• Home
  • பணம்
  • பணம் சம்பாதிக்கும் சூத்திரம்..!

பணம் சம்பாதிக்கும் சூத்திரம்..!

Image

அட்டகாச புத்தகம்

பணம் எப்போதும் பணக்காரர்களிடம் மட்டுமே சேர்கிறது என்று சொல்கிறார்களே, இது உண்மையா..?

அப்பட்டமான உண்மை. பணக்காரர்கள் உழைக்கிறார்கள் அதனால் செல்வம் சேர்கிறது. அப்படியென்றால் ஏழைகள் உழைப்பது இல்லையா.? ஏழைகள் தான் அதிகம் உழைக்கிறார்கள், கடுமையாக உழைக்கிறார்கள். ஆனாலும் அவர்களுக்குப் பணம் சேர்வதில்லை. அதேநேரம் பணக்காரர்கள் மட்டும் எப்படி மேலும் மேலும் பணக்காரர்கள் ஆகிறார்கள். ஏழைகள் மேலும் மேலும் கஷ்டப்படும் ஏழைகளாகவே இருக்கிறார்கள்.

இந்த நிலையை எப்படி மாற்றுவது, ஏழையாக இருப்பவரும் எப்படி பணக்காரராக மாறுவது..?

பணம் சேரவேண்டும் என்றால் ஒருவர் மட்டும் உழைப்பது போதாது. அதாவது பணத்துக்காக நீங்கள் மட்டும் வேலை செய்யக் கூடாது, மாறாக பணத்தையே உங்களுக்காக வேலை செய்ய வைக்க வேண்டும். இதுவே பணத்தை பெருக்குவதற்கான சூத்திரம் என்கிறார் ராபர்ட் கியோசாகி. இவர் எழுதிய ரிச் டாட் புவர் டாட் எனப்படும், பணக்காரத் தந்தை ஏழைத் தந்தை என்ற புத்தகம் பணம் பற்றிய ஒரு புதிய புரிதலை கொடுக்கக்கூடியது. குறிப்பாக இளம் தொழில் முனைவோர், பணக்காரராக ஏக்கம் கொண்டவர்கள், முதலீட்டில் ஆர்வம் உள்ளவர்கள் போன்றோருக்கு இந்த புத்தகம் மிகச் சிறந்த வழிகாட்டி.

நண்பரின் பணக்காரத் தந்தை, தன்னுடைய ஏழைத் தந்தை ஆகிய இரண்டு தந்தைகள் மூலம் பணம் பற்றி ஒரு பாடம் நடத்துகிறார் ஆசிரியர் ராபர்ட் கியோஸாகி. பொருளாதாதாரச் சிக்கல் எல்லோருக்கும் ஏற்படுகிறது. பணக்காரர்களும், ஏழைகளும் உழைப்பில் வேறுபடுவது இல்லை. ஆனால், எதற்காக உழைக்கிறோம் என்று சிந்திப்பதில் வேறுபடுகிறார்கள். எனவே ஏழைக்கும் பணக்காரருக்கும் உள்ள வித்தியாசம், தொழிலாளிக்கும் முதலாளிக்கும் உள்ள வித்தியாசம் என்ன என்பதை ஒரு புதிய கண்ணோட்டத்தில் காட்டுகிறார். அதோடு, பணத்தை பெருக்கும் யுத்திகள், ரியல் எஸ்டேட், சரியான முதலீடுகள், முதலாளிக்கு கீழ்ப்படிந்து வேலை செய்யும் ஏழை தொழிலாளியாக இல்லாமல் நாமே ஒரு முதலாளியாக மாறுவது எப்படி என்றெல்லாம் சொல்லித்தருகிறார்.

சுருக்கமாகச் சொல்வது என்றால், “பணத்துக்காக வேலை செய்பவன் ஏழை, பணத்தை தனக்காக வேலை செய்ய வைப்பவன் பணக்காரன்”. இந்த வித்தியாசம்தான் பணக்காரனை மேலும் பணக்காரன் ஆக்குகிறது.. ஏழையை மேலும் ஏழை ஆக்குகிறது என்கிறார். அதாவது கூலிக்கு அல்லது மாத சம்பளத்துக்கு வேலை செய்து பணம் சேர்ப்பது என்பது, நீண்டகால பிரச்சனைக்கு தற்காலிக தீர்வுதான். நிரந்தர தீர்வு என்பது பணத்தை உருவாக்குவதுதான் என்கிறார்..

