ஆண்ட்ரோபாஸ் அறிகுறிகள்
50 வயதைத் தாண்டிய பெண்கள் மெனோபாஸ் அவஸ்தையில் சிக்குகிறார்கள் என்பதை அனைவரும் அறிவார்கள். அதேபோன்று, ஆண்ட்ரோபாஸ் அவஸ்தை பற்றி தெரியுமா..? பெண்களுக்கு மெனோபாஸ் கால அவஸ்தைகள் போலவே ஆண்களுக்கும் குறிப்பிட்ட வயதில் ஏற்படுவதுண்டு. அதற்குத்தான், ‘ஆண்ட்ரோபாஸ்’ என்று பெயர்.
பொதுவாக ஆண்கள் 50 முதல் 60 வயதில் ஆண்ட்ரோபாஸ் அவஸ்தையை முந்தைய காலங்களில் எதிர்கொண்டார்கள். ஆனால், இப்போது 40 வயதிலேயே அதன் தாக்கத்திற்கு உள்ளாகிறார்கள். இதற்கு வாழ்முறை மாற்றம்தான் காரணம் என்று சொல்லப்படுகிறது.
பொதுவாக ஆண்ட்ரோபாஸ் குறித்துப் பெரிதாக யாரும் பேசுவதில்லை. ஆண்களின் உடலில் சுரக்கும் முக்கியமான பாலியல் ஹார்மோன் ‘டெஸ்டோஸ்டீரான்’ (Testosterone). இந்த ஹார்மோன் சுரப்பு குறைவதும், அதனால் ஏற்படும் சில பின்விளைவுகளுமே `ஆண்ட்ரோபாஸ்’ என அழைக்கப்படுகிறது. இதற்கு ‘மேல் மெனோபாஸ்’ (Male Menopause) என்ற இன்னொரு பெயரும் இருக்கிறது. எந்த வயதில் வேண்டுமானாலும் இந்த ஹார்மோன் குறையலாம் என்றாலும், 40 வயதுக்கு மேற்பட்டவர்களுக்குத்தான் அதற்கான வாய்ப்புகள் அதிகம் என்பதால், அவர்களுக்கு இது குறித்து அதிக விழிப்புணர்வு வேண்டும்.
மெனோபாஸ், எல்லாப் பெண்களுக்கும் ஏற்படும். ஆனால் ஆண்ட்ரோபாஸ் அப்படியல்ல. சில ஆண்களுக்கு ஏற்படும்; சிலருக்கு ஏற்படாமலும் போகலாம்.
மெனோபாஸ் வருவது சீரான உடலியக்கத்தின் வெளிப்பாடு. எனவே, அதைத் தடுக்க பெண்கள் முயலக் கூடாது. அதிலிருந்து மீள சிகிச்சைகள் அவசியமில்லை. ஆண்ட்ரோபாஸ் அப்படியல்ல. குறிப்பிட்ட சில காலத்துக்கான பாதிப்பு அது. விழிப்புணர்வுடன், ஆரோக்கியமான வாழ்க்கை முறையைப் பின்பற்றினால் அதைத் தவிர்த்துவிடலாம். பாதிப்பு ஏற்பட்டவர்களுக்கும்கூட, அதன் வீரியத்தைப் பொறுத்து சிகிச்சைகளும், வாழ்வியல் மாற்றங்களும் பரிந்துரைக்கப்படும்.
மெனோபாஸ் காலத்துக்குப் பிறகு, பெண்களின் உடலில் இனப்பெருக்கத்துக்கான ஹார்மோன் சுரப்பு முற்றிலும் நின்றுவிடுவதால், அதற்கான சுழற்சியும் நடக்காது. ஆண்ட்ரோபாஸின்போது தங்களின் உடலில் ஏற்படும் ஹார்மோன் குறைவை ஆண்கள் சிகிச்சைகள் மூலம் கடந்து, அவற்றை மீண்டும் சீரமைத்துக்கொள்வதால் அந்தக் காலகட்டத்துக்குப் பிறகும்கூட, அவர்கள் உடலில் இனப்பெருக்கச் சுழற்சிகள் இயல்பாக நடக்கும்.
ஆண்ட்ரோபாஸ் அறிகுறிகள்
ஆண்ட்ரோபாஸை பெரும்பாலான ஆண்கள் முதுமையின் அடையாளமாக கருதுகிறார்கள். அப்படியில்லை. ஆனாலும் அவர்களது ஆண்மை சார்ந்த செயல்பாடுகளில் பலவீனங்கள் தோன்றும். உற்சாகம் குறையும். வழக்கமான வேலைகளைகூட ஆர்வமின்றி செய்வார்கள். இதற்கெல்லாம் காரணம் ஆண்களிடம் டெஸ்டோஸ்டிரான் ஹார்மோன் சுரப்பதில் குறைபாடு ஏற்படுவதுதான். இந்த குறைபாடு அவர்களது உடல் சக்தி இயக்கத்தில் மந்தநிலையை தோற்றுவிக்கிறது.
ஆண்ட்ரோபாஸின் அறிகுறிகள் நபருக்கு நபர் வேறுபடும் என்றாலும், பொதுவான சில அறிகுறிகளை மட்டும் பார்க்கலாம்.
வேலையில் பிடிமானம் இல்லாமல் போவது.
