பணமும் முக்கியமுங்கோ
எல்லா மருத்துவரும் திறமைசாலிகள், எல்லா மருத்துவரும் கடுமையாக உழைக்கிறார்கள். ஆனால், எல்லா மருத்துவரும் நல்லவரா?
இல்லை.

எல்லா துறையிலும் போல் மருத்துவத்திலும் நிறைய மருத்துவர்கள் பணம் பிடுங்கும் மிஷனாக மாறிவிட்டார்கள். மனசாட்சியை கழட்டி வைத்துவிட்டு தேவையற்ற பரிசோதனைகள் பரிந்துரைப்பதுடன் அதிகப்படியான மருந்து, மாத்திரைகள் எழுதித் தருகிறார்கள். மருத்துவமனை மற்றும் மருந்து கம்பெனிகளுக்கு விசுவாசமாக இருக்கிறார்கள். ஆகவே, சரியான மருத்துவரை கண்டுபிடிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
நல்ல மருத்துவரை எப்படி கண்டுபிடிப்பது?
நோயாளி சொல்வதை முழுமையாகக் காது கொடுத்துக் கேட்பவராக இருப்பார். பரிசோதனை செய்யவேண்டிய அவசியம் இருப்பின், அது குறித்து தெளிவான விளக்கம் கொடுப்பார்.
நோய் கண்டறியப்பட்ட பிறகு எப்படிப்பட்ட சிகிச்சை முறைகள் இருக்கின்றன என்றும், அவற்றில் எது சரியாக இருக்கும் என்றும் புரியும் வகையில் விளக்குவார். அதேநேரம், சிகிச்சை அல்லது மருந்துகள் மூலம் பக்கவிளைவு அபாயத்தையும் தெளிவுபடுத்துவார்.
நோய் கண்டறிவதில் சிக்கல் இருந்தால் வேறு ஒரு சிறப்பு மருத்துவரிடம் அனுப்பிவைப்பார். பணக்காரர், ஏழை என்று வித்தியாசம் பாராட்டாமல் சிகிச்சை அளிப்பார். இப்படிப்பட்ட மருத்துவரிடம் கட்டணம் அதிகம் என்றாலும், காத்திருப்பு நேரம் அதிகம் என்றாலும் அவருக்கு மதிப்பு கொடுத்து சிகிச்சை எடுத்துக்கொள்ளுங்கள்.
பரபரப்பும், அவசரமாகவும் இருக்கும் மருத்துவர்கள், போன் பேசிக்கொண்டு, வீடியோ பார்த்துக்கொண்டு சிகிச்சை அளிப்பவர்களையும் தவிர்த்துவிடுங்கள். குறிப்பிட்ட ஒரு பரிசோதனை மையத்தில் மட்டுமே டெஸ்ட் எடுக்க வேண்டும், தங்கள் பார்மஸியில் மட்டுமே மருந்துகள் வாங்க வேண்டும் என்று வலியுறுத்தும் மருத்துவரிடம் இருந்தும் விலகுங்கள்.
மருத்துவமும் ஒரு தொழில் என்றாலும் சக மனிதரை நேசிப்பவர், சேவை மனப்பான்மை உள்ளவர் மட்டுமே நல்ல மருத்துவராக இருக்க முடியும். இப்படிப்பட்ட மருத்துவரைத் தேடிப் பிடியுங்கள். அவரைப் பார்த்தாலே நோய் தீரும்.