• Home
  • ஞானகுரு
  • எல்லோரும் நல்லா இருக்காங்க… எனக்கு மட்டும் ஏன் இத்தனை துன்பங்கள்..?

எல்லோரும் நல்லா இருக்காங்க… எனக்கு மட்டும் ஏன் இத்தனை துன்பங்கள்..?

Image

ஞானகுரு பதில்கள்

கேள்வி : அடி மேல் அடி என்பார்களே, அப்படித்தான் என் வாழ்க்கையில் மட்டும் நடக்கிறது. எல்லோரும் நன்றாக இருக்கையில் எனக்கு மட்டும் இத்தகைய துன்பம்..?

  • என்.ஜி.மணிகண்டன், சென்னை.

ஞானகுரு ;

ஒரே நேரத்தில் பிறக்கும் பணக்கார வீட்டுக் குழந்தைக்கும் எழை வீட்டுக் குழந்தைக்கும் வாழ்க்கை ஒன்று போல் இருப்பதில்லை. இதற்கு காரணங்கள் இல்லை. சில சூழல்கள் மோசமாக அமையலாம். எதிர்பாராமல் நோய் வரலாம். நிலச்சரிவில் புதைந்து வீடு காணாமல் போகலாம். பொதுவாக வாழ்க்கைப் பயணத்தில் பிறரது வாழ்க்கையை ஒப்பிட்டுப் பார்ப்பதே பெரும் துன்பம் தருகிறது. பணக்கார நண்பன் கார் வாங்கியதைக் கண்டு பொறாமைப்படுவதை விட, ஏழை நண்பன் இன்னமும் சைக்கிளில் போவதைக் கண்டு திருப்தி அடைவதே சரியான பார்வை.

சில சிக்கல்களை பாடங்களாகவும் சில பிரச்னைகளை பயிற்சிகளாகவும் காண்பதற்குப் பழக வேண்டும். அதாவது பாறையை உடைத்து உடைத்தே சிற்பம் செய்ய முடியும். வைரம் பட்டை தீட்டப்பட வேண்டும் பல அழுத்தங்களை தாங்கித்தான் ஆகவேண்டும்.  எனவே, ஒரு மிகப்பெரும் பரிசு காத்திருக்கிறது என்ற எண்ணத்தில் சோதனைகளையும், சவால்களையும் ஏற்றுக்கொண்டு முன்னோக்கிச் செல்லுங்கள். நடந்தே தீர வேண்டும் வழி என்பதை மறக்க வேண்டாம்.

கேள்வி : மனைவிக்கு நல்ல புடவை தேர்ந்தெடுத்துக் கொடுக்கிறேன். ஆனால், அவர் மட்டமான ஒன்றையே தேர்வு செய்கிறார். நல்ல ரசனையை வளர்ப்பது எப்படி..?

  • சி.மனோகரன், நெய்வேலி.

ஞானகுரு ;

ரசனை என்பது தனி மனிதரின் விருப்பம். அதில் குறை காண்பது கொடூரமான அடிமைத்தனம். நீங்கள் தேர்வு செய்வதே சரியானது என்பதை எப்படி அறிவீர்கள். ஏனென்றால் நீங்கள் தேர்வு செய்யும் புடவையை எத்தனையோ நபர்கள் வேண்டாம் என்று புறம் தள்ளியிருப்பார்கள். அந்த புடவையை மலிவானதாக நினைத்திருப்பார்கள். எனவே, அவருக்குப் பிடித்ததை அவர் வாங்கட்டும். உங்கள் ஆணாதிக்கத்தை ரசனை என்று முத்திரை குத்தி அவமானப்படுத்தாதீர்கள்.

Leave a Comment