்கியம், தத்துவம், சமூகம், பண்பாடு, வரலாறு சார்ந்து ஏராளமான அபுனைவுகள் என நூற்றுக்கணக்கான நூல்களை எழுதியிருக்கும் இவர், பரந்த அளவில் வாசகப் பரப்பைக் கொண்டவர்.

நான் கடவுள் தொடங்கி பொன்னின் செல்வன் வரை பல்வேறு திரைப்படங்களில் கதை, வசனம் என்றும் பங்காற்றியவர்.

இவர் ஒரு தனிநபர் அல்ல நிறுவனமாக வளர்ந்து இயக்கமாக மாறி இருப்பவர். எழுத்து எந்திரனான ஜெயமோகன் தனது உடல் ஆரோக்கியம் பற்றி இங்கே பேசுகிறார்:

உணவுப் பழக்கம்!

உணவுப் பழக்கம் மட்டுமல்ல உடல் நலம் பற்றிய என்னுடைய எண்ணங்கள் எல்லாமே காந்தியிலிருந்து தொடங்குகிறது. நான் என்னுடைய 25 வயது வரை என் உடல் நலம் பற்றி உணவுப் பழக்கம் பற்றி எந்தவிதமான கவலையும் இல்லாமல் இருந்தேன்.

கட்டற்ற அலைச்சல் கொண்டிருந்தேன். இந்தியா முழுக்க பிச்சைக்காரனாகச் சுற்றியிருக்கிறேன். மிக மெலிந்து பல்வேறு உடல் நலச்சிக்கல்களுடன் இருந்தேன். தொடர்ந்து தூக்கமின்மை பிரச்சினை இருந்தது. ஆனால் இது எதுவும் முக்கியமில்லை. என்னுடைய அகம் செல்லும் பயணம் மட்டும்தான் முக்கியம் என்ற எண்ணம் எனக்கு இருந்தது. அந்நாட்களில் ஒரு முறை, ஏற்கெனவே நான் பல முறை படித்த காந்தியின் தன் வரலாற்றைப் படித்தேன். அப்போதுதான் உடல் என்பது மிகப் பெரிய ஒரு கருவி என்றும் உள்ளத்தின் எண்ணங்கள் அனைத்தையும் உடலும் சேர்ந்துதான் கட்டுப்படுத்துகிறது என்றும் புரிந்துகொண்டேன்.

உடலுக்கு அப்பால் உள்ளத்திற்கு ஒரு தனி இருப்பு, திசை கிடையாது.  அதிலிருந்து உடலைப் பற்றிய ஒரு கவனம் உருவாகியது.

‘சிந்திக்கும் மனிதன் தன் உடலை எப்போதும் கவனித்துக் கொண்டிருப்பான்’ என்று காந்தி ஒரு இடத்தில் எழுதுகிறார்.

உடல் அளிக்கும் பாடங்கள் உள்ளம் நமக்கு அளிக்கும் பாடங்களையும் விட மிகப் பெரியவை. நம் உடல் வழியாகவே இயற்கையை, இந்த பிரபஞ்சத்தைப் புரிந்துகொள்ள முடியும். நமக்கு மிக அணுக்கமாக உள்ள பிரபஞ்சத்தின் ஒரு அம்சம் என்பது உடல். நமது மனதால் கூர்ந்து அறியத்தக்க பருப்பொருள் என்று ஒன்று உண்டென்றால் அதுவும் உடல்தான். அதன் பிறகுதான் உடல் பற்றிய ஓர் உணர்வை அடைந்தேன்.

என்னுடைய உணவுப் பழக்கம் என்று குறிப்பாக எதுவும் இல்லை.  என்னுடைய வாழ்க்கையில் அப்படிக் குறிப்பான ஓர் உணவுப் பழக்கத்தை வைத்துக் கொள்ளவும் முடியாது.

எல்லாவகையான உணவுகளையும் உண்பேன். அசைவ உணவில் நான் உண்ணாத எதுவுமே இல்லை. மாடு, பன்றியிலிருந்து பாம்பு, முதலை வரை எல்லாவற்றையுமே சாப்பிடக் கூடியவன்.