பணத்தை உருவாக்குவது என்றவுடனே, பணத்தை அச்சடிக்க சொல்லுகிறார் என்று எண்ண வேண்டாம். பணத்தை உருவாக்குவது என்பது, பணத்தை சம்பாதித்து தரும் சொத்துக்களை உருவாக்குவது. அதற்கு முதலில் சொத்துக்களுக்கும், கடன்களுக்கும் உள்ள வேறுபாட்டை நீரிந்து கொள்ள வேண்டும்.

ஏழைகள் சொத்து என்று நினைத்து கடன்களை கைவசப்படுத்திக்கிறார்கள். அதாவது கையில் 10 லட்சம் ரூபாய் சேர்ந்தவுடன் அதை வங்கியில் கட்டி 50 லட்ச ரூபாய்க்கு ஒரு வீட்டை வாங்குகிறார்கள். அதனால் பணத்தை இழக்கிறார்கள். அதேநேரம், பணக்காரர்கள் சொத்துக்களை கைவசப்படுத்தி, அதன்மூலம் பணத்தை உருவாக்குகிறார்கள். அதாவது 10 லட்சம் ரூபாய்க்கு ஒரு நிறுவனத்தைத் தொடங்குகிறார்கள் அல்லது 10 லட்சம் ரூபாயை முதலீடு செய்கிறார்கள். அதனால் பணக்காரர்களுக்கு அந்த பணம் குட்டி போடுகிறது, ஏழைகளுக்கு வீட்டுக் கடன் பாக்கெட்டில் இருந்து பணத்தை எடுக்கிறது.

சிறு வயதில் இருந்து பணம் பற்றியும், பணக்காரர்கள் பற்றியும் தவறான பல கருத்துக்களை இந்த சமூகம் உருவாக்கியுள்ளது. வேலை செய்து பணம் சம்பாதிப்பது எப்படி, என்ற அளவில் மட்டுமே கற்றுத்தரப்படுகிறது. பணத்தை உருவாக்குவது பற்றி, பணத்தை கையாளும் பொருளாதார அறிவைப் பற்றியோ பள்ளிகள் ஒருபோதும் கற்றுத் தருவதில்லை. அவற்றையெல்லாம் வரைபடங்களுடன் கற்றுத்தருக்கிறார் ராபர்ட் கியோஸாகி.

பணம், முதலாளித்துவம், வரிவிதிப்பு போன்ற பல்வேறு விஷயங்களையும் தெரிந்துகொள்பவரே பணக்காரராக உயர முடியும்.  சாமர்த்தியமானவர்கள், புத்திசாலிகள், அறிவாளிகள் எல்லாம் அதிக பணம் சம்பாதிப்பதில்லை. துணிச்சல்காரர்களே முன்னேறுகிறார்கள்.

ஏனென்றால் நிறைய பேருக்கு ஒரு தொழிலில் நிறைய அனுபவம் இருக்கும். வேலையை விட்டுவிட்டு ஒரு நிறுவனத்தை துவங்கலாம் என்ற எண்ணமும் இருக்கும். ஆனால், செய்யமாட்டார்கள். காரணம், ஒருவேளை தோல்வி அடைந்துவிட்டால் என்னாவது? வாங்குகிற சம்பளமே போதும் என காலத்தை ஓட்டுவார்கள். ஆனால் துணிச்சலாக எதிர்நீச்சல் போடுபவர்கள் வாழ்க்கையில் பெரும் முதலாளியாக மாறிவிடுகிறார்கள்.

புத்தகத்தைப் படித்துப் பாருங்கள், நீங்களும் கோடீஸ்வரர் பட்டியலில் சேரலாம்.

Leave a Comment

Image Not Found

கட்டுரை பகுதிகள்