என்ன செய்தார் சைதை துரைசாமி – 194
பெரும்பாலான வெளிநாடுகளில் மக்களுடைய பொழுதுபோக்குகளில் மிகவும் முக்கியமான ஒன்று, மீன் பிடிப்பு. இதற்காக தூண்டிலை எடுத்துச்சென்று ஒரு நாளை செலவிட்டு புதிய அனுபவத்துடன் திரும்புவார்கள். அப்படியொரு அனுபவம் சென்னை மக்களுக்கும் கிடைக்க வேண்டும் என்று ஆசைப்பட்டார் மேயர் சைதை துரைசாமி. அதற்கு மீன்வளத்துறை அமைச்சர் ஜெயபாலும் முழு ஒத்துழைப்பு கொடுத்தார்.
எனவே, சென்னை சேத்துப்பட்டு பசுமைப் பூங்காவில் தூண்டில் மீன் பிடிப்புக்கு வழிவகை செய்யப்பட்டது. சேத்துப்பட்டு ஏரியில் உள்ள நாட்டு மீன்களுடன், ஏராளமான இந்திய வகை மீன்களான பெருங்கெண்டை, கட்லா, ரோகு, மிர்கால் போன்ற மீன்கள் வளர்க்கப்பட்டன. மீன்கள் சுவாசிப்பதற்கு வசதியாக பிரத்யேக ஆக்சிஜன் வாயு குழாய் ஏரிக்குள் பதிக்கப்பட்டன. இதுதவிர ஏரியில் உள்ள நீரை தேவைக்கேற்ப சுத்திகரிக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டன.
ஏரியில் மீன் பிடிக்க விரும்புபவர்களுக்கு வசதியாக வாடகைக்கு தூண்டில் வழங்கப்பட்டது. புதிதாக மீன் பிடிக்க நினைப்பவர்களுக்கு, தூண்டில் வீசத் தெரியாது என்பதால், அதனைக் கற்றுக்கொடுப்பதற்கு பிரத்யேக நபர்கள் நியமனம் செய்யப்பட்டார்கள். சென்னைக்கு சுற்றுலா வருபவர்களுக்கு இது ஒரு கவர்ச்சிகரமான பொழுதுபோக்காக அமைந்தது.
மீன் பிடிப்பது நல்ல பொழுதுபோக்கு என்றாலும், அதனால் மீன்களுக்கு துன்பம் நிகழக்கூடாது என்று நினைத்தார் மேயர் சைதை துரைசாமி. எனவே, மீன்களை பிடித்து, அதனை மீண்டும் ஏரியில் விட வேண்டும் என்ற நிபந்தனையின் பேரில் தூண்டில்கள் வாடகைக்கு கொடுப்பதற்கு வழிவகை செய்யப்பட்டது. பொதுவாக தூண்டிலில் மீன் பிடிக்கும்போது, தூண்டில் முள் குத்தி மீனின் செவுள் கிழிந்துவிடும் என்பதால், அவற்றால் உயிர் வாழ முடியாது. இந்த சிக்கலுக்குத் தீர்வு காணும் வகையில் மீன்களைப் பிடிப்பதற்கு நவீன தூண்டில்கள் பயன்படுத்தப்பட்டன. புதிய தூண்டில்களால் மீன்களைப் பிடிக்கும்போது, அவற்றுக்கு எவ்விதமான காயமும் ஏற்படுவதில்லை. அதனால் பொழுதுபோக்குக்காக மீன் பிடிப்பவர்கள், அதனை மீண்டும் ஏரியில் விட்டுவிட இயலும்.
மீன்கள் எண்ணிக்கை அளவுக்கு அதிகமாகப் பெருகிவிடக் கூடாது என்பதற்காகவும், பூங்காவிற்கு வரும் மக்களுக்கு சுவையான உணவு கிடைக்க வேண்டும் என்பதற்காகவும் பூங்காவிற்கு உள்ளேயே மீன் உணவகம் அமைக்கப்பட்டது. குறைந்த விலையில் சுவையான மீன்கள் வாங்கி சுவைக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டன.
இதுதவிர மீன்வளம் குறித்து மக்கள் அறிந்துகொள்ளும் வகையில் குளிர்சாதன வசதியுடன் கூடிய ஊடக மையம் ஒன்று பூங்காவிற்குள் அமைக்கப்பட்டது. பூக்களின் மகரந்த சேர்க்கைக்கு வண்ணத்துப் பூச்சிகளை கவர்ந்து இழுக்கும் வகையில் மகரந்தப் பூங்காவும் அமைக்கப்பட்டது. தொடர்ந்து இந்தப் பூங்கா சிறப்பாக இயங்குவதற்கு ஏற்ப மண் தரம், நீர் தரம், மீன் நோய் கண்டறிதல் போன்ற ஆராய்ச்சிப் பணிகளும் பூங்காவில் செயல்படுவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டன.
சீர்குலைந்து சிதைந்து மிக மோசமாக இருந்த ஏரியை சென்னையின் புதிய அடையாளமாகவும், மழை நீர் சேகரிக்கும் பெரிய ஏரியாகவும், சுற்றுச்சூழல் மேம்பாட்டு நண்பனாகவும் திகழவைத்த பெருமை மேயர் சைதை துரைசாமிக்கே சேரும் என்று சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் இன்றும் பாராட்டி வருகிறார்கள்.
- நாளை பார்க்கலாம்.