கொசு ஒழிப்பதற்கு ஆகாயத் தாமரை அழிப்பு

Image

என்ன செய்தார் சைதை துரைசாமி – அத்தியாயம் 95

கொசுக்களை கட்டுப்படுத்துவதற்கு மேயர் சைதை துரைசாமி மேற்கொண்ட பல்வேறு நடவடிக்கைகளில், ஆகாயத் தாமரை அழிப்பும் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்று எனலாம்.  

பார்த்தீனியம் செடி நிலத்திற்கு கேடு விளைவிப்பது போன்று ஆகாயத் தாமரை தண்ணீருக்குக் கெடுதல் செய்கிறது. குளங்கள் மற்றும் நீர்நிலைகளை அழகுபடுத்துவதற்காக வெளிநாட்டில் இருந்து கொண்டுவரப்பட்ட இந்த செடிகள் இப்போது ஆக்டோபஸ் போன்று அனைத்து நீர்நிலைகளிலும் பரவி நிற்கின்றன.

நீர்நிலையை ஆகாயத்தாமரை ஆக்கிரமிக்கத் தொடங்கிவிட்டால், அதன் பிடியில் இருந்து காப்பாற்றுவது மிகவும் கடினம். நீருக்கு வெளியில் ஆகாயத் தாமரையின் இலைகள் தென்படுவது போன்று, வேர்கள் தண்ணீருக்குள் படர்ந்து வளர்கின்றன. இதன்  தண்டில் இருந்து தோன்றும் கிளைகள், புதிய செடியாக மாறுகின்றன. அதனால் அதிவிரைவில் இந்தத் தாவரம் நீர்நிலைகளை முழுமையாக ஆக்கிரமிப்பு செய்துவிடும்.

தண்ணீரை எளிதில் ஆவியாக்கும் தன்மையும் இந்த செடிக்கு உண்டு என்பதால் நீர்நிலை விரைவில் வறண்டுவிடும். மேலும் கொசு போன்ற ஏராளமான பூச்சியினங்கள் சொகுசாகத் தங்கி வாழ்வதற்கு ஏற்ற சூழலையும் ஆகாயத் தாமரை உருவாக்குகிறது. நீர் நிலைகளை அசுத்தமாக்குவதோடு நீர் செல்லும் வழிகளில் பரவி தடை ஏற்படுத்துகிறது. இதனால் விவசாயம், காய், கனி உற்பத்தி குறைகிறது.

ஆகாயத் தாமரைகள் ஆக்கிரமிப்பு காரணமாகத் தண்ணீரில் மீன்கள் வாழமுடியாத நிலை ஏற்படுகிறது. அதோடு ஏரிகளில் முழுமையாகப் பரவி சுற்றுலாத் தலங்களின் அழகையும் படகு சவாரி போன்ற நல்ல பொழுதுபோக்கையும் நிறுத்திவிடுகிறது. பெருநகர சென்னையிம் பெரும்பாலான நீர்நிலைகள் ஆகாயத் தாமரையின் ஆபத்தான பிடியில் இருப்பது மேயர் சைதை துரைசாமிக்குத் தெரியவந்தது.

  • நாளை பார்க்கலாம்.

Leave a Comment