இதயத்துக்கும் உடற்பயிற்சிகள்!

Image

ரொம்ப ரொம்ப சிம்பிள்

உடலை பலப்படுத்துவதற்கு பயிற்சிகள் செய்வது போலவே இதயத்தை பலப்படுத்தவும் சில பயிற்சிகள் அவசியம் என்பதுதான் மருத்துவரின் கூற்று.
இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கு உடல்ரீதியாக சுறுசுறுப்பாக இருப்பதும், ஆரோக்கியமான உணவைச் சாப்பிடுவதும் அவசியம்.

கொழுப்பு, ரத்தத்தில் சர்க்கரை அளவு, ரத்த அழுத்தம் போன்றவற்றை சீராக தக்க வைத்துக்கொள்வது மாரடைப்பு, இதய நோய், பக்கவாதம் போன்ற பாதிப்புகளை தடுக்க உதவும். உலக அளவில் தினமும் ஏராளமானோர் இதய நோய் பாதிப்புக்கு ஆளாகிறார்கள். ஒவ்வொரு ஆண்டும் 1 கோடியே 71 லட்சம் பேர் இதயநோய் பிரச்சினைகளுக்குள்ளாகி இறப்பதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. வயதானவர்கள் மட்டுமல்ல இளைஞர்களும் இதய நோய் பிரச்சினைகளை எதிர்கொள்கிறார்கள்.

உடல் பருமன் முதல் புகைப்பிடிப்பது வரை பல்வேறு பழக்கவழக்கங்கள் இதயநோய்க்குக் காரணமாக இருக்கின்றன. அவற்றுள் உடல் பருமன், உடல் இயக்க செயல்பாடு இல்லாமை, உயர் ரத்த அழுத்தம், கொலஸ்ட்ரால், புகைப்பழக்கம் போன்ற பிரச்சினைகளை உணவுக்கட்டுப்பாடுகள், உடற்பயிற்சிகள் மூலம் நிவர்த்தி செய்துவிட முடியும். அவற்றில் சில்வற்றைப் பார்ப்போம்.
ஏரோபிக்ஸ்:
இந்த உடற்பயிற்சி இதயதுடிப்பு மற்றும் ரத்த அழுத்தத்தைச் சீராக பராமரிக்க உதவும். மேலும் உடல் வலிமையையும் அதிகரிக்க செய்யும். ஏரோபிக்ஸ் பயிற்சிகளில் நடைப்பயிற்சி, ஓட்டம், சைக்கிள் மிதித்தல், நீச்சல், ஜம்பிங் போன்றவை அடங்கும். இவற்றுள் ஏதேனும் ஒன்றை தினமும் 30 நிமிடங்கள் செய்து வருவது இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும்.


தசைகளை வலுவாக்கும் பயிற்சி:
‘ரெசிஸ்டன்ஸ் டிரெயினிங்’ எனப்படும் தசைகளை வலுவாக்கும் பயிற்சிகளைச் செய்வது உடல் அமைப்பை மேம்படுத்த உதவும். உடலில் அதிக கொழுப்பு தசை கொண்டவர்கள், தொப்பை உடல்வாகு உடையவர்கள் இந்த பயிற்சிகளைச் செய்யலாம். ஏனெனில், இத்தகைய உடல்வாகுதான் இதயநோய்களுக்கு முக்கியக் காரணமாக இருக்கின்றன. புஷ் அப்ஸ், சின் அப்ஸ், குனிந்து நிமிர்ந்து செய்யும் பயிற்சிகள், டம்பெல்ஸ், பார்வெல்ஸ் போன்ற கைகளால் செய்யும் பயிற்சிகளைச் செய்து வருவதும் இதய ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும்.


உடலை வளைக்கும் பயிற்சிகள்:
தரையில் அமர்ந்திருந்தபடி கைகளைக் கொண்டு கால்களைத் தொடுவது, உடலை வில்லாக வளைத்து,  கையைக் கொண்டு காலைத் தொடுவது, உடலைப் பின்னோக்கி வில்லாக வளைப்பது போன்ற பயிற்சிகள் உடலை நெகிழ்வடையச் செய்து தசை ஆரோக்கியத்திற்கு நன்மை சேர்க்கும். இத்தகைய பயிற்சிகளுக்கும் இதய ஆரோக்கியத்திற்கும் நேரடி தொடர்பு இல்லை என்றாலும் இவையும் இதய நலனை காக்க துணைபுரியும்.


யோகா:
தியானம் மற்றும் யோகா செய்வதும் தசைகளை வலுப்படுத்த உதவும். இதய ஆரோக்கியத்திலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும். அதனால் தினமும் இவைகளை மேற்கொள்வது இதயத்தின் நலனுக்கு ஏற்றது.
இடைவெளியுடன் பயிற்சியை தொடர்வது:


ஒரு நிமிடம் ஓடுவது, பின்னர் மூன்று நிமிடம் நடப்பது, பின்னர் மீண்டும் ஓடிவிட்டு நடப்பது என குறைந்தபட்சம் 30 நிமிடங்கள் சுழற்சி அடிப்படையில் இருவேறு பயிற்சிகளைச் செய்வதும் நல்லது. இப்படி இடைவெளியுடன் வேறு பயிற்சிக்கு மாறுவது உடல் சோர்வடையாமல் நீண்ட நேரம் பயிற்சி செய்வதற்கும் உதவும்.
இதய நோய்களை தடுப்பதில் இந்த பயிற்சிகள் முக்கியப் பங்கு வகிப்பவை என்பதால் இவற்றுள் ஏதாவது ஒன்றை தினமும் செய்து வருவது நல்லது. ஏனெனில் உடல் இயக்க செயல்பாடு இல்லாமல் இதயத்தின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்க முடியாது.

Leave a Comment