ஆனால் அந்த உணவு குறைவாக இருக்க வேண்டும் என்பதில் எப்போதும் கவனம் வைத்திருப்பேன். உணவுப் பழக்கம் என்பது வாழ்நாள் முழுக்க ஒன்றாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை. அந்தந்த வயதுக்கான உணவுப் பழக்கங்கள் உண்டு.

இளம் வயதில் நாம் அதிகமான கொழுப்பும் புரதச்சத்தும் கொண்ட உணவை உண்கிறோம். காலப் போக்கில் கொழுப்பு, புரதச்சத்தின் அளவைக் குறைக்கிறோம். என்னுடைய உணவுப் பழக்கம் சென்ற 20 ஆண்டுகளாக ஒரு குறிப்பிட்ட வகையானது.

நான் இரவில் பழங்களை மட்டுமே உண்கிறேன். இதைப் பற்றித் தொடர்ந்து எழுதியிருக்கிறேன். பழங்களை உண்பதனால் மலச்சிக்கல் சார்ந்த எந்தச்  பிரச்சினைகளும் வருவதில்லை.

இரவில் உண்ட உணவு விரைவிலேயே செரிமானாகிவிடுவதனால், இரவு முழுக்க வயிற்றிற்கு முழு ஓய்வு அளிக்கிறேன். இதனால் நல்ல தூக்கம் சாத்தியமாகிறது.  காலையில் உடல் இயல்பாக இருக்கிறது.

ஆனால் இதைச் சர்க்கரை நோய் உள்ளவர்கள் செய்ய முடியாது.

அண்மைக் காலமாக காலையில் கோழி முட்டையின் வெள்ளைக் கருவை மட்டுமே உண்கிறேன். மதியம் வழக்கம் போல எந்த உணவோ அது. இரவில் பழங்கள் ஆனால் இரவு உணவை இரவு ஏழரை மணிக்குள் முடித்துக்கொள்கிறேன்.

மறுநாள் காலையில் பால் இல்லாத சர்க்கரை இல்லாத காபி மட்டும் குடிப்பேன்.  ஒன்பதரை மணிக்கு மீண்டும் கோழி முட்டை. அதாவது, கிட்டத்தட்ட 14 மணி நேரம் என்னுடைய வயிற்றைக் காலியாகவே வைத்திருக்கிறேன். Intermittent Fasting என்று இதைச் சொல்கிறார்கள். இது என்னுடைய எடையைக் கட்டுக்குள் வைப்பதற்கும் உடலை இயல்பாக வைத்திருப்பதற்கும் உதவுகிறது.

ஏனென்றால் மிக அதிகமான நேரம் அமர்ந்து வேலை செய்வவன் நான். என்னுடைய உடலை அதிகமான உழைப்புக்குப் பழக்காதவன். அதற்கு எவ்வளவு தேவையோ அவ்வளவுதான் நானும் உணவு அளிக்க வேண்டும். இரவில் என்னுடைய கல்லீரலுக்குப் போதிய ஓய்வை நான் அளிக்க வேண்டும். இந்த இரு காரணங்களால் இந்த உணவு முறையை நான் கடைப்பிடிக்கிறேன்.

பொதுவாக என்னுடைய உணவில் புரோட்டின் அதிகமாக இருக்கும்படி பார்த்துக்கொள்கிறேன். கரிம உணவுகள் அல்லது மாவுச்சத்து உணவுகள் குறைவாக இருக்கும்படி கவனிக்கிறேன்.

பச்சைக் காய்கறிகள், பழங்கள் எவ்வளவு முடியுமோ அவ்வளவு உண்பது என்னுடைய வழக்கம். குறிப்பாக வயிறு நிறையச் செய்து உடல் நலத்துக்கும் நன்மை செய்து ஆனால் கலோரியும் அதிகமாக அளிக்காத பழமாகிய கொய்யா எனக்கு மிகவும் விருப்பமானது.

பிடித்ததும் தவிர்ப்பதும்!

