பாரம்பரிய விளையாட்டு தாயம்
மனிதர்களுக்கு மகிழ்ச்சி தரக்கூடிய முக்கியமான விஷயங்களில் ஒன்று விளையாட்டு. ஏதேனும் விளையாட்டில் கலந்துகொள்வது மட்டுமல்ல, பார்ப்பதும், ரசிப்பதும் மகிழ்ச்சி தரும்.
வீட்டுக்குள் இருந்துகொண்டே பெண்களும் சிறியவர்களும் விளையாடும் ஆக்ரோஷ விளையாட்டு என்றால் அது தாயம். இதுவே, சூதாட்டம், சொக்கட்டான், சோழி எனவும் அழைக்கப்படுகிறது. தாயம், பகடை, பரம பதம் ஆகிய விளையாட்டுகள் ஒரே தன்மை உடையவையாகும். இதை, சதுரங்க ஆட்டத்தின் முன்னோடி என்றுகூடச் சொல்லலாம்.
தாயக்கட்டையில் என்ன இருக்கிறது? கட்டையை உருட்டிப்போட்டு காயை நகர்த்திவிட்டால் ஆட்டம் முடிந்தது எனக் கூற முடியாது. சிறுவர்கள்கூட தாயக்கட்டையை உருட்டிப்போட்டு விளையாட முடியும். ஆனால் ஆட்டத் திறமை இருந்தால்தான் வெற்றிபெற முடியும். மகாபாரதத்தில், பாண்டவர்களுக்கும் கெளரவர்களுக்கும் இடையில் விளையாட்டாக ஆரம்பித்த தாயம் விளையாட்டு, பின்னாளில் மிகப்பெரிய போருக்கு மூலமாக இருந்தது என்பது எல்லோரும் அறிந்ததே.
இது மிகவும் பழமையான விளையாட்டு என்பதால், அது எப்போது யாரால், எங்கு தோன்றியது என்கிற ஆராய்ச்சிக்கு இதுநாள் வரை விடையில்லை. அதேநேரத்தில், கீழடி அகழாய்வின்போது தமிழக வரலாற்றின் தொடக்க காலத்தைச் சேர்ந்த தந்தத்தால் ஆன தாயக் கட்டைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இந்த விளையாட்டை 2 முதல் 4 பேர்வரை விளையாடலாம். தனித்தனியாகவும், 2 பேர் சேர்ந்து இரு குழுவாகவும் விளையாடலாம். ஆறு சோழிகள் (அ ) இரு நான்முக தாயக் கட்டை (அ ) அறுமுக தாயக் கட்டை, தாயக் கட்டம் ஆகியவற்றைக் கொண்டு இவ்விளையாட்டை விளையாடுவர்.
நான்கு பேர் கொண்ட ஆட்டத்தில், எதிரெதிரே அமர்ந்திருப்பவர்கள் ஓரணியாகச் சேர்ந்து, ஈரணியாக ஆடும்போது ஆட்டம் விறுவிறுப்பாகவும் வேகமாகவும் முடியும். ஆண்கள் விளையாடும் தாயகட்ட விளையாட்டு அறிவுத் திறனையும், பெண்கள் விளையாடும் தாயகட்ட விளையாட்டு வாய்ப்பு நிலையையும் மையமாகக் கொண்டது. இவ்விரு விளையாட்டுகளும் போர் முறைகளை விளக்குவதாக அமைந்துள்ளன. இந்த விளையாட்டின் தோற்றம் போரில் படைவீரர்களை நகர்த்திச் செல்வது போன்ற செயல்களை வெளிப்படுத்துவதாக அமைகிறது. தாய விளையாட்டிலிருந்து பகடை, தசாபதம், அஷ்டாபதம், சதுரங்கம், தோன்றியிருப்பதற்கான வாய்ப்புகள் தென்படுகின்றன.
சோழிகளைக் குலுக்கிப் போடுகையில் ஒன்று விழுந்தால் தாயம் என்று சொல்வர். ஆனால் மற்ற எண்களை இரண்டு, மூன்று என்றே கூறுவது குறிப்பிடத்தக்கதாகும். தாயம் என்ற சொல்லுக்கு உரிமை என்று பொருள். உறவினர்களை, தாயத்தார் என்று கூறுவது இதற்குச் சான்றாகும். தாயம் பற்றிய குறிப்புகள் மகாபாரதம், நளவெண்பா, தொல்காப்பியம் போன்றவற்றில் காணப்படுகின்றன. மேலும், விளையாட்டில் கலந்துகொள்பவர்கள் பந்தயம் கட்டும்போது, அப்பந்தயப் பொருள் தங்களை வந்தடைய வேண்டுமென்று உரிமை கருதி ஈடுபடுவதால் தாயம் என்ற பெயர் வந்திருக்கலாம், என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள். இந்த விளையாட்டில் நான்கு கட்டம், தஞ்சாவூர்க் கட்டம், குரங்கு கட்டம் போன்றவை குறிப்பிடத்தகுந்த தாய விளையாட்டுகள் ஆகும். உலகம் முழுவதும் இந்த விளையாட்டு பரவி இருக்கிறது.
