படிங்க… சிரிங்க…
நீண்ட காலமாக சமூகவலைதளங்களில் சுற்றிவரும் கதைகள் என்றாலும், இவை எத்தனை முறை படித்தாலும் சலிப்பதில்லை.
என் ஆசை மைனா
ஒரு சிறுவன் ஆசை ஆசையாக மைனா ஒன்று வளர்த்தான். உண்பதும் அதனோடுதான், உறங்குவதும் அதனோடுதான். படிக்கும்போதும் அதனோடுதான், விளையாடும்போதும் அதனோடுதான். அத்தனை ஆசையாக அன்பாக அதனோடு இருந்தான். பள்ளிக்குச் செல்லும்போது மட்டும் மைனா வீட்டில் இருக்கும் போலும்.
ஒருநாள் அவன் பள்ளி சென்றிருக்கும்பொழுது மைனா இறந்து விட்டது. அச்சிறுவனின் அம்மாவிற்கோ ஒரே கவலை, இந்த அதிர்ச்சியை மகன் எப்படித் தாங்கிக் கொள்ளப்போகிறான் என்று. மாலையில் பள்ளிவிட்டு வந்தவுடனேயே வாசலில் நிற்கவைத்து, “கண்ணா, உன் மைனா செத்துப் போயிடுச்சுடா” என்று சொன்னாள். சிறுவனும், “சரிம்மா நான் போய் விளையாடிட்டு வரேன்” என்று கிளம்பிவிட்டான். தாய்க்கோ ஒரே ஆச்சர்யம் மற்றும் சந்தோஷம். மகன் இதனை இவ்வளவு எளிதாக எடுத்துக்கொள்வான் என்று நினைக்கவேயில்லை.
விளையாடிவிட்டு வந்த சிறுவன் அம்மாவிடம் கேட்டான், “அம்மா, என் மைனா எங்கேம்மா?”
அம்மா, “என்னடா கண்ணா, சாயங்காலமே சொன்னேனே, மைனா செத்துப்போச்சுன்னு…?”
மகன், “அய்யோ அது நைனா-ன்னு நெனச்சேன்மா….” என்று அழுது ஊரையே கூட்டிவிட்டான்.
மூச், சத்தம் போடக்கூடாது.
ஊர் சுற்றிப் பார்க்க வந்த கிராமத்து தம்பதியினர் ஜெயிண்ட்வீல் ராடினத்தைப் பார்த்து அதிசயித்தனர். மனைவி அதில் ஏற ஆசைப்பட்டாள். ஆனால் பணம் அதிகம் என்பதால் வேண்டாமென்று தட்டிக் கழித்தான் கணவன். இதைப் பார்த்த ஜெயிண்ட் வீல் இயக்குபவன், “பரவாயில்லை. இலவசமாக இதில் சுற்றலாம். ஆனால் இடையே யாராவது கத்தினால் 100 ரூபாய் கொடுத்துவிட வேண்டும்” என்றான்.
தம்பதிகள் சம்மதித்தனர்.
ஜெயிண்ட் வீலை இயக்குபவன் வேண்டுமென்றே வேகமாகச் சுற்ற ஆரம்பித்தான். எவ்வளவு சுற்றியும் யாரும் கத்தவில்லை. வேறு வழியில்லாமல் சுற்றுவதை நிறுத்தினான். “”பரவாயில்லையே.. கத்தாமல் சமாளித்துவிட்டீர்களே?” என்றான்.
கணவன், “இடையில் ஒரு தரம் கத்தலாம் என்று நினைத்தேன். பிறகு கட்டுப்படுத்திக் கொண்டேன்” என்றான்.
“எப்போது?”
“என் மனைவி தவறி கீழே கூவத்தில் விழுந்தபோது” என்றான்.