நான் சிறுவயதில் இருந்தே  நானும் இனிப்பை மிகவும் விரும்பி சாப்பிடக்கூடியவனாக இருந்தேன் . ‘Sweet teeth’ என்று சொல்வார்கள். அந்த அளவிற்கு இனிப்புப் பிரியன்.

ஆனால் சென்ற ஒரு ஆண்டாக எனக்குப் பிடித்த இனிப்பு உண்பதை முழுமையாகவே நிறுத்திவிட்டேன். அதற்கு முன்பு சில ஆண்டுகளாக  இனிப்பில்லாத காபி, தேநீர் அருந்தும் வழக்கம் கொண்டிருக்கிறேன். நமக்குப் பிடித்த உணவு எதுவோ அதுதான் பெரும்பாலும் நமக்குத் தீங்காக இருக்கும் என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.

ஒரு உணவு நமக்கு ஏன் பிடிக்கிறது என்றால் இயற்கையில் அந்த உணவு அரிதானது, அதை எங்கு பார்த்தாலும் நாம் உடனடியாகச் சாப்பிட்டு விட வேண்டும்  என்பதனால்தான், நம் நாக்குக்கு அந்த சுவை அளிக்கப்பட்டுள்ளது. ஒரு பறவை தன்னிச்சையாக உணவு உண்கிறது என்றால் முதலில் அது புரத உணவை உணணும் .அதன் பிறகுதான் மாவுச்சத்து உணவை உண்ணும். இறுதியாகத்தான் அது நார்ச்சத்து உள்ள உணவுகளை உண்ணும். ஏனென்றால் கிடைப்பதில் புரதம் அரிதானது. அந்த பறவைக்கு முன் நீங்கள் புரத உணவை கொட்டிக்கொண்டே இருந்தால் அது மிகையாகச் சாப்பிட்டு உடல் பருமனாகி பறக்க முடியாததாகி விடும்.

மனிதன் இயற்கையாக வாழும்போது அவனுக்குப் புரத உணவு குறைவு. ஆகவே புரதத்தின் மேலும் கொழுப்பின் மேலும் அவனுக்கு நாச்சுவை இருக்கிறது. இனிப்பின் மேலும் நாச்சுவை இருக்கிறது. இவை அரிதானவை .ஆனால் இந்த நாகரிக காலத்தில் உங்களுக்கு எது வேண்டுமானாலும் உடனே கிடைக்கும் என்கிறபோது உங்களுக்குச் சுவையானவற்றை மட்டுமே உண்டீர்கள் என்றால் உடம்பை அழிக்கிறீர்கள் என்றுதான் அர்த்தம். ஆகவே சுவையான எந்த உணவும்  குறைவாகவே உண்ணப்பட வேண்டும் என்பது உணவு உண்பது பற்றிய நெறிகளில் ஒன்று.

உடற்பயிற்சிகள்!

இளைஞர்களுக்கு ஒன்று மற்றவர்களுக்கு ஒன்று என்று பல்வேறு உடற்பயிற்சிகள்  உள்ளன. உடற்பயிற்சிகளில் மிகச் சிறந்தது என்பது யோகா பயிற்சிதான். இது ஒட்டு மொத்தமாக உடலுக்கு ஒரு பயிற்சியை அளிக்கிறது .

குறிப்பட்ட தசைகளைப் பெரிதாக்கிக் காட்டுகிறது. உள்ளுறுப்புகளுக்கும் அதே அளவு பயிற்சி இருக்க வேண்டும். உடற்பயிற்சி என்பதில் உள்ளமும் ஒருங்கிணைந்து அந்தப் பயிற்சி எடுக்க வேண்டும் என்றால் அதற்கு யோகம் தான் சிறந்த வழி. ஆகவே தான் நாங்கள் தொடர்ந்து யோகா பயிச்சி வகுப்புகளை நடத்தி வருகிறோம். நான் அடிப்படியான சில யோகா பயிற்சிகளைச் செய்வதுண்டு.

