’’மோடி ஜெயிச்சாலும் பா.ஜ.க. கூட்டணி வேண்டாம்…’’

Image
  •  தில்லு எடப்பாடி

நடைபெறும் 2024 நாடாளுமன்றத் தேர்தலில் நிச்சயம் மூன்றாவது முறையாக வெற்று பெறுவோம் என்று ஆளும் பா.ஜ.க. கட்சி உறுதியாக நம்புகிறது. அப்படி வெற்றி பெற்று ஆட்சியில் அமர்ந்தவுடன் தமிழகத்தில் ஆளும் தி.மு.க.வுக்கு கொடுக்கப்படும் நெருக்கடிகளை விட எடப்பாடி பழனிசாமியின் அ.தி.மு.க.வுக்கு கடுமையான சிக்கல்கள் தரப்படும் என்றும் தலைமைப் பதவி வேறு ஒருவர் கைக்கு மாற்றப்படும் என்றும் தமிழக பா.ஜ.க. வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.

இதுகுறித்து அண்ணாமலையின் நெருங்கிய ஆதரவாளர் ஒருவரிடம் பேசினோம். ‘’கடந்த தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு பிரதமர் மோடி, அமித் ஷா ஆகியோர் எடப்பாடி பழனிசாமி மீது முழுமையாக நம்பிக்கை இழந்துவிட்டனர். ஆனாலும், எடப்பாடி பழனிசாமி தன்னை ஒரு தனிபெரும் தலைவர் என்றும் அ.தி.மு.க.வுக்கு இன்னமும் தமிழகத்தில் 35 சதவிகித வாக்குகள் இருக்கின்றன என்றும் சொல்லி வருகிறார்.

இந்த நாடாளுமன்றத் தேர்தலில் எடப்பாடி பழனிசாமியை பா.ஜ.க. கூட்டணிக்குள் கொண்டுவந்தால் நிச்சயம் 25 தொகுதிகள் ஜெயிக்க முடியும் என்று உளவுத்துறை ரிப்போர்ட் சொன்னது. ஆகவே, கடைசி நொடி வரையிலும் அவரது வருகைக்காக காத்திருந்தோம். ஆனாலும் அவர் பிடி கொடுக்கவே இல்லை. தனித்து நின்று மிகப்பெரும் தவறு செய்துவிட்டார்.

சசிகலா சிறைக்குப் போன பிறகு எடப்பாடி பழனிசாமியின் ஆட்சியைக் காப்பாற்றி நடத்திவந்தது மத்திய பா.ஜ.க. தான். அந்த நன்றியும் விசுவாசமும் அவருக்கு இல்லை. கொங்கு பகுதியில் மட்டுமே அவரது கவுண்டர் வாக்குகள் இருக்கின்றன. அந்த வாக்குகளை மட்டும் அவரால் ஜெயிக்கவே முடியாது என்பதை இந்த தேர்தல் முடிவு தெளிவாக அவருக்கு எடுத்துக் காட்டிவிடும்.

இந்த தேர்தலில் கிட்டத்தட்ட 20 தொகுதிகளில் பா.ஜ.க. கூட்டணி இரண்டாம் இடத்துக்கு வந்துவிடும் என்பதில் உறுதியாக இருக்கிறோம். ஆகவே, தேர்தல் முடிவுகள் வந்ததும் எடப்பாடி தானாகவே எங்கள் கூட்டணிக்கு வந்துவிடுவார். நாங்கள் சொல்வதைக் கேட்டு அ.தி.மு.க.வில் பன்னீர்செல்வம், டிடிவி தினகரன், சசிகலா ஆகியோரை சேர்த்து கட்சியை வலுப்படுத்துவார் என்று நம்புகிறோம். அப்படியில்லை என்றால் அமலாக்கத்துறை, சி.பி.ஐ. வழக்குகளை எடப்பாடி பழனிசாமி சந்திக்க வேண்டியிருக்கும். தலைமைப் பதவியும் காணாமல் போய்விடும். அ.தி.மு.க.வில் யாரை பொதுச்செயலாளராக்குவது என்பதை முடிவு செய்து வைத்திருக்கிறோம். அதன்படி காட்சிகள் மாறிவிடும். எங்களுக்கு மாஜி கொங்கு அமைச்சர்களும் உதவி செய்வார்கள்’’ என்றனர்.