உடல் அடிக்கடி சூடாகும் நிலை
மனநிலையில் தடுமாற்றங்கள்.
அதீத சரும வறட்சி.
அடிக்கடி ஏற்படும் எரிச்சல் உணர்வு.
அடிக்கடி வியர்ப்பது.
அதீத மன அழுத்தம்.
தூக்கமின்மை.
தசைகள் வலுவிழத்தல்.
பாலியல் தொடர்பான விஷயங்களில் ஈடுபாடின்மை.
இவற்றில் ஏதேனும் ஓர் அறிகுறி பல நாள்களுக்குத் தொடர்ந்தாலோ அல்லது வேறு ஏதேனும் பிரச்னைகள் ஏற்பட்டு அன்றாட வேலைகளை மேற்கொள்வதிலேயே சிக்கல் ஏற்பட்டாலோ, தாமதிக்காமல் மருத்துவ ஆலோசனை பெற வேண்டும். இந்த பிரச்னைகளில் இருந்து தப்பிக்க நினைக்கும் ஆண்ட்கள், தினமும் 6 முதல் 8 கிலோமீட்டர் நடக்க வேண்டும். இதனால் உடலில் டெஸ்டோஸ்டீரான் அதிகம் சுரக்கும்; உயிரணு உற்பத்தி சீராகும்.
சர்க்கரைநோய், ரத்த அழுத்தம், கொலஸ்ட்ரால் மற்றும் தைராய்டு ஆகியவற்றின் அளவீடுகளை உடலில் கட்டுக்குள் வைத்துக்கொள்ள வேண்டும். ஏற்கெனவே இந்த அளவீடுகளில் பிரச்னை உள்ளவர்கள், கூடுதல் கவனம் எடுத்து மருந்து மாத்திரைகளைத் தவிர்க்காமல் உட்கொள்ள வேண்டும். அதேபோன்று உணவில் உப்பின் அளவைக் குறைத்துக்கொள்வது நல்லது. ஏற்கெனவே ஆண்ட்ரோபாஸ் பாதிப்பு ஏற்பட்டுவிட்டால், அன்றாடம் ஒரு டீஸ்பூன் உப்பை மட்டுமே உணவில் பயன்படுத்த வேண்டும்.
பெண்களுக்கு சினைமுட்டை உற்பத்தி முடங்குவதில் இருந்து மனோபாஸ் பிரச்சினை தொடங்குகிறது. அதன் அறிகுறிகள் அனைத்தையும் பெண்களால் விரைவாக உணர்ந்துகொள்ள முடியும். ஆனால் ஆண்களுக்கு அப்படியில்லை. மெல்ல மெல்ல அந்த மாற்றங்கள் உருவாகுவதால், அறிகுறிகளை அவர்கள் உணருவதற்கு வாய்ப்பு இல்லாமல் போய்விடுகிறது. ஆண்கள் உடல்ரீதியான பலவீனங்களை கவனமாக கருத்தில்கொண்டால் இதனை தெளிவாக உணர்ந்துகொள்ள முடியும். குறிப்பாக படுக்கை அறை செயல்பாட்டு குறைபாடு ஆண்ட்ரோபாஸின் முதல் அறிகுறியாக இருக்கிறது.
வயதாகும்போது ஹார்மோன் சுரப்பதில் ஏற்படும் சமச்சீரற்ற நிலைகளால் ஆண்களின் பாலியல் செயல்பாடுகளில் பாதிப்புகள் உருவாகும் என்றாலும் இப்போது 40 வயதுகளிலே அத்தகைய பிரச்சினைகள் உருவாகுவதற்கு சமூக சூழல்களும் ஒருவிதத்தில் காரணமாக இருக்கிறது. கொரோனா நோய் பற்றிய அச்சம், வேலை இழப்பு, மனக்கவலை, தவறான வாழ்வியல் பழக்கங்கள், முரண்பாடான உணவுப் பழக்கம், தூக்கமின்மை போன்றவைகளும் இதற்கான காரணங்களாகும்.
குடும்ப வாழ்க்கையில் நிம்மதியில்லாதவர்களும் விரைவாக ஆண்ட்ரோபாஸ் நெருக்கடியை சந்திக்கிறார்கள். குடும்ப வாழ்க்கையில் நெருக்கடியை சந்திப்பவர்களில் பலரும் தங்கள் அலுவலகப் பணிகளில் ஆர்வமில்லாதவர்களாக இருக்கிறார்கள். ஆனால் சிலர் வேலையே கதி என்று அதிலே மூழ்கிப்போய்விடுகிறார்கள். அளவுக்கு அதிகமாக சாப்பிடும் பழக்கமும் பலரிடம் இருக்கிறது. அதனால் உடல் குண்டாகிவிடுகிறார்கள். மதுப் பழக்கமும், புகைப்பிடிக்கும் பழக்கமும் விரைவிலே ஆண்ட்ரோபாஸ் பிரச்சினையை சந்திக்க காரணமாகிவிடுகிறது.
இந்த பிரச்சினையை சந்திக்கும் ஆண்கள் மனம் தளர்ந்துபோய்விடக்கூடாது. இதற்கான மருத்துவரீதியிலான தீர்வுகளை காண முன்வரவேண்டும். கணவனும், மனைவியும் மனம்விட்டுப் பேசினால் இதற்கான தீர்வை எளிதாக காணமுடியும்.