அதைவிட நடைப்பயிற்சியைத் தவறாமல் செய்து வருகிறேன். ஏனெனில் நான் தொலைபேசியில் நண்பர்களுடன் உரையாடுவது நடைப் பயிற்சியின் போதுதான். என்னுடைய சிந்தனைகளை பேசி ஒலிப்பதிவு செய்து வைத்துக்கொள்வதும் நடைப் பயிற்சியின் போது தான்.

ஒரு நாளைக்கு குறைந்தது ஐந்து கிலோமீட்டர் நடக்க வேண்டும் என்பதை பல ஆண்டுகளாக ஒரு நெறியாக வைத்திருக்கிறேன்.

சிந்திப்பவர்களுக்கு நடைப்பயிற்சி என்பது மிக மிக அவசியமான ஒன்று. அதை இயல்பாகவும் செய்ய முடியும்; வேறு உடற்பயிற்சிகளைச் செய்யும் போது சிந்தனையில் குறுக்கீடு இல்லாமல் தொடர்ந்து ஈடுபட முடியாது. நடை மட்டுமே சிந்தனையை ஊக்குவிக்கக்கூடிய ஓர் உடற்பயிற்சி.

தொடரும் நற்பழக்கம் !

இரவில் பழங்களை மட்டும் உண்பது என்னும் கொள்கை.அதைத் தொடர்ந்து பின்பற்றி வருகிறேன்..

அத்துடன் எனது மூளையை எப்போதும் சுதந்திரமாக வைத்துக்கொள்ள வேண்டும். அதில் ஒரு போதும் ஒருவகையான புகையையும் திரையையும் போட்டுக்கொள்ளக்கூடாது என்று வைத்திருக்கிறேன். ஆகவே நான் போதைப் பொருள் எதையும் பயன்படுத்துவதில்லை. கூடுமான வரைக்கும் ரசாயன மருந்துகளையும் பயன்படுத்துவதில்லை. இதையே ஒரு நல்ல பழக்கம் என்று சொல்லலாம்.

தவிர்க்கும் செயல்கள் என்றால் பொதுவாக உடல், மூளையை மயக்கக் கூடிய போதை சார்ந்த எதையுமே பயன்படுத்துவதில்லை. சிகரெட் போன்றவற்றைப்  பயன்படுத்துவதில்லை. இந்தப் பழக்கங்கள் உடலை நம்மிடமிருந்து அழித்துவிடுகின்றன என்பது என்னுடைய எண்ணம்.

இயற்கையான நல்ல தூக்கம் வரும் வரைக்குத்தான் மூளை ஆரோக்கியமாக இருக்கும். மூளை ஆரோக்கியமாக இருப்பதனால்தான் ஒருவர் அறிவார்ந்து செயல்பட முடிகிறது.

என்னுடைய தளம் அறிவுத்தளம் என்பதால் என்னுடைய மூளையைத் தூய்மையாக, சுதந்திரமாக வைத்துக்கொள்ள எப்போதும் முயல்கிறேன்.  அதற்குத் தடையாக இருப்பவை ஒவ்வொன்றையும் திட்டமிட்டு தவிர்த்துவிடுகிறேன்.

அண்மைக் காலமாக முழுக்க இனிப்பைத் தவிர்ப்பதும் குறிப்பாக வெள்ளைச் சர்க்கரையைத் தவிர்ப்பது அதனால்தான். அது என் மூளைக்கு ஒரு சோர்வை அளிக்கிறது.  மூளைக்குள் ஒரு சுமையை ஆக்குகிறது என்று நானே என்னைக் கூர்ந்து பார்த்துக் கற்றுக்கொண்டு இருக்கிறேன்.

ஆரோக்கிய முன்னோடிகள்!

எனது ஆரோக்கிய முன்னோடி முன்பே சொன்னது போல் காந்திதான். அவரிடமிருந்துதான் இதைக் கற்றுக்கொண்டேன்.

எனக்கு முன்னரே நான் ஆதர்சமாக நினைக்கின்ற இன்னொரு முன்னுதாரணம் என்பவர் ஈ.எம்.எஸ் .நம்பூதிரிபாத், காந்தியிடமிருந்து தான் தனது வாழ்க்கை முறையைக் கற்றுக் கொண்டேன் என்று சொல்கிறார்.