பா.ஜ.க. கூடாரத்தில் உலவும் தகவல்கள் குறித்து எடப்பாடி பழனிசாமிக்கு நெருக்கமான தலைவர்களிடம் பேசினோம். ‘’பா.ஜ.க.வினருக்கு பூச்சாண்டி காட்டுவதே வேலையாகி விட்டது. பா.ஜ.க. கூட்டணியில் இருந்து வெளியே வருவது என்று மிகத் தெளிவாக முடிவு எடுத்து வெளியே வந்துவிட்டோம். இனிமேல் அந்த கூட்டணிக்குள் திரும்புவதற்கு வாய்ப்பே இல்லை. பிரதமராக மோடி மீண்டும் ஜெயித்து வந்தாலும் பா.ஜ.க.வுடன் கூட்டணி வேண்டாம் என்பதில் எடப்பாடி பழனிசாமி உறுதியாக இருக்கிறார். இத்தனை ஆண்டுகள் கழித்து அமலாக்கத்துறை, சி.பி.ஐ. நடவடிக்கை எடுத்தால் அதையும் சந்திக்கத் தயாராக இருக்கிறோம்.

எடப்பாடி பழனிசாமி மட்டுமின்றி கொங்கு அமைச்சர்களும் பா.ஜ.க. வேண்டாம் என்பதில் உறுதியாக இருக்கிறார்கள். இப்போதே பெரியண்ணன் பாணியில் தமிழக பா.ஜ.க. பஞ்சாயத்து செய்துவருகிறது. இது நீடிக்கும் பட்சத்தில் அடுத்து சட்டமன்றத் தேர்தலில் கூட்டணி ஆட்சி, துணை முதல்வர் என்றெல்லாம் கோரிக்கை வைப்பார்கள். இவற்றை எல்லாம் ஏற்க வேண்டிய கட்டாயத்தை உருவாக்குவார்கள். ஆகவே, பா.ஜ.க.வுடன் இனி எப்போதும் கூட்டணி இல்லை என்பதில் ரொம்பவே உறுதியாக இருக்கிறோம்.

இந்த தேர்தல் முடிவுக்குப் பிறகு அண்ணாமலையை தலைவர் பதவியில் இருந்து நிச்சயம் மாற்றிவிடுவார்கள் என்பது எங்களுக்குத் தெரியும். புதிய தலைவராக எடப்பாடி பழனிசாமிக்கு நெருக்கமான தமிழிசை செளந்தர்ராஜன் அல்லது வேலுமணிக்கு நெருக்கமான வானதி சீனிவாசனை கொண்டுவரும் திட்டத்தில் இருக்கிறார்கள். யாரைக் கொண்டுவந்தாலும் பா.ஜ.க.வுடன் கூட்டணி சேர்வதற்கு வாய்ப்பே இல்லை.

பாட்டாளி மக்கள் கட்சி ராமதாஸையும் இனி கூட்டணியில் சேர்க்கும் எண்ணம் இல்லை. அவர் ஒரு துரோகி என்பதை எடப்பாடி பழனிசாமி உணர்ந்துவிட்டார். வன்னியர் வாக்குகளை வாங்குவதற்கு தமிழக வெற்றிக் கழகம் வேல்முருகனுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. அவர் தி.மு.க. கூட்டணியில் அதிருப்தியில் தான் இருக்கிறார். அவர் வந்துவிட்டால் அ.தி.மு.க. கூட்டணி பலமாகிவிடும்.

அதே போல் கட்சியில் இருந்து ஓரங்கட்டப்பட்ட ஓ.பன்னீர்செல்வம், டிடிவி தினகரன், சசிகலா ஆகியோரையும் ஒருபோதும் கட்சியில் சேர்த்துக்கொள்ளவே மாட்டோம். எடப்பாடி பழனிசாமிக்கு தமிழகம் முழுக்கவே நல்ல பெயர் இருக்கிறது. ஜெயலலிதாவுக்குப் பிறகு வலிமையான தலைவர் என்பதை நிரூபிக்கும் வகையில் விரைவில் கட்சியின் மாவட்டச் செயலாளர்கள் சிலரை மாற்ற இருக்கிறார். மீண்டும் இளம் பெண்களை கட்சிக்குள் கொண்டுவரும் திட்டமும் இருக்கிறது. அடுத்த 2026 தேர்தலில் மீண்டும் எடப்பாடி பழனிசாமி ஆட்சிக்கு வருவார்’’ என்று உறுதியாகச் சொன்னார்கள்.

தேர்தல் முடிவுகள் வரட்டும். தமிழக ஆட்டக் களம் சூடு பிடிக்கும்.

  • சண்.சரவணகுமார்