ஆசிரியர் பக்கம்
மேட் ஃபார் ஈச் அதர் என்று சொல்வார்கள். அது, ஒரு சாதாரண உறவு வார்த்தை என்றாலும், அப்படி அமைவது சுலபமல்ல. ஏனென்றால், தம்பதியர் இரண்டு பேரும் நதியாக மாறியிருந்தால் மட்டுமே அது சாத்தியம்.

ஆனால், மனிதர்கள் நதியாக மாற சம்மதிப்பதில்லை. எல்லா நபர்களிடமும் ஏதேனும் ஒரு சிறிய குறையாவது நம்மால் கண்டுபிடித்துவிட முடிகிறது. அந்த குறைகளோடு அவர்களை அப்படியே ஏற்றுக்கொள்ள மனம் தயாராக இருப்பதில்லை. எனவே, போனால் போகிறது என்று தம்பதியராக இணைந்து வாழ்பவர்களே அதிகம்.
ஏன் பிறரை குறையுடன் ஏற்க முடிவதில்லை..? ஏனென்றால், நாம் மட்டுமே எப்போதும் சரியாக இருப்பதாக நம்புகிறோம். நமது எண்ண அலைவரிசைக்கு ஒத்துவராத அனைவரையும் தள்ளிவைத்தே பார்க்கிறோம். ஒருவர் குடிகாரராக, முரடராக, கெட்ட வார்த்தை பேசுபவராக, கஞ்சனாக, சுயநலமியாக, பொறாமைக் குணத்துடன் இருப்பதாகத் தெரிந்தால், அவரை அப்படியே ஏற்றுக்கொள்வதற்கு நம் மனம் தயாராக இருப்பதில்லை.
ஆனால், இது சரியல்ல. ஆம். ஒரு மனிதரை ஏற்றுக்கொள்வதில் நதி போல் இருக்க வேண்டும் என்கிறார்கள். ஆம், எந்த நதியும் நீராடும் மனிதர் நல்லவரா அல்லது கெட்டவரா என்று பார்ப்பதே இல்லை. நீரை அசுத்தப்படுத்துபவரையும், நீரை திருடுபவரையும் நதி பெருந்தன்மையுடன் ஏற்றுக்கொள்கிறது.
இதன் உண்மையான அர்த்தம் என்ன தெரியுமா? தன்னை யாராலும் களங்கப்படுத்திவிட முடியாது என்ற கர்வமும் நம்பிக்கையும்தான். நதியில் ஒரு மூடை உப்பைக் கரைத்தாலும், விஷத்தைக் கலந்தாலும் அந்த நீர் கொஞ்ச நேரத்தில் தெளிவுக்கு வந்துவிடும்.
ஆனால், நாம் நதியாக இல்லாமல் இரு சிறிய கிணறாக இருக்கிறோம். அதனால்தான் குறையுள்ள மனிதரை நம்முடன் சேர்த்துக்கொண்டால், நாமும் கெட்டுவிடுவோம் என்று அஞ்சுகிறோம். எனவே நம்முடைய விருப்பத்திற்கு ஏற்ப அவர்கள் மாறவேண்டும் என்று கட்டாயப்படுத்துகிறோம். இதுதான் உறவுக்குள் பிரச்னைகளையும் பிரிவையும் உருவாக்குகிறது.
விசால மனதுடன் திறந்த இதயத்துடன் பிறரை அணுகவும் அரவணைக்கவும் பழகுதல் வேண்டும். ஒருவர் எப்படியிருக்கிறாரோ, அப்படியே ஏற்றுக்கொள்ளும் சகிப்புத்தன்மைதான் உறவுகளை வெல்வதற்கான முதல் பாடம்.