சென்னை மாநகராட்சியில் முதல் மூலிகை உணவகம்

Image

என்ன செய்தார் சைதை துரைசாமி – அத்தியாயம் 115

’சுத்தமான சென்னை, கை சுத்தமான நிர்வாகம்’ என்பதற்கு எடுத்துக்காட்டாக சென்னை மாநகராட்சி திகழ வேண்டும் என்பதாலே, சுகாதாரமின்றி நடத்தப்பட்டு வந்த கேன்டீனுக்கு உடனடியாகப் பூட்டுப் போட்டார். அதோடு, அதிவேகத்தில்  அந்த உணவகக் கட்டிடத்தை நவீன பாணிக்கு மாற்றியமைத்தார்.

புதிதாக சமையல் பாத்திரங்கள் உள்ளிட்ட பல பொருட்கள் வாங்குவதற்கு மாநகராட்சியில் நிதி ஒதுக்குவதற்கு கால தாமதம் ஏற்படும் எனத் தெரியவந்ததும், தயக்கமே இல்லாமல் தன்னுடைய சொந்த நிதியில் அந்த உணவகத்திற்குத் தேவையான பாத்திரங்கள் மட்டுமின்றி, தேவையான மளிகைச் சாமான்களும் வாங்கிக் கொடுத்தார்.

அதோடு இந்த உணவகத்தை, மக்களுக்குப் பயன்படும் மூலிகை மலிவு விலை உணவகமாக மாற்றிக் காட்டினார். அந்த உணவகத்தில் தரம், சுவை பாதுகாப்புக்காக சித்த மருத்துவ மாணவராக இருந்த வீரபாகுவை நியமனம் செய்தார். 

இந்த உணவகத்தில் 15 ரூபாய்க்கு மதிய உணவு வழங்கப்பட்டது. கீரை சாதம், கருவேப்பிலை சாதம், புதினா சாதம், மல்லி சாதம், முடக்கற்றான் சாதம், தூதுவளை சாதம் போன்றவை 10 ரூபாய்க்கு வழங்கப்பட்டன. அதோடு மூலிகை டீ 2 ரூபாய்ய்க்கும் மூலிகை சூப் வகைகள் 5 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டன.

அதோடு கருவேப்பிலை இட்லி, ஆவாரம்பூ இட்லி, துளசி இட்லி போன்றவை 2 ரூபாய்க்கும் சாமை அரிசி இட்லி 5 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது. முடக்கற்றான், தூதுவளை, கம்பு, கேழ்வரகு, கருவேப்பிலை, மணத்தக்காளி, பொன்னாங்கன்னி, கரிசலாங்கன்னி, புதினா தோசைகள் 10 ரூபாய்க்கு வழங்கப்பட்டன. கொழுக்கட்டை, புட்டு போன்றவை 10 ரூபாய்க்கு வழங்கப்பட்டன.

ஆரோக்கியமான மூலிகை உணவு குறைவான விலையில் அதிக தரத்துடன் தரப்படுவது அறிந்ததும், ஊழியர்கள் மட்டுமின்றி மற்றவர்களும் தேடி வந்து  வயிராற உண்டு மகிழ்ந்தனர். இந்த மூலிகை மலிவு விலை உணவகத்தின் புகழ் பரவி, தலைமைச் செயலகத்தில் இருந்தும் கூட ஊழியர்கள் வந்து சாப்பிடத் தொடங்கினார்கள். ஒரு நாளைக்கு 2000 நபர்கள் இந்த மலிவு விலை உணவகத்தின் மூலம் பயன் அடைந்தார்கள்.

ஊழியர்களுக்கு குறைந்த விலையில் உணவு கொடுப்பதன் மூலம், அவர்களது ஆரோக்கியம் பாதுகாக்கப்படும். அதன் மூலம் அவர்கள் பணியை திறமையாகவும் சிறப்பாகவும் செய்வார்கள் என்று நம்பினார் சைதை துரைசாமி. மாநகராட்சி ஊழியர்களின் ஆரோக்கியத்திலும் சைதை துரைசாமி அக்கறை எடுத்து செயல்பட்டார் என்பதற்கு இந்த சம்பவமே சாட்சி.

  • நாளை பார்க்கலாம்.

Leave a Comment