இதில் விளையாடும் ஒவ்வொருவரும் தலா 6 காய்களை வைத்துக்கொள்ள வேண்டும். ஓர் அடி அளவுள்ள சதுரத்தைத் தரையில் வரைய வேண்டும். அதில் 7-க்கு 7 என 49 சம அளவுள்ள கட்டங்களாக்கிக்கொள்ள வேண்டும். முதலில் விளையாடுபவர் இரண்டு தாயக்கட்டைகளையும் சேர்த்து தரையில் உருட்ட வேண்டும். இப்படியாக, ஒவ்வொருவரும் வரிசையாகத் தாயக்கட்டைகளை உருட்ட வேண்டும். யாருக்கு முதலில் ‘தாயம்’ (ஒன்று) விழுகிறதோ, அவர் தன் கையிலுள்ள காயை, அவர் பக்கமுள்ள நடுக் கட்டத்தில் வைக்க வேண்டும். கட்டத்தில் காய்களை வைத்தபிறகு, உருட்டும் தாயக்கட்டைகளில் விழும் எண்களுக்கு ஏற்ப காய்களை நகர்த்திக்கொண்டே செல்ல வேண்டும். தாயம், ஐந்து விழுந்தால் காய்களைக் கட்டத்துக்குள் இறக்க வேண்டும். தாயம், ஐந்து, ஆறு, பன்னிரண்டு ஆகிய எண்கள் விழும்போது, மறுபடியும் எடுத்து உருட்ட வேண்டும். ஒருவருக்கு விழுந்த எண்களுக்கு ஏற்ப காய்களை நகர்த்தும்போது, வழியில் குறுக்கிடும் மற்ற ஆட்டக்காரர்களின் காய்களை வெட்டி, கட்டத்திலிருந்து வெளியேற்றலாம். குறுக்குக் கோடு போட்ட கட்டங்களிலுள்ள காய்களை வெட்ட முடியாது. மொத்தக் கட்டங்களையும் ஒரு சுற்றுச் சுற்றிவிட்டு, கடைசிக் கட்டத்துக்கு வரும் காயை, ‘பழம்’ என்று சொல்லி எடுத்துக்கொள்ளலாம். இப்படி யாருடைய 6 காய்களும் முதலில் ‘பழமா’கிறதோ, அவரே இந்த ஆட்டத்தில் வெற்றிபெற்றவர் ஆவார். மேலும், இந்த விதிமுறைகள் ஒவ்வொரு வகை தாய வரைபடத்திற்கேற்ப மாறுபடும்.
நான்கு சோழிகளின் விதிமுறை எண்ணிக்கை
நான்கு சோழிகளும் கவிழ்ந்திருந்தால் 8.
மூன்று சோழிகள் கவிழ்ந்து, ஒன்று திரும்பியிருந்தால் 1
இரண்டு கவிழ்ந்தும் இரண்டு திரும்பியிருந்தால் 2
ஒன்று கவிழ்ந்தும் மூன்று திரும்பியிருந்தால் 3
நான்கு சோழியும் திரும்பியிருந்தால் 4
– இவற்றில் 8, 1, 4 விழுந்தால் மீண்டும் விளையாட வாய்ப்புண்டு. இவ்விதிமுறை மாவட்டத்திற்கு மாவட்டம் மாறுபடும்.
இந்த தாய விளையாட்டு, தனி மனித வாழ்வில் வாழ்க்கையின் எதார்த்தத்தைச் சொல்லிக் கொடுக்கிறது. மனிதனாக தோன்றிய எவரும் வாழ்வின் எல்லாக் கட்டங்களையும் கடந்து முன்னேறினால்தான் வெற்றி என்னும் உயர்ந்த நிலையை அடைய முடியும் என்பதைக் கற்றுக்கொடுக்கிறது. வாழ்வின் சில கட்டங்கள்தான் மலையின் மேல் இருப்பது போன்று பாதுகாப்பனது. மற்ற கட்டங்களில் எல்லாம் மிகக் கவனமாக இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்துகிறது. அப்படியில்லை என்றால், அடுத்தவரால் வேட்டையாடப்படலாம் அல்லது வீழ்த்தப்படலாம் என்று அறிவுறுத்துகிறது. வாழ்வின் எந்தவொரு கட்டத்தில் நாம் வீழ்த்தப்பட்டாலும் மன உறுதியோடு மீண்டும் முதலில் இருந்து கவனமாக நம் பயணத்தைத் தொடங்கினால் வெற்றி நிச்சயம் என்பதை இந்த தாயம் நமக்குச் சொல்லிக்ககொடுக்கிறது.