மாறவே மாறாது டி.என்.ஏ.

தாத்தாவின் சொத்து பேரனுக்குச் சேரும் என்பது போன்று சொத்து மட்டுமின்றி நோய்களும் வழிவழியாகச் சொந்தமாகின்றன. தாத்தாவுக்கு நீரிழிவு, ரத்தக்கொதிப்பு இருந்தது. ஆனால் அப்பா, அம்மாவுக்கு நீரிழிவு, ரத்தக் கொதிப்பு இல்லை என்பதால் எனக்கும் வராது என்பது தவறான நம்பிக்கை.
ஆலமரம் போன்று குடும்பக் கிளைகளில் டி.என்.ஏ. ஒருவருக்கொருவர் நெருக்கமானவை. நாலைந்து தலைமுறை தாண்டியும் டி.என்.ஏ. பாதிப்பு தென்படுவதற்கு வாய்ப்பு அதிகம் உண்டு. எச்சரிக்கை உணர்வுடன் செயல்படுபவரால் மட்டுமே டி.என்.ஏ. நோய்களுக்கு எதிராக தடுப்பு நடவடிக்கை எடுக்க முடியும். நோய்களை ஆரம்ப கட்டத்திலே கண்டறிந்து மருந்து, மாத்திரைகள் மூலம் கட்டுப்படுத்தவும் முடியும்.
பரம்பரை நோய் தொடர்வதற்கான காரணங்களைப் புரிந்துகொள்ள வேண்டும். குடும்பத்தினர் அனைவரும் ஒரே வகை உணவுகளை எடுத்துக்கொள்கிறார்கள். ஒருவர் அதிகம் அல்லது குறைவாக சாப்பிடுகிறார் என்றாலும் உப்பு, காரம், புளி, எண்ணெய், சர்க்கரை போன்ற உணவின் அடிப்படைத்தன்மை மாறுவதில்லை. அதேபோல், அனைவரும் குடிக்கும், குளிக்கும் தண்ணீரின் தன்மை ஒன்றாக இருக்கும். வசிக்கும் வீட்டையொட்டிய சுற்றுச்சூழல் அனைவருக்கும் பொதுவானது.
ஞாயிற்றுக் கிழமை என்றால் மட்டன், விருந்தினர் வருகைக்குப் பிரியாணி, பண்டிகை தினங்களில் பலகாரங்கள் போன்ற பழக்கங்கள் அடிப்படையில் குடும்ப உறுப்பினர்கள் அனைவருக்கும் பிரிக்க முடியாத இணைப்பு உண்டாகிறது. ஆகவே, குடும்ப நோய்களில் இருந்து யாரும் தப்பவே முடியாது.
அதேநேரம் டி.என்.ஏ. நோய் சங்கிலியின் அபாயத்தைக் குறைக்க முடியும். ஆரோக்கிய உணவு முறை, சுற்றுச்சூழல் மாற்றம், லைஃப் ஸ்டைல் மாற்றம் போன்ற மேம்பாடுகளே ஆரோக்கியத்திற்கான வழி.
எதிர்கால சந்ததியினருக்கு ஆரோக்கியத்தைப் பரிசளிப்போம். அதுவே, உண்மையான சொத்து.
எஸ்.கே.முருகன், மனவள ஆலோசகர், 9840903586