துரோகங்களை மன்னியுங்கள், மறக்க வேண்டாம்.
காதல் எனும் உறவை சந்திக்காதவர்கள் இந்த உலகத்தில் நிறையவே உண்டு. ஆனால் நட்பு எனும் பந்தத்தை தொடாதவர்கள் யாரும் இல்லை. முதல் சந்திப்பிலேயே புன்னகையும் கைகுலுக்கலும் நட்பில் மட்டுமே சாத்தியம். நட்பு ஆழமானதாக, ஆத்மார்த்தமாக மாறும்போது, அதைவிட பெரிய வரம் இந்த உலகில் வேறு எதுவுமே இல்லை.

புலவர் பிசிராந்தையார், மன்னன் கோப்பெருஞ்சோழன் ஆகிய இருவரின் அன்புதான், இன்றுவரை நட்புக்கு இலக்கணமாகத் திகழ்கிறது. ஒருவரை பார்க்காமல், பேசாமல், பழகாமல் நட்பு பாராட்டமுடியும் என்றால், அது எத்தகைய உயர்வான விஷயம்? மகாபாரதத்தில் கர்ணனின் நட்பும் ஈடு இணை இல்லாதது. பாண்டவர்கள் தன்னுடைய சகோதரர்கள் என்று தெரிந்தபிறகும், நட்புக்குத் துரோகமிழைக்க நினைக்காதவன் கர்ணன். நட்புக்காக தன்னுடைய உயிரை விட்டவன்.
ஆனால், இன்று ஏமாற்றுவதற்காகவே சிலர் நட்பு கொள்கிறார்கள். குடும்பத்தை சிதைக்கும் கள்ளக்காதல் முதல் கள்ள வணிகம்வரை பலவற்றுக்கும் நண்பர்களின் துரோகம் காரணமாக இருக்கிறது. ஆனால், இப்படிப்பட்டவர்களை நண்பர்கள் என்று அழைப்பதே தவறு.
நல்ல நட்பு என்பது கற்பைப் போன்று புனிதமானது. தன்னைவிட தன்னுடைய நண்பன் நன்றாக இருக்கவேண்டும் என்று நினைக்கக்கூடியது. தியாகம் செய்வதற்கு நட்பு ஒருபோதும் தயங்காது. தவறு என்று தெரிந்தால் தட்டிக்கேட்பது நட்பு. துன்பம் வருகையில் தோள் கொடுப்பது நட்பு. நண்பனுக்காக கடைசி வரை களத்தில் நிற்பது நட்பு. எந்த பிரதிபலனும் எதிர்பாராதது நட்பு.
நண்பன் செய்யும் தவறைச் சுட்டிக் காட்டாமல், அதற்கு துணைபோவது நட்புக்குச் செய்யும் துரோகம் என்றுதான் சொல்லவேண்டும். நட்புக்கு துரோகம் இழைப்பவன், தனக்கும் சேர்த்தே துரோகம் செய்துகொள்கிறான். இந்த உலகிலேயே மிகப்பெரிய குற்றமாக கருதப்படுவது, நம்பிக்கைத் துரோகம்தான். யாரை நாம் மிகவும் நம்புகிறோமோ, அவர்களிடம் இருந்துதான் நமக்கு துரோகம் கிடைக்கிறது. அப்படியொரு துரோகத்தை சந்திக்கும்போது என்ன செய்யவேண்டும்?
அதனை சந்தோஷமாக ஏற்றுக்கொள்வதுதான் நாம் அவர்களுக்குக் கொடுக்கும் தண்டனை. அதே நண்பன் தன்னுடைய தவறை உணர்ந்து திரும்பிவந்தால் என்ன செய்வது? வாழ்க்கையில் எல்லாவற்றையும் மன்னிக்க கற்றுக்கொள்ள வேண்டும். ஆனால், எதையும் மறந்துவிடக் கூடாது. அதனால், புன்னகையுடன் மறுத்துவிடுங்கள்.
என்னிடம் யாருமே நட்பாக இல்லையே என்று வருத்தப்படுகிறீர்களா.? முதலில் நீங்கள் நல்ல நண்பராக இருங்கள். நல்ல நட்பு தானே வந்து சேரும். இந்த உலகில் நட்புக்கு இணையாக சொல்லக்கூடியது ஒன்றே ஒன்றுதான். அது தாய்மை. ஆதலால், நட்பு கொள்வீர்.