அவரும் எனக்கு முன்னுதாரணம். அம்பாசமுத்திரத்தில் நல்வாழ்வு ஆசிரமம் நடத்தி வந்த ராமகிருஷ்ணன் என்பவர் இன்னொருவர்.

85 வாக்கில் அவரைச் சந்தித்திருக்கிறேன். அப்போது கட்டற்ற வாழ்க்கையாக இருந்த எனக்குத் தொடர்ந்து அமீபியாசிஸ் தொந்தரவு வயிற்றில் இருந்தது. நிரந்தரமாகக் குணப்படுத்த முடியாத நிலையில், அவர் தான் சமைக்காத உணவை உண்பது என் குடலை தூய்மைப்படுத்தும் என்ற ஆலோசனையைக் கூறினார் .

அவருடைய கொள்கையே உணவைச் சமைக்காமல் உண்ணவேண்டும் என்பதுதான். ஆகவே பச்சைக் காய்கறிகளை மட்டும் இரவிலும் காலையிலும் சாப்பிட ஆரம்பித்தேன். ஆறு மாதங்களில் முற்றாகக் குணமடைந்தேன்.

அதிலிருந்து இரவில் பழம் என்பதை ஒரு நெறியாகக் கொண்டிருக்கிறேன்.

என்னுடைய ஆரோக்கியத்தின் பின்னணி என்பது, ஓர் எழுத்தாளனாக என்னுடைய கனவுகள் மிகப் பெரியவை. பெரிய நாவல்கள், பெரிய தத்துவ சிந்தனை நூல்களெல்லாம் எழுதவேண்டும் என்ற எண்ணம் எனக்கு இளவயதிலேயே இருந்தது.

அவற்றை நான் செய்ய வேண்டும் என்றால் என்னுடைய உடல் ஆரோக்கியமாக இருக்க வேண்டும்.  இந்தியச் சூழலில் ஒருவருக்கு  அறிவார்ந்த விஷயங்களில் ஈடுபடுவதற்கான நேரம் மிகவும் குறைவாகத்தான் கிடைக்கிறது .

இங்கே ஒருவர் வேலை பார்க்க வேண்டும், அந்த உழைப்பில்தான் வாழ முடியும். இதற்கு அப்பால் குடும்பத்திற்கான பொறுப்புகளை அவர்தான் செய்ய வேண்டும். இவ்வளவுக்கும் பிறகு கிடைக்கும் நேரத்தில்தான் எதையாவது சாதிக்க முடியும், தனக்கென்று எதையாவது செய்ய முடியும்.

அப்படி அந்த நேரத்தைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டுமென்றால் முழு நாளும் ஆரோக்கியமாகவும் சுறுசுறுப்பாகவும் இருக்க வேண்டும். ஆகவே உடலைத் தயாரிக்காமல் என்னால் என்னுடைய கனவுகளை அடைய முடியாது என்ற உணர்வை அடைந்தேன். இதை என்னுடைய ஆரோக்கியத்தின் பின்னணி என்று சொல்ல முடியும்.

பிடித்த பாரம்பரிய உணவுகள்!

என்னுடைய கதைகளில் ஏராளமாக உணவு சார்ந்து எழுதியிருக்கிறேன். குமரி மாவட்டத்திற்கு ஏராளமான பாரம்பரிய உணவுகள் உண்டு. இன்று அவை ஒவ்வொன்றாக மறைந்து வருகின்றன.

எனக்கு இங்கே கிடைக்கும் சிறு கிழங்கு போன்ற கிழங்கு வகைகளை உண்பது மிகவும் பிடிக்கும். வெறும் கார்போஹைட்ரேட் மட்டுமே கொண்டவை என்பதால், குறைவாகத்தான் அவற்றை என்னால் உண்ண முடியும். அதைப்போல இலவங்க இலையில் சுருட்டிச் செய்யப்படும் திரலி, வறுத்த அரிசியை நெய்யுடன் சேர்த்துச் செய்யப்படும் அரவணைப் பாயசம் போன்று பல தனிப்பட்ட குமரி மாவட்ட சுவை உணவுகள் உண்டு.

