போதும் என்பது மந்திரச் சொல்

Image

சொல்லிக்கிட்டே இருங்க

‘இலையில எனக்குப் பிடிச்ச பதார்த்தங்க வச்சுக்கிட்டே இருந்தாங்க.. நானும் ஆர்வத்துல அளவு தெரியாம சாப்பிட்டுட்டேன்… இப்போ நெஞ்சு வரைக்கும் நிக்குது… வயிறு திட்டுமுட்டு அடிக்குது…’

இந்த செல்போன்ல ராத்திரி நோண்டிக்கிட்டே இருந்ததுலே நேரம் போனதே தெரியலே…. ரெண்டு மணிக்குத்தான் படுத்தேன்… காலையில கண்ணைத் திறக்க முடியாம லேட்டா எழுந்ததால, செய்ய வேண்டிய வேலை எல்லாம் கெட்டுப்போயிடுச்சு…’

‘வாக்கிங் போறப்ப எதுவும் சாப்பிடக்கூடாதுன்னு நினைக்கிறேன்… ஆனா, பஜ்ஜி வாசம் அப்படியே இழுக்குது. ரெண்டு சாப்பிட்டு டீ குடிச்சுட்டு நடந்தா… சுகர் குறையவே இல்லை…’

’சனிக்கிழமை மட்டும் லைட்டா தண்ணியடிக்கிறதுன்னு ஆரம்பிச்சோம்… இப்போ ஒவ்வொரு சனிக்கிழமையும் நான் விட நினைச்சாலும் நண்பர்கள் விட மாட்டேங்கிறாங்க… செலவு தலைக்கு மேல போகுது..’

‘கடைக்குள்ள போயிட்டா, கண்ணு பார்த்த பொருளையெல்லாம் வாங்குறதை நிறுத்தவே முடியலை…’

‘யாரு கேட்டாலும், இல்லேன்னு சொல்ல வராது. இருக்கறத எடுத்து குடுக்குற‌தே பழகிப்போச்சு.. இப்போ எனக்குன்னு ஒரு கஷ்டம் வரும்போது கேக்க வாய் வரமாட்டேங்குது..’

‘பக்கத்து வீட்டுக்காரர் எங்கே போனாலும் கூடவே தொத்திக்கிறார்… நல்லவர்தான்னாலும் அவரை விரட்ட முடியலை, கூட்டிட்டும் போக முடியலை..’

இதுபோன்று நீங்களும் ஏதேனும் ஒரு விஷயத்தில் சிக்கிக்கொண்டு, வெளியே வர முடியாமல் தவிக்கிறீர்களா..? கட்டுப்படுத்த நினைத்தாலும், அதை செயலுக்குக் கொண்டுவர முடியாமல் தவிக்கிறீர்களா..?

நீங்கள் சொல்ல வேண்டியது ஒரே ஒரு மந்திரம். ஆம், ‘போதும்’ என்பதுவே அந்த மந்திரம். இந்த ஒற்றை மந்திரச் சொல் உங்களுடைய ஒட்டுமொத்த வாழ்க்கையையும் புரட்டிப் போட்டுவிடும்.

கல்யாணப் பந்தியில் அமரும்போதே, ‘போதும்… போதும்’ என்று மனசுக்குள் சொல்லிக்கொண்டே இருங்கள். வயிறு ஓரளவு நிரம்பியதுமே, ‘போதும்’ என்று உறுதியாக சொல்லி, எழுந்து வெளியேறுங்கள். இன்னும் கொஞ்சம் மட்டும் சாப்பிடலாம், இன்று மட்டும் சாப்பிடலாம் என்றெல்லாம் மனம் ஆசை தூண்டில் வீசவே செய்யும். அப்போதும், ’போதும்’  என்ற ஒற்றைச்சொல்லில் சடன் பிரேக் போடுங்கள்.

இது போதவில்லை, இன்னும் கொஞ்சம் என்று மனது உசுப்பிவிடும் போதெல்லாம், யாரையோ மகிழ்விப்பதற்காய் இழுத்துப்பிடித்து ஒன்றைச் செய்யும் போதெல்லாம், நம்மைப்பற்றிய பிம்பம் பிறரிடம் எப்போதும் அழகாய் இருக்கவேண்டுமென்ற பேராசை பேயாய் தலைதூக்கும் போதெல்லாம், ’போதும்’ என்பதுவே நம்மைக் காக்கும் மந்திரம்.

தீய பழக்கங்களுக்கு மட்டுமல்ல, நல்ல பழக்கங்களுக்கும் போதும் என்ற எல்லைக்கோடு வேண்டும். எனவே அன்பு, பாசம், இரக்கம், கோபம், காதல், காமம்,  வன்மம் எதுவாகினும் ஒரு கட்டத்தில், ‘போதும்’ என்ற நங்கூரம் போடுங்கள்.

போதும் என்பதை சொல்லப் பழகி விட்டீர்கள் என்றால், அது போதும் வாழ்க்கைக்கு.

  • சியாமளா ரமேஷ்பாபு

Leave a Comment