ஆசிரியர் பக்கம்

சிரிப்பு உடல் ஆரோக்கியத்துக்கு நல்லது, உறவுகளுக்கு நல்லது என்பது புரிந்தாலும், முகத்தை உம்மென்று வைத்துக்கொண்டு இறுக்கமாக இருப்பதையே பலரும் விரும்புகிறார்கள். காரணமில்லாமல் எப்படி சிரிப்பது என்றும் கேட்கிறார்கள்.
உண்மையில் காரணங்கள் இல்லாமலே எல்லாவற்றுக்கும் சிரிக்கலாம். எதிரே தெரிந்த நபர் வரும் நேரத்தில் அனிச்சையாக குட் மார்னிங் என்று சொல்வதுடன் நிறுத்திக்கொள்ளாமல், பல் தெரிய சிரித்து புன்னகைப்பதால் எதுவும் குறையப் போவதில்லை.
சமீபத்தில் நண்பர் ஒருவர் இணையத்தில் படித்த கடி ஜோக்கை சொல்லி வாய்விட்டு சிரித்தார். எனக்கு தெரிந்த ஜோக் என்றாலும் அவர் சிரிப்பைப் பார்த்து எனக்கும் சிரிப்பு வந்தது. அவர் என்னிடம் சொன்னதை உங்களுக்கும் சொல்கிறேன். நீங்கள் ஏற்கெனவே படித்திருந்தாலும் பரவாயில்லை, படியுங்கள், சிரியுங்கள்.
தினமும் நீண்ட தூரம் நடந்தால் உடல் எடை குறையும்னு சொல்றாங்க, அப்படின்னா யானை மட்டும் ஏன் குண்டாவே இருக்குது..?
தினமும் நீச்சலடிச்சா உடல் ஸ்லிம் ஆகலாம்னு சொல்றாங்க, திமிங்கலம் ஏன் ஸ்லிம் ஆகலை.
புல்லு சாறு குடிச்சா கொழுப்பு குறையும்னு சொல்றாங்க, புல்லு திங்கிற ஆட்டுக்கு ஏன் இவ்வளவு கொழுப்பு இருக்குது?
அதிகாலை எழும் பழக்கம் இருந்தால் கோடீஸ்வரராகலாம்னு சொல்றாங்க. அப்புறம் ஏன் பூக்காரம்மா இன்னமும் ஏழையா இருக்குது? – இப்படி இன்னும் சில நம்பிக்கைகளை கேலி செய்யும் ஜோக்ஸ் சொல்லி சிரித்தார். இவை அரதப்பழசு, மொக்கை ஜோக் என்றாலும் பரவாயில்லைங்க. சிரிங்க. அடுத்தவர்களாஇ சிரிக்க வையுங்க.
சிரிப்பு உடல் ஆரோக்கியத்துக்குத் தேவையான எண்டோர்பின்களை அதிகரிக்கும். ரத்தவோட்டம் சீராகும். நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து மன இறுக்கம் குறையும். இத்தனை நன்மைகள் இருப்பதால் சும்மா சிரிங்க பாஸ்.