எம்.ஜி.ஆருடன் முதல் சந்திப்பு

என்ன செய்தார் சைதை துரைசாமி – 499

பெருநகர சென்னையின் முன்னாள் மேயர் சைதை துரைசாமி தொடர்ந்து பல்வேறு பத்திரிகைகளுக்கு பேட்டிகள் கொடுத்துவருகிறார். அவற்றிலிருந்து ஒருசில முக்கிய பகுதி மட்டும் இங்கு கொடுக்கப்படுகிறது.

கேள்வி :  மக்கள் திலகம் எம்.ஜி.ஆருடன் உங்கள் முதல் சந்திப்பு குறித்து..?

சைதையார் :

 கூட்டத்தோடு கூட்டமாக ராமாபுரம் தோட்டத்துக்கு நான் போவதும், எம்.ஜி.ஆரை பார்ப்பதும் அடிக்கடி நடந்துகொண்டுதான் இருந்தது. ஆனால்,  என்னுடைய முதல் நெருக்கமான சந்திப்பு என்றால், என்னுடைய ஆதங்கத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் புரட்சித்தலைவரிடம் கொட்டிய நிகழ்வைத்தான் சொல்ல வேண்டும். அப்போது திமுகவில் எம்.ஜி.ஆருக்குப் போட்டியாக மு.க.முத்துவை பின்வாசல் வழியே நுழைப்பதைக்கண்டு ஆவேசமானோம்.  எம்.ஜி.ஆர். ரசிகர்களுக்காக பிரத்யேகமாக தாமரைப்பூ கொடி உருவாக்கி, அதனை ஏற்றி தி.மு.க.வில்புரட்சியைஉண்டாக்கினோம்.

1972 அக்டோபர் 1ம் தேதி, லாயிட்ஸ் சாலையிலுள்ள, சத்யா திருமண மண்டபத்தில் (இன்றைய அ.தி.மு.க. தலைமைக் கழகம்) எம்.ஜி.ஆர். மன்றங்களுக்கு தனிக்கொடி அங்கீகாரம் வழங்குவதற்கான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. ஆனால், அந்தக் கூட்டத்தில் பேசிய எம்.ஜி.ஆர். அவர்கள் ‘அண்ணா கண்ட இருவண்ணக் கொடிதான் நமது அடையாளம். தனித்த அடையாளம் வேண்டாம் என்றும், திமுகதான் நமது ஒரே அமைப்பு; திமுகதான் நம்முடைய கொடி” என்று  பேசிவிட்டார்.

அதனால் ஏமாற்றமடைந்த நான் அவர் கார் ஏறும்போது,  ’அண்ணே… உங்கள் பேச்சால் இனிமேல் தமிழ்நாட்டில் ஒரு எம்.ஜி.ஆர். மன்றம்கூட உருவாகாதவகையில் அமைந்துவிட்டது.’’ என்றுசொல்லிவிட்டு, எம்.ஜி.ஆர். மன்றங்கள் தொடங்குவதற்கு வட்ட கிளைக்கழக செயலாளர்கள் தவிதித்து மு.க.முத்து மன்றங்கள் தொடங்க ஊக்கம் கொடுப்பதையும் மேலும் சில தகவல்களையும் விளக்கமாக எடுத்துச்சொன்னேன்.

 நான் கூறிய எல்லாவற்றையும் பொறுமையக நின்று கேட்ட புரட்சித்தலைவர், ஒரு விரலைக் காட்டி, ‘நான் பார்த்துக்கொள்கிறேன்” என்று கூறிவிட்டு கார் ஏறிப் போய்விட்டார்.

இதையடுத்து திருக்கழுக்குன்றத்தில் அண்ணா சிலை திறக்கவும், ராயப்பேட்டை லாயிட்ஸ் பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்வதற்கும் அன்று மாலையே தேதி கொடுத்தார். அதன்படி 1972, அக்டோபர் 8ம் தேதி பேசியபுரட்சித்தலைவர், ‘’திமுகவின் கிளைக்கழகச் செயலாளர்கள் தொடங்கி, அமைச்சர்கள் வரை தங்கள் சொத்துக்கணக்கை காட்டவேண்டும்’ என்று தி.மு.க. தலைமைக்கு எதிராக முழங்கினார்.

அக்டோபர் 1ம் தேதி கூட்டத்தில், ‘தாய்க்கழகம்தான் முக்கியம்” என்று பேசிய எம்.ஜி.ஆர். அவர்கள், 8ம் தேதி கூட்டத்தில், ‘கிளைக்கழகச் செயலர்கள் முதல் அமைச்சர்கள் வரை சொத்துக்கணக்கை காட்ட வேண்டும்’ என்று பேசியதற்கு, நான் பேசிய கருத்தும் காரணம் என்பதை புரிந்துகொள்ளலாம்.  எம்.ஜி.ஆரின் திடீர் புரட்சிக்கும், அ.தி.மு.க. என்ற கட்சி உருவாகவும் நானும் ஒருவகையில் காரணம் என்பதில் இப்போதும் பெருமைப்படுகிறேன்.

Leave a Comment