நாஞ்சில் நாடன் நாஞ்சில் நாட்டு உணவுகளைப் பற்றி ஒரு நல்ல புத்தகம் எழுதியிருக்கிறார். அதைப் போன்று குமரி மாவட்டத்து இன்னொரு பகுதியாகிய வேநாட்டு உணவுகளைப் பற்றி ஒரு நூல் எழுதும் எண்ணம் எனக்கு உண்டு.

கீட்டோ டயட்

இந்த கீட்டோ டயட் என்று சொல்லப்படும் உணவு முறையை தமிழகத்தில் தொடக்க நிலையிலே செய்து பார்த்தவர்களுள் ஒருவன் நான் .

என்னுடைய எடையேறியதால் பத்து கிலோவிற்கு மேல் குறைத்துப் பார்த்தேன்.  அதில் உள்ள சிக்கல் என்னவென்று கவனிப்பது என்னுடைய நோக்கமாக இருந்தது .

இதில் கொள்கை எதையும் நான் சொல்ல விரும்பவில்லை. என்னுடைய அனுபவத்தில் நாவின் சுவையை முழுக்கவே ஒருவரால் தியாகம் செய்ய முடியாது. அப்படிச் செய்தால் அதுவே நினைவாக இருக்கும் என்பதுதான் முதல் தடை.

பழகிய உணவை முழுமையாக நிறுத்தி விட முடியாது. ஆகவே அரிசி கார்போஹைட்ரேட்டை முழுக்க நிறுத்தி விட்டு புரோட்டின் உணவை மட்டுமே எடுக்கும் ஒருவர், அதிகம் ஓரிரு ஆண்டுகளில் சலிப்புற்று மீண்டும் கார்போஹைட்ரேட் உணவுக்கே வருவார் .

அவர் இழந்த எடையை மீண்டும் அடைவார் என்பது மட்டுமல்ல, எடை கூடவும் செய்யும். அந்தக் குறுகில காலத்தில் அவர் உடல் தன்னைத் தகவமைத்துக்கொள்ளாததால் உடல் நலச்சிக்கல்களும் வரக்கூடும்.

பொதுவாக உணவு முறை மாற்றத்தை உடனடியாகத் தலைகீழாகச் செய்யக்கூடாது. மிகக் குறைவாக மிகவும் படிப்படியாகத்தான் செய்து பார்க்க வேண்டும். உடல் எப்படி எதிர்வினையாற்றுகிறது என்று தொடர்ந்து கவனித்துக்கொண்டு இருக்க வேண்டும் .

இன்று ஒருவர் கீட்டோ டயட்டிலிருந்து இரண்டு விஷயங்களைப் பெறமுடியும். முதலாவதாக, உணவில் பொதுவாக புரோட்டீன் அளவே அதிகமாக இருக்க வேண்டும். ஸ்டார்ச் குறைவாக இருக்க வேண்டும் என்ற பாடம் கீட்டோ டயட்டிலிருந்து வருகிறது.

அது கவனிக்கப்பட வேண்டிய ஒன்று. இப்போது நானே மதியம் மட்டுமே ஸ்டார்ச் உணவை எடுத்துக்கொள்கிறேன். அது கீட்டோவிலிருந்து நான் கற்றுக்கொண்ட பாடம்.

இரண்டாவதாக உடனடியாக சட்டென்று எடையைக் குறைப்பதற்கு கீட்டோவை ஒரு குறுகிய காலப் பயிற்சியாக வைத்துக் கொள்ளலாம். ஆனால் அதன் பிறகு கார்போஹைட்ரேட் குறைந்த உணவுக்குச் செல்வதே சிறந்த வழி .

ஒருவேளையாவது பழக்கமான பிடித்தமான உணவுகளை, குறைந்த அளவில் சாப்பிடுவது நல்லது. இது நீண்ட காலம் கடைப்பிடிக்கும் உணவு நெறிமுறையாகும்.

பயணமும் உணவும்!

