என்ன செய்தார் சைதை துரைசாமி – அத்தியாயம் 94
சென்னையில் கொசுக்களைக் கட்டுப்படுத்துவதற்கு 3,200 ஊழியர்கள் நியமனம், நொச்சி செடி வளர்ப்பு, வேப்பெண்ணெய் பயன்பாடு போன்ற திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன என்றாலும் இவற்றோடு மேயர் சைதை துரைசாமி திருப்தி அடைந்துவிடவில்லை.
இவை தவிர வேறு எந்தெந்த வழிகளில் எல்லாம் கொசுக்களை கட்டுப்படுத்த முடியும் என்று தொடர்ந்து ஆலோசனைகள் செய்துகொண்டே இருந்தார். அப்போது தான் கம்பூசியா மீன்கள் பற்றி சைதை துரைசாமிக்குத் தெரியவந்தது. கம்பூசியா வகை மீன்கள் கொசு லார்வாக்களை (கொசு முட்டைகளிலிருந்து வரும் கொசுப்புழு) உண்டு வாழும் தன்மை கொண்டது என்பது தெரியவந்ததும், மேலதிக தகவல்கள் சேகரித்தார்.
பொதுவாக டெங்கு காய்ச்சலை ஏடிஸ் ஏஜிப்தி கொசுக்கள் நல்ல நீரில் தான் முட்டையிட்டு பெருகுகின்றன. இந்த கம்பூசியா மீன்களும் நல்ல தண்ணீரில் மட்டுமே வாழக்கூடிய மீன் இனமாகும். நல்ல நீரில் உருவாகும் கொசு முட்டை மற்றும் கொசுப்புழுக்களை கம்பூசியா மீன்கள் தின்றுவிடுவதால் கொசு உற்பத்தி தடுக்கப்படுகிறது.
எனவே நீர்த்தேக்க தொட்டிகள், குளங்கள், காலி இடங்களில் நீர்த் தேங்கியுள்ள இடங்களில் கம்பூசியா மீன்கள் விடப்பட்டால், அதில் உருவாகும் கொசுப் புழுக்களை அழித்துவிடும். அதேநேரம், அந்த தொட்டிகள், குளங்களில் உள்ள அழுக்குகளை சுத்தம் செய்துவிடும் தன்மையும் கம்பூசியா மீன்களுக்கு உண்டு என்பது தெரியவந்தது.
எனவே, கம்பூசியா மீன் வளர்ப்பையும் கொசு ஒழிப்பு நடவடிக்கைக்குக் கொண்டுவந்தார் மேயர் சைதை துரைசாமி. முதல் கட்டமாக சென்னை மாநகராட்சியில் 660 நீர்நிலைகள் தேர்வு செய்யப்பட்டு, அங்கெல்லாம் கம்பூசியா மீன்கள் விடப்பட்டன.
கம்பூசியா மீன்கள் வளர்ப்பு புதுமையான முயற்சியாக கருதப்பட்டது. ஆனால், நீர்நிலைகளில் மாசு படியும்போது இந்த கம்பூசியா மீன்களால் தாக்குப்பிடிக்க முடியவில்லை. அதனால், இந்தத் திட்டம் தொடர முடியாமல் போனது. அதேநேரம், கொசு ஒழிப்புக்கு சைதை துரைசாமி காட்டி வரும் அக்கறையையும், புதுப்புது முயற்சிகளையும் முதல்வர் ஜெயலலிதா மட்டுமின்றி பொதுமக்களும் மனதாரப் பாராட்டினார்கள்.
- நாளை பார்க்கலாம்.