பயணத்திற்கு ஏற்ற உணவு, உடற்பயிற்சி முக்கியமானது. பயணத்திற்கேற்ற உடற்பயிற்சி என்பது நடைப்பயிற்சி தான். எவ்வளவுக்கு எவ்வளவு அதிகமாக நடக்கிறோமோ அந்த அளவிற்கு நாம் உற்சாகமாகப் பயணம் செய்ய முடியும். உடல் நலம் நன்றாக இருக்கும்.

மிக இயல்பான நடையில் நாம் பார்க்க வேண்டிய இடங்களை நடந்து பார்த்தாலே போதும். ஐரோப்பா, அமெரிக்கா போன்ற குளிர் நாடுகளில் நடப்பதற்கு மிக மிக உகந்த மிகத் தூய்மையான சூழலும் வெப்பமற்ற தட்பவெப்பமும் நடப்பதற்கு நம்மைத் தூண்டும்படி இருக்கும்.

பயணங்களில் அந்தந்த ஊர்களின் உணவை உண்பது தான் தலை சிறந்தது. ஐரோப்பாவில் ஐரோப்பிய உணவு வகைகள் கடைப்பிடிப்பது மிக நல்லது. இதுவரைக்கும் என்னுடைய பயணங்களில் ஐரோப்பிய உணவுகள் எதுவுமே என் வயிற்றைக் கெடுத்ததே கிடையாது.

அங்கே சென்று நமது உணவு வகைகளை உண்ண வேண்டுமென்று முயற்சி செய்தால் அங்கே தரமற்றதும் சுவையற்றதுமான உணவு தான் கிடைக்கும். என்னுடன் ஒருவர் வந்தபோது இத்தாலியில் இட்லி சாப்பிட வேண்டும் என்று விரும்பினார். அப்போது பல நாட்களுக்கு மேல் குளிர்சாதனப் பெட்டியில் வைத்திருந்த இட்லியை ஆவியல் வேக வைத்துக் கொடுத்தார்கள். அதில் ஏற்கெனவே பூஞ்சை இருந்ததால் அதைச் சாப்பிட்டவர்கள் அனைவருக்கும் வயிற்றில் பிரச்சினை ஏற்பட்டது.

இந்தியாவுக்கு வெளியே கிடைக்கும் இந்திய உணவுகள் பெரும்பாலும் தரமற்றதும் சுவையற்றதும் உடலுக்கு கேடானதுமாகவே இருக்கும். ஆகவே எந்த நாட்டுக்குச் செல்கிறோமோ அந்த நாட்டின் சிறந்த உணவை உண்பதுதான் நல்லது.

முற்றிலும் அந்நியமான உணவுகளை, பொருட்களை உண்ணாமல் இருப்பது நல்லது.

கிழக்காசிய நாடுகளுக்குச் செல்லும்போது அங்கே கடல் உணவுகள் கிடைக்கும். நாம் ஏற்கெனவே உண்டு பழகாத கடல் உணவை உண்ண முயற்சி செய்யக் கூடாது .

அவை சில நேரம் நமக்குக் கடுமையான ஒவ்வாமை ஏற்படுத்தக்கூடும். எனவே தெரிந்த உணவுகளை அவர்களின் சமையல் முறையில் உண்பதே சிறந்தது. அங்கே ஆக்டோபஸ் குஞ்சுகளை சமைத்துக் கொடுப்பார்கள் .அதுநிறைய பேருக்கு ஒவ்வாமையைத்தரும். சால்மன் போன்ற நமக்குத்தெரிந்த உணவை ஆசிய முறையில் ஆவியில் வேகவைத்து, தருவதாக இருந்தால் அவற்றைச் சாப்பிடலாம்.

எந்தப் பயணத்திலும் எவ்வளவு முடியுமோ அவ்வளவு வைட்டமின் சி எடுத்துக் கொள்ள வேண்டும். மேலை நாடுகளில் ஆரஞ்சுப் பழச் சாறு நிறைய கிடைக்கும். எவ்வளவு முடியுமோ அவ்வளவு எடுத்துக் கொள்ளலாம். அது பயணம் முழுக்க உடலைக் காக்கும். அதேபோல் சற்றும் அறிமுகம் இல்லாத உணவுகளைச் சாப்பிடவும் கூடாது.

ஆரோக்கிய உடலும் மனமும்!

ஆரோக்கியமான உடல் ஆரோக்கியமான உள்ளத்தை உருவாக்கும். காலை எழுந்தவுடன் நீங்கள் எப்படி உணர்கிறீர்கள் என்பதுதான் உங்கள் உடல், உள்ளம் சிறப்பாக இருக்கிறதா என்பதற்கான அடையாளம்.

காலையில் உற்சாகமாக எழுகிறீர்கள். எழுந்த உடனே உற்சாகமாக உணர்கிறீர்களா? உடல் சோர்வற்று இருக்கிறதா என்பது முக்கியமான கேள்வி?

உடல் நன்றாக இருந்தால் உள்ளமும் உற்சாகமாக இருக்கும். நான் காலையில் எழுந்ததுமே 15-20 நிமிடங்களுக்குள் நேரடியாக எழுத ஆரம்பிப்பேன். வெளிச்சம் வருவதற்குள் பலசமயம் ஒரு நல்ல படைப்பை எழுதி முடித்திருப்பேன்.

காலை நடை முடித்து வந்த உடனே நேரடியாக எழுத ஆரம்பிக்க முடியும்.  இந்த வகையான ஒரு நிலைதான் நல்ல உடலும் அளிப்பது. நல்ல உடல் என்பது நாண் ஏற்றிய ஒரு வில் போல இருக்க வேண்டும்.

தளர்ந்த உடல் தளர்ந்த உள்ளத்தை உருவாக்குகிறது. அது செயலுக்கு மிகவும் எதிரானது. ஆகவேதான் இந்தியாவின் மகத்தான ஆன்மிக நூல், செயலாக்குவதற்கான ஊக்கத்தை அளிக்கும் நூல், கீதை உணவைப்பற்றி அவ்வளவு குறிப்பாகப் பேசுகிறது.

பின்பற்றும் மருத்துவ முறை!

மருத்துவ முறையென எதையும் பின்பற்ற வேண்டிய தேவை எனக்கு இதுவரைக்கும் ஏற்படவில்லை.

மிக அரிதாக அதாவது மூன்று அல்லது நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை எப்போதாவது காய்ச்சல் வருமெனில் அதற்காத மாத்திரைகளை எடுத்துக்கொள்வது தவிர கடந்த அறுபத்தைந்து ஆண்டுகளில் மருத்துவ சிகிச்சைக்கு எதற்கும் நான் சென்றதில்லை. உடலை அலோபதி முறைப்படி சோதனை செய்துக்கொள்கிறேன்.

அவற்றில் எந்தக் குறைபாடும் இல்லை என்றுதான் இதுவரைக்கும் சோதனை முடிவுகள் தெரிவிக்கின்றன. ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு ஒருமுறை உடலை முழு சோதனை எடுத்துக்கொள்வது நல்லது.

மருத்துவ முறைகளில் நான் அலோபதி மருத்துவத்தைத்தான் நம்புகிறேன் . ஏனென்றால் அதுதான் அறிவியல் அடிப்படையைத் தொடர்ந்து வளர்த்துக்கொண்டு இருப்பது; உலகளாவ விரிந்திருப்பது; திட்டவட்டமான, தெளிவான, புறவயமான ஆய்வு முறை கொண்டது. மற்ற மருத்துவங்களில் வளர்ச்சி கிடையாது, புறவயமான ஆய்வு முறை கிடையாது. அறிவியல் அடிப்படையில் அவை செயல்படுவதுமில்லை.

அவற்றில் சில மருத்துவ முறைகளுக்குச் சில வகையான பயன்கள் இருப்பதை நான் மறுப்பதில்லை. ஆனால் முதன்மையான மருத்துவம் என்பது அலோபதிதான் என்று நான் நம்புகிறேன் .

– அருள்செல்வன்

